PulseNews
விளையாட்டு

11.34 விநாடிகள்... சிதறிய சாதனைகள்; 3 மாத வலிக்கு பின் ஓடி வந்து தங்கம் வென்ற தமிழக வீராங்கனை

பெண்கள் 100 மீட்டர் பந்தயத்தின் ஃபினிஷ் லைனைக் கடந்ததும், 19 வயதான அபிநயா ராஜராஜன் திரும்பி கிறிஸ்டியானோ ரொனால்டோ போல செய்தார். இந்தக் கொண்டாட்டம் அவர் பதிவு செய்த 11.34 விநாடிகளுக்கானது. இந்த நேரம் அவருக்குத் தங்கப் பதக்கத்தை வென்று தந்ததோடு, ஒரு புதிய தேசிய சாதனையை படைக்க உதவியது. கடந்த பிப்ரவரி மாதம் சீனாவிலுள்ள தியான்ஜின் நகரில் நடந்த ஆசிய இன்டோர் சாம்பியன்ஷிப்பில் ஏற்பட்ட முழங்கால் காயத்திற்கு பிறகு, தான் இறுதியாக மீண்டும் மீண்டு வந்துவிட்டதை இது அவருக்கு உணர்த்தியது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க லிங்கை கிளிக் செய்க பிப்ரவரியில் நடந்தது என்ன? பிப்ரவரியில் நடந்த 60 மீட்டர் பந்தயத்தில் வேகத்தைக் குறைக்க தவறியதால் தடுப்பு பேட்களில் பலமாக மோதியதே இந்த காயத்திற்கு காரணம் என அவர் கூறுகிறார். இதனால் 3 மாதங்கள் அவர் களத்திற்கு வெளியே இருக்க வேண்டியிருந்தது. தீவிர போட்டி மனப்பான்மை கொண்ட அபிநயா, தனது திறமையை மீண்டும் நிரூபிக்க ஒரு பெரிய வாய்ப்பிற்காகக் காத்திருந்தார். வேல்ட் அத்லெடிக்ஸ் கான்டினென்டல் டூர் சில்வர் போட்டி, சொந்த ஊர் மக்களின் ஆதரவு மற்றும் வரவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஆகிய அனைத்தும் அவருக்குச் சரியான வாய்ப்பாக அமைந்தன. "போட்டியின் முடிவில் நான் அழும் நிலைக்குச் சென்றுவிட்டேன், ஏனென்றால் நான் தேசிய சாதனையை (U-20) முறியடிக்கப் போகிறேன் என்று எனக்குத் தெரியும். நான் 11.40 விநாடிகளை எதிர்பார்த்தேன், ஆனால் 11.34 விநாடிகள் என்பது நம்ப முடியாத ஒன்று. நான் மனதளவில் சோர்ந்து போயிருந்தபோது எனக்கு ஆதரவளித்த எனது பயிற்சியாளர், பிசியோ மற்றும் எனது ஹீரோவான எனது அப்பாவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்" என்று அபிநயா கூறினார். இந்தக் காயம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான தனிநபர் 100 மீட்டர் பிரிவில் தகுதி பெறும் அவரது திட்டத்தைப் பாதித்தது. மாறாக, அவர் ஆறு பேர் கொண்ட தொடரோட்ட (relay) அணியில் இடம்பெற்றார். ஆனால் அந்த நான்கு பேர் கொண்ட இறுதி ரிலே அணியில் தனது இடத்தை உறுதி செய்ய, தனது திறமையை நிரூபிக்கும் ஒரு சிறந்த செயல்திறன் அவருக்குத் தேவையாக இருந்தது. "காயத்திலிருந்து மீண்டு வந்த பிறகு ஒரு நல்ல நேரத்தைப் பதிவு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மைதானத்திலிருந்த ரசிகர்கள் எனக்கு பெரும் உற்சாகமளித்தனர். ஆசிய இன்டோர் போட்டியில் காயமடைந்தபோது, என்னை ஸ்ட்ரெச்சரில் தான் வெளியே தூக்கி செல்ல வேண்டியிருந்தது. ஹீட்ஸ் சுற்றிலேயே காயமடைந்த போதிலும், வலி நிவாரணிகளை எடுத்துக்கொண்டு இறுதிப் போட்டியில் ஓட தயாராக முயன்றேன். கடைசி 10 நிமிடங்கள் வரை விட்டுக்கொடுக்கக் கூடாது என்று எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன், ஆனால் பின்னர்தான் என்னால் நடக்கவே முடியாது என்பதை உணர்ந்தேன்” என்று அபிநயா கூறினார். மீண்டு வந்த அபிநயா காயம் குணமடைந்த பிறகு அபினயா மூன்று போட்டிகளில் பங்கேற்றார். அதில் கடைசியாக திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 'இந்தியன் அத்லெடிக்ஸ் சீரிஸ் 10' போட்டியில் மட்டுமே 11.84 விநாடிகளில் இலக்கைக் கடந்து தனது உண்மையான ஃபார்மைக் கண்டறிந்தார். தேசிய சாதனையை முறியடிக்க தயாராகும் அபிநயா சனிக்கிழமையன்று கிடைத்த வெற்றி அவரது நம்பிக்கையை உயர்த்தியுள்ளது. டுட்டீ சந்தின் 11.17 விநாடிகள் கொண்ட தேசிய சாதனையை முறியடிப்பது இனி வெறும் காலத்தின் கட்டாயம் என்று அவர் நம்புகிறார். "எனக்கு இப்போதுதான் 19 வயதாகிறது, நான் தேசிய சாதனையை முறியடித்து 11 விநாடிகளுக்குக் குறைவாக ஓடுவேன் என்று நம்புகிறேன். நாட்டுக்குப் பெருமை சேர்ப்பேன்" என்றார். கேலரியில் இருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்தவர் அவரது தந்தை ராஜராஜன், இவர் குவாரி தொழிலாளர்களுக்கு டிரில்லிங் உபகரணங்களை சப்ளை செய்யும் ஒரு சிறு தொழிலதிபர் ஆவார். வெற்றி பெற்ற உடனே, அபிநயா தனது தந்தையையும் பயிற்சியாளர் சீனிவாசன் ராமையாவையும் புகைப்படத்திற்காக அருகில் அழைத்தார். அவரது தந்தை அவரது கன்னத்தில் முத்தமிட்டார். "காயத்திலிருந்து மீண்டு வரும் நிலையில், அவள் இன்று எவ்வளவு வேகமாக ஓடினாள் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. திரையில் 11.34 என்ற நேரத்தைப் பார்த்தபோது நான் அதிர்ச்சியடைந்தேன். ஆனால் நிச்சயமாக மகிழ்ச்சியடைந்தேன். காயமடைந்திருந்தபோது அவள் மிகவும் மனமுடைந்து போயிருந்தாள், ஆனால் மீண்டும் மீண்டு வந்து திறமையை அவள் நிரூபித்துவிட்டாள்” என்று ராஜராஜன் கூறினார். முழங்கால் காயத்திற்குப் பிறகும் மீண்டு வந்து வெற்றி பெற்று, அதோடு யு -20 (U-20) தேசிய சாதனையையும் படைத்துள்ள அபிநயா, கவனிக்கப்பட வேண்டிய ஒரு முன்னணி ஓட்டப்பந்தய வீராங்கனை ஆவார். தங்கம் வென்ற ரோஹித் ஆண்கள் ஈட்டி எறிதல் பிரிவில், ரோஹித் யாதவ் தனது தனிப்பட்ட சிறந்த அளவான 87.68 மீட்டரை எறிந்து தங்கம் வென்றார். இதன் மூலம் இந்த ஆண்டில் உலக அளவில் தூரத்தின் அடிப்படையில் நான்காவது இடத்திற்கு முன்னேறினார். இதற்கு முன் அவரது சிறந்த எறிதல் 87.05 மீட்டராக இருந்தது, அதுவும் ஜூன் மாதம் கலிங்கா மைதானத்தில் நடந்த இந்திய சாம்பியன்ஷிப்பின் போதுதான் பதிவானது.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
11.34 விநாடிகள்... சிதறிய சாதனைகள்; 3 மாத வலிக்கு பின் ஓடி வந்து தங்கம் வென்ற தமிழக வீராங்கனை
PulseNews சுருக்கம்

19 வயதான அபிநயா ராஜராஜன், பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை 11.34 விநாடிகளில் கடந்து புதிய தேசிய சாதனையைப் படைத்து தங்கம் வென்றுள்ளார். வெற்றிக்குப்பின் அவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பாணியில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

கடந்த பிப்ரவரி மாதம் சீனாவில் நடைபெற்ற ஆசிய இன்டோர் சாம்பியன்ஷிப் போட்டியின்போது அபிநயாவிற்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. மூன்று மாத கால கடுமையான வலி மற்றும் சிகிச்சைக்குப் பிறகு, மீண்டும் களமிறங்கி அவர் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#sports