ஒரே அகாடமி... இந்திய அணியில் 5 வீரர்கள்; உலகக் கோப்பையில் வரலாறு படைத்த தாய் - மகன்!
நெதர்லாந்தில் நடைபெற்று வரும் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி, முன்னாள் இந்திய அணி கேப்டன் பிரீதம் ராணி சிவாச்சுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது. 1998-ம் ஆண்டு இதே நெதர்லாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடிய பிரீதம், 28 ஆண்டுகளுக்குப் பிறகு தனது மகன் யஷ்தீப் சிவாச் உலகக் கோப்பையில் அறிமுகமானதை நேரில் கண்டு மகிழ்ந்துள்ளார். இதன் மூலம் உலகக் கோப்பை ஹாக்கியில் விளையாடிய முதல் தாய் - மகன் ஜோடி என்ற பெருமையையும் இருவரும் பெற்றுள்ளனர். ஒரே அகாடமியில் இருந்து 5 வீரர்கள் யஷ்தீப் சிவாச் இந்திய ஆண்கள் அணியில் டிஃபெண்டராக விளையாடி வருகிறார். அதேநேரத்தில், பிரீதம் ராணி சிவாச் மற்றும் அவரது கணவர் குல்தீப் ஆகியோர் ஹரியானாவின் சோனிபட் பகுதியில் நடத்தி வரும் ஹாக்கி அகாடமியில் இருந்து இந்திய பெண்கள் அணியில் மேலும் 4 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும் டிஃபெண்டர் ஜோதி, மிட்ஃபீல்டர்கள் நேஹா கோயல் மற்றும் ஷில்பி தபாஸ், இளம் முன்கள வீராங்கனை சாக்ஷி ராணா ஆகியோர் அந்த அகாடமியில் பயிற்சி பெற்றவர்கள். இதனால் ஒரே அகாடமியில் இருந்து 5 வீரர்கள் உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக விளையாடும் சாதனையும் உருவாகியுள்ளனர். “இது மிகப்பெரிய போட்டி. நான் முதல் உலகக் கோப்பையில் விளையாடிய அதே நாட்டில் யஷ்தீப் தற்போது விளையாடுவது மிகவும் சிறப்பான தருணம். தொழிலாளர்கள் ஒரு வீட்டை எழுப்பும்போது, அவர்கள் தொடர்ந்து கட்டிக்கொண்டே இருப்பார்கள்; அதைத்தான் நானும் செய்கிறேன். பயிற்சியளிப்பது என் ஆர்வம் சார்ந்த பணி. என் மகன் ஒரு போட்டியில் விளையாடுவதாக மட்டும் நான் இதைப் பார்க்கவில்லை; என் மகள்களும் அங்கு இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை இதில் எந்த வேறுபாடும் இல்லை.” என்று 51 வயதான பிரீதம் ராணி சிவாச் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் கூறுகிறார். மாடுகளுக்கான மேய்ச்சல் நிலத்தில் தொடங்கிய பயணம் பிரீதம் ராணி சிவாச் மற்றும் அவரது கணவர் குல்தீப் ஆகியோர் பல ஆண்டுகளாக ஹரியானா முழுவதும் திறமையான இளம் வீரர்களைத் தேடி கண்டுபிடித்து பயிற்சி அளித்து வருகின்றனர். ஒரு காலத்தில் மாடுகள் மேயும் நிலமாக இருந்த இடத்தில் உருவான இந்த அகாடமி, தற்போது இந்திய ஹாக்கி அணிக்கான திறமையான வீரர்களை உருவாக்கும் முக்கிய மையமாக மாறியுள்ளது. நேஹா கோயல், நிஷா வார்சி, ஷர்மிளா தேவி உள்ளிட்ட பல சர்வதேச வீரர்கள் இந்த அகாடமியில் இருந்து உருவாகியுள்ளனர். பெரிய அளவிலான உள்கட்டமைப்புகளை மட்டுமே நம்பாமல், தொடர்ச்சியான பயிற்சி, உபகரணங்கள் மற்றும் இளம் வீரர்களுக்கு தேவையான ஆதரவை வழங்குவதன் மூலம் பிரீதமும் குல்தீப்பும் இந்த அகாடமியை வளர்த்துள்ளனர். மகனுக்கு ஹாக்கி வேண்டாம் என்ற பிரீதம் பல வீரர்களை உருவாக்கிய பிரீதம், தனது சொந்த மகன் யஷ்தீப்புக்கு மட்டும் ஹாக்கியை முதலில் பரிந்துரைக்கவில்லை. சிறுவயதில் அவ்வப்போது தாயுடன் பயிற்சி மைதானத்துக்கு சென்றாலும், யஷ்தீப் வேறு விளையாட்டுகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரீதம் விரும்பினார். அவர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டால், தனது செல்வாக்கால் தேர்வானதாக விமர்சனங்கள் எழலாம் என்றும் பிரீதம் கவலைப்பட்டார். இதனால் யஷ்தீப் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டார். அதிலும் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் ஒரு குளிர்காலத்தில் நீச்சல் குளங்கள் மூடப்பட்டதால், நேரத்தை செலவிடுவதற்காக ஹாக்கி மட்டையை கையில் எடுத்தார். அதன்பிறகு ஹாக்கியின் மீது அவருக்கு ஆர்வம் அதிகரித்தது. யஷ்தீப்பின் தந்தை குல்தீப்பும் முன்னாள் ஹாக்கி வீரர். அவரது சகோதரி கனிகாவும் தற்போது இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். எனவே, சிறு வயது முதலே வீட்டில் ஹாக்கி தொடர்பான பேச்சுகளையும், மைதானச் சூழலையும் பார்த்து வளர்ந்தது யஷ்தீப்புக்கு விளையாட்டை வேகமாகப் புரிந்துகொள்ள உதவியது. பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்த ‘சூப்பர் அம்மா’ பிரீதம் ராணி சிவாச்சின் பயணம் வீரர்களை உருவாக்குவதுடன் மட்டும் நின்றுவிடவில்லை. பெண்கள் விளையாட்டில் முன்னேற வேண்டும் என்பதிலும் அவர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். தான் ஹாக்கி விளையாட விரும்பியபோது, தனது கிராமத்தில் இருந்தவர்கள் தன்னை தடுத்ததாகவும், திருமண அழுத்தம் காரணமாக தன்னுடன் விளையாடிய பல பெண்கள் தங்களது விளையாட்டு வாழ்க்கையை விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் பிரீதம் தெரிவித்துள்ளார். “நான் ஹாக்கி விளையாட விரும்பினேன், ஆனால் என் கிராமத்தில் இருந்தவர்கள் என்னைத் தடுக்க முயன்றனர். திருமணத்திற்காகக் கொடுக்கப்பட்ட அழுத்தத்தால், என் சக தோழிகள் தங்கள் விளையாட்டுத் தொழில் வாழ்க்கையைத் தியாகம் செய்ய வேண்டியிருந்ததை நான் பார்த்திருக்கிறேன். எனக்கும் அது ஒரு போராட்டமாகவே இருந்தது; என் குடும்பத்தினரையும் அண்டை வீட்டாரையும் எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது. ஒரு பெண் தன் தொழில் வாழ்க்கையைத் தொடரும்போதோ, விளையாட்டில் ஈடுபடும்போதோ அல்லது வேலையில் சேரும்போதோ அவள் சுதந்திரமானவளாகிறாள். அந்தச் சுதந்திரத்தைத்தான் இந்த வீராங்கனைகளுக்கும் நான் பெற்றுத் தர விரும்பினேன்." என்று பிரீதம் கூறுகிறார். சாக்ஷி ராணாவின் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு பிரீதம் மற்றும் குல்தீப் உருவாக்கிய வீராங்கனைகளில் 18 வயதான சாக்ஷி ராணாவும் ஒருவர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 6-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றபோது, சாக்ஷியும் ஒரு கோல் அடித்தார். அந்த வெற்றி, உலகக் கோப்பையில் இந்தியாவின் மிகப்பெரிய கோல் வித்தியாச வெற்றியாக அமைந்தது. சாக்ஷியின் தந்தை ஒரு பள்ளி கேன்டீனில் பணியாற்றி வந்தார். அவரது சகோதரர் ஹாக்கி விளையாட விரும்பிய நிலையில், அங்கு விளையாடிய சில மாணவிகள் சாக்ஷியையும் அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர். அங்கிருந்து ஹாக்கி மீதான ஆர்வம் சாக்ஷிக்கு உருவானது. பின்னர் பிரீதம் மற்றும் குல்தீப் அகாடமியில் சாக்ஷிக்கு பயிற்சி அளித்தனர். பிரீதம் விளையாட்டை புரிந்துகொள்ளும் திறனை வளர்த்த நிலையில், குல்தீப் ஹாக்கியின் அடிப்படை நுட்பங்களான பந்தை அடித்தல், பந்தை எடுத்துச் செல்லுதல், எதிரணி வீரர்களைத் தவிர்த்தல் உள்ளிட்டவற்றில் பயிற்சி அளித்தார். "என் வீடு அருகில் இருந்ததால், என் அப்பா என்னை அவர்களின் பயிற்சி மையத்திற்கு அழைத்துச் சென்றார். ப்ரிதம் திதியும் குல்தீப் அண்ணாவும் தான் எனக்கு முதல் ஹாக்கி மட்டையை வாங்கிக் கொடுத்தார்கள்," என்று ஆம்ஸ்டர்டாமிலிருந்து சாக்ஷி கூறுகிறார். ஒரு குடும்பம்... ஒரு அகாடமி... 5 உலகக் கோப்பை வீரர்கள் இன்று சாக்ஷி ராணா இந்திய பெண்கள் அணியின் முன்களத்தில் நம்பிக்கையுடன் விளையாடி வருகிறார். மறுபுறம், பிரீதம் ராணி சிவாச்சின் மகன் யஷ்தீப் இந்திய ஆண்கள் அணியில் டிஃபெண்டராக உலகக் கோப்பையில் அறிமுகமாகியுள்ளார். ஒரே அகாடமியில் இருந்து 5 இந்திய வீரர்கள் உலகக் கோப்பையில் விளையாடுவது, பிரீதம் - குல்தீப் தம்பதியின் பல ஆண்டுகால பயிற்சி மற்றும் அர்ப்பணிப்புக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. அதைவிட சிறப்பாக, உலகக் கோப்பையில் விளையாடிய முதல் தாய் - மகன் ஜோடி என்ற வரலாற்றையும் பிரீதம் மற்றும் யஷ்தீப் இணைந்து படைத்துள்ளனர்.

நெதர்லாந்தில் நடைபெற்று வரும் ஹாக்கி உலகக் கோப்பை தொடரில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பிரீதம் ராணி சிவாச்சின் மகன் யஷ்தீப் சிவாச் அறிமுகமாகியுள்ளார். 1998-ம் ஆண்டு அதே நெதர்லாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில் பிரீதம் விளையாடிய நிலையில், தற்போது 28 ஆண்டுகளுக்குப் பிறகு தனது மகன் விளையாடுவதை அவர் நேரில் கண்டு ரசித்துள்ளார்.
இதன் மூலம் ஹாக்கி உலகக் கோப்பை வரலாற்றில் விளையாடிய முதல் தாய்-மகன் ஜோடி என்ற பெருமையை இவர்கள் பெற்றுள்ளனர். மேலும், ஒரே அகாடமியைச் சேர்ந்த 5 வீரர்கள் இந்த உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.