தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி: கோவையில் 26-ம் தேதி தொடக்கம்
பி.எஸ்.ஜி கோப்பைக்கான 60-வது அகில இந்திய கூடைப்பந்து போட்டி, கோயம்புத்தூரில் உள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி (PSG Tech) உள்விளையாட்டு அரங்கில், ஆகஸ்ட் 26 முதல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுவரை ஆண்களுக்கான போட்டிகள் மட்டும் நடைபெற்று வந்த நிலையில், 60-வது ஆண்டு போட்டியின் சிறப்பம்சமாக இந்த ஆண்டு முதல் பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பு கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் மற்றும் பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் முனைவர் ருத்ரமூர்த்தி கூறுகையில், "கோவை மாவட்டத்தில் கூடைப்பந்து விளையாட்டு தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறது. கோவையைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருவதுடன், விளையாட்டின் மூலம் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளையும் பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகி வருகிறது. இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே கூடைப்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், பி.எஸ்.ஜி. நிறுவனம் தொடர்ந்து 59 ஆண்டுகளாக இந்த போட்டிகளை நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு நடைபெறும் போட்டியில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முன்னணி அணிகள் பங்கேற்க உள்ளன." என்று கூறினார்கள். ஆண்கள் பிரிவில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாயும் சுழற்கோப்பையும், இரண்டாம் பரிசாக 75 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 40 ஆயிரம் ரூபாயும், நான்காம் பரிசாக 30 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட உள்ளது. சிறந்த வீரருக்கு 10 ஆயிரம் ரூபாய் பரிசும் வழங்கப்படுகிறது. பெண்கள் பிரிவில் முதல் பரிசாக 75 ஆயிரம் ரூபாய் மற்றும் சுழற்கோப்பையும், இரண்டாம் பரிசாக 50 ஆயிரம் ரூபாயும் கோப்பையும் வழங்கப்பட உள்ளன. மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களைப் பெறும் அணிகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும், சிறந்த வீராங்கனைக்கு 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட உள்ளது. போட்டியின் தொடக்க நிகழ்வில் பாரத ஸ்டேட் வங்கியின் கோவை மண்டல மேலாளர் காயத்ரி மற்றும் தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைக்க உள்ளனர். மொத்தத்தில் கோப்பை போட்டி மூலம் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளிலும் திறமையான கூடைப்பந்து வீரர், வீராங்கனைகளுக்கு தேசிய அளவில் தங்களது திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்க உள்ளது. கோவையில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் பி.எஸ்.ஜி. கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் இந்த ஆண்டு 60"வது ஆண்டை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில், 60-வது அகில இந்திய பி.எஸ்.ஜி கூடைப்பந்து போட்டி ஆகஸ்ட் 26 முதல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான செய்தியாளர் சந்திப்பு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இதுவரை ஆண்களுக்கு மட்டுமே நடத்தப்பட்டு வந்த இப்போட்டியில், இம்முறை முதல்முறையாக பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகளும் சேர்க்கப்பட்டுள்ளன என்பது இந்த ஆண்டின் சிறப்பம்சமாகும்.