'ஸ்டேடியத்திற்கு அனிமல் ப்ரூஃப்-மிமிக்ரிக்கு 25000 ரூபாய் சம்பளம்'- திரும்பிப் பார்க்க வைத்த 'ஜாபர்'
டெல்லியில் அடுத்த ஆண்டு ஜனவரி 17 முதல் தொடங்கவுள்ள உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரை எவ்வித தடங்கலும் இன்றி உலகத் தரமாக நடத்த இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், இந்திய பேட்மிண்டன் சங்கமும் கைகோர்த்துள்ளன. கடந்த முறை புறா தொல்லைகளால் எழுந்த கடுமையான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, இம்முறை வெறும் புதிய தரைத்தளமும், பெயிண்ட்டும் மட்டும் போதாது என்று முடிவு செய்து, ஸ்டேடியத்திற்குள் நுழையும் அழைக்காத விருந்தினர்களான விலங்குகளை, பறவைகளை அடியோடு விரட்ட விசித்திரமான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். ஸ்டேடியத்தின் காற்றோட்ட துவாரங்கள் அனைத்தும் முழுமையாக சீல் வைக்கப்பட்டு, பார்வையாளர்கள் கவனக்குறைவாகக் கதவுகளைத் திறந்து விடுவதைத் தடுக்க தானியங்கி இரட்டைக் கதவு வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. புறாக்கள் ஸ்டேடியத்தின் கூரைகளில் கூடு கட்டுவதைத் தடுக்க, இந்திய ரயில்வே அமைச்சகத்திடம் இருந்து ஒரு சுவாரஸ்யமான தொழில்நுட்பத்தைக் கடன் வாங்கியுள்ளனர். ரயில்வே ஒயர்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் நச்சுத்தன்மையற்ற ஒரு பிரத்யேக ஜெல் தற்போது ஸ்டேடியத்தின் குழாய்கள் மற்றும் உட்காரும் பகுதிகளில் தடவப்பட்டுள்ளது. இதுதவிர, இரவில் ஸ்டேடியத்திற்குள் பறவைகள் நுழைந்திருக்கிறதா என்று சோதிக்க, வேட்டைப் பறவைகளின் ஒலியைப் பல அலைவரிசைகளில் எழுப்பக்கூடிய அமெரிக்க காப்புரிமை பெற்ற 10 கையடக்க அதிநவீன மெஷின்களும் இரவோடு இரவாக இயக்கப்பட உள்ளன. விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்காக ஸ்டேடியத்தில் உள்ள சுமார் 80 கழிவறைகளும் முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டு பிரஷர் டெஸ்ட் செய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்த ஒட்டுமொத்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளிலும் கவனத்தை ஈர்த்தது டெல்லியைச் சேர்ந்த ஜாபர் என்ற மனிதர்தான். அவர் ஒரு பாரம்பரிய மங்கி விஸ்பரர் அதாவது குரங்குகளைக் கையாளுவதில் வல்லவர். தனது தாத்தா மற்றும் தந்தையிடம் இருந்து இந்த விசித்திரக் கலையைக் கற்றுக்கொண்ட ஜாபர், தற்போது ஸ்டேடியத்தைச் சுற்றியுள்ள குரங்குகளை விரட்டும் 4 பேர் கொண்ட குழுவில் இணைந்துள்ளார். எந்தவித ரசாயனமோ அல்லது குச்சிகளோ இன்றி, குரங்குகளின் இயற்கை எதிரியான லங்கூர் குரங்குகளின் எச்சரிக்கை ஒலியைத் தனது சொந்தக் குரலிலேயே தத்ரூபமாக எழுப்பி, அண்டவிடாமல் விரட்டுகிறார் ஜாபர். வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்படி உண்மையான லங்கூர் குரங்குகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஜாபரின் இந்தக் குரல் வித்தைக்குத் டெண்டர் முறையில் மாதத்திற்கு 25,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. "இது ஒரு நிலையான தொழில் அல்ல, என் மகனை நான் இந்த வேலைக்கு அனுப்ப மாட்டேன்" என்று அவரது தந்தை தெரிவித்துள்ளார். விஞ்ஞானிகளின் பார்வையில் இது குரங்குகளுக்கு லங்கூர் மீதுள்ள பயத்தை விட, மனிதர்களின் அதட்டல் சத்தத்திற்குப் பயந்து ஓடும் உளவியல் ரீதியான செயல்முறை என்று கூறப்பட்டாலும், ஸ்டேடியத்தை விலங்குகளிடம் இருந்து அனிமல் ப்ரூஃப் செய்ய டெல்லி நிர்வாகம் எடுத்துள்ள இந்த அதிரடி முயற்சிகள், சர்வதேச அரங்கில் இந்தியாவின் விளையாட்டுப் பெருமையைக் காக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

டெல்லியில் அடுத்த ஆண்டு ஜனவரி 17-ம் தேதி தொடங்கவுள்ள உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரை, எந்தவித இடையூறுகளுமின்றி உலகத் தரத்தில் நடத்த இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், இந்திய பேட்மிண்டன் சங்கமும் இணைந்துள்ளன. கடந்த முறை போட்டிகளின் போது பறவைகளால் ஏற்பட்ட சிக்கல்களுக்குத் தீர்வுகாண, இம்முறை சிறப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்துள்ளனர்.
இதற்காக, ஸ்டேடியத்திற்குள் நுழையும் பறவைகள் மற்றும் விலங்குகளை விரட்டுவதற்காக 'அனிமல் ப்ரூஃப்' எனும் புதிய முறையை அதிகாரிகள் கையாண்டுள்ளனர். குறிப்பாக, மிமிக்ரி கலைஞரான ஜாபர் என்பவரை இதற்காக நியமித்துள்ளதோடு, அவருக்கு 25,000 ரூபாய் ஊதியமாக வழங்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.