PulseNews
விளையாட்டு

வட மாநில ஆதிக்கம்? இந்திய பெண்கள் கபடி அணியில் கண்ணகி நகர் கார்த்திகா புறக்கணிப்பு: சமூக வலைதளங்களில் வலுக்கும் எதிர்ப்பு

இந்திய பெண்கள் கபடி அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, விளையாட்டு உலகிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் புயல் வீசி வருகிறது. சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த முன்னணி வீராங்கனை கார்த்திகா அணியில் இருந்து முற்றிலுமாக விடுக்கப்பட்டது, தமிழ்நாட்டு கபடி ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கார்த்திகாவின் சாதனைகளும் புறக்கணிப்பும்: 72வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் அதிக புள்ளிகள் பெற்ற ரைடர்கள் பட்டியலில் தமிழகத்தின் கார்த்திகா முதலிடம் பிடித்தார். 2025 ஆசிய இளைஞர் கபடிப் போட்டியில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கி தங்கப் பதக்கம் வென்று தந்தவர். மாநிலக் கபடிப் பெருமைக்காகத் தனது பொதுத்தேர்வைக் கூடத் தியாகம் செய்து 13 பதக்கங்களை வென்று தந்துள்ளார். இவ்வளவு சாதனைகள் புரிந்த பிறகும், உலகக்கோப்பை மற்றும் ஆசியப் போட்டிகளுக்கான தேர்வுகளில் அவர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார். அறிவிக்கப்பட்ட இந்திய பெண்கள் கபடி அணி விவரம்: புஷ்பா ராணா, சோனாலி ஷிங்கேட், சஞ்சு தேவி, பூஜா காஜ்லா, ரித்து நேகி, ரித்து சியோரோன், ஜோதி தாக்கூர், பிங்கி ராய், மனிஷா குமாரி, பவ்னா தாக்கூர், ராஜ்ராணி மற்றும் நிகிதா குமாரி. "தமிழ்நாடு அணி சீனியர் சாம்பியன்ஷிப் வெல்லவில்லை; அதனால் தான் இந்திய அணியில் இடம் பெற முடிவதில்லை; எங்களால் கேட்டுப் பெற முடியவில்லை" - கடந்த 16 வருடங்களாகத் தமிழக கபடி சங்கம் கூறிவந்த காரணம் இதுதான். ஆனால், நிலைமை இப்போது தலைகீழ். தமிழ்நாடு அணி தொடர்ந்து 3 முறை சீனியர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. அதிக புள்ளிகள் எடுத்த வீராங்கனையாகத் தமிழகத்தைச் சேர்ந்த கார்த்திகா முதலிடத்தில் இருக்கிறார். அப்படியிருந்தும், உலகக்கோப்பைத் தொடரைத் தொடர்ந்து தற்போது ஆசிய போட்டிகளுக்கான இந்திய அணியிலும் அவர் புறக்கணிக்கப்பட்டுள்ளார். ”தேர்வு செய்யப்பட்ட 12 பேர் கொண்ட இந்திய அணியைப் பார்த்தால் வட மாநிலங்களின் ஆதிக்கம் தெரிகிறது: சீனியரில் பதக்கம் வென்ற ஹரியானா (4 பேர்), இந்தியன் ரயில்வே (4 பேர்), ஹிமாச்சல் பிரதேசம் (3 பேர்) ஆகிய மூன்று அணிகளில் இருந்து மட்டுமே 11 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்தந்த மாநிலச் சங்கங்கள் தங்களது வீராங்கனைகளுக்காகப் போராடி, பேசி இடங்களைப் பெற்றுத் தந்துள்ளன. ஆனால், அதே போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக அணியில் இருந்து அதிக புள்ளிகள் குவித்த கார்த்திகாவிற்காகக் குரல் கொடுக்கவோ, நியாயமான உரிமையைக் கேட்டுப் பெறவோ தமிழக கபடி சங்கம் முன்வரவில்லை. தேசிய அளவில் அதிக புள்ளிகள் பெறாத சோனாலி, புஷ்பா போன்ற வீராங்கனைகளும், கடந்த ஒரு வருடமாக எந்தவொரு தேசியப் போட்டியிலும் ஆடாத சஞ்சு தேவி போன்ற வீராங்கனைகளும் நேரடியாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் சப்ஸ்டிடியூட் வீராங்கனையாக மட்டுமே வலம் வரும் ரித்து சியோரோனுக்கு எந்த அடிப்படையில் இடம் தரப்பட்டது? 4வது பெடரேஷன் மற்றும் 72வது சீனியர் போட்டிகளில் கார்த்திகாவை விடக் குறைந்த புள்ளிகள் எடுத்த ராஜ்ராணிக்கு எந்த அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட்டது?” - இவை அனைத்தும் விளையாட்டு ரசிகர்களின் நியாயமான கேள்விகள். "ஒரு சிலரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு, தகுதியான ஒரு வீராங்கனையின் எதிர்காலத்தையும், தமிழ்நாடு கபடிக்குக் கிடைக்க வேண்டிய பெருமையையும் பலிகொடுத்து விட்டீர்கள். திறமையை விட மாநிலச் சங்கங்களின் லாபி தான் இந்திய அணியில் இடம் பெற முக்கிய காரணியாக இருக்கிறது என்றால், சங்கம் எதற்கு?" எனச் சமூக வலைதளங்களில் ஆதரவுக் குரல்களும், கண்டனங்களும் எழுந்துள்ளன. ரசிகர்களின் கண்ணீர் அஞ்சலி முழக்கம்: மேலும் களத்தில் வியர்வை சிந்தித் திறமையை நிரூபித்த வீராங்கனையின் உழைப்பு அதிகார அரசியலால் புதைக்கப்பட்டு விட்டதாகக் கூறி, #TN_Kabaddi மற்றும் #JusticeForKarthika ஆகிய ஹேஷ்டேக்குகளுடன் "தமிழ்நாடு கபடிக்கு கண்ணீர் அஞ்சலி" என்ற வாசகங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறையும், அகில இந்திய கபடி சம்மேளனமும் (AKFI) உடனடியாக தலையிட்டு, திறமைக்கு முன்னுரிமை அளித்து கார்த்திகாவிற்கு நியாயம் வழங்க வேண்டும் என்பதே அனைவரின் ஒரே கோரிக்கையாக உள்ளது.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
வட மாநில ஆதிக்கம்? இந்திய பெண்கள் கபடி அணியில் கண்ணகி நகர் கார்த்திகா புறக்கணிப்பு: சமூக வலைதளங்களில் வலுக்கும் எதிர்ப்பு
PulseNews சுருக்கம்

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட இந்திய பெண்கள் கபடி அணியில், சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த முன்னணி வீராங்கனை கார்த்திகா நீக்கப்பட்டது விளையாட்டு வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 72-வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் அதிக புள்ளிகள் எடுத்த ரைடர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்த கார்த்திகா, அணியில் சேர்க்கப்படாதது தமிழக ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கமே இதற்குக் காரணம் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர். திறமையான வீராங்கனை புறக்கணிக்கப்பட்டது விளையாட்டு உலகில் பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#sports