PulseNews
விளையாட்டு

இவங்க யாரும் இல்ல; சி.எஸ்.கே-வின் அடுத்த பயிற்சியாளர் இவர்தான்: சொல்லும் அஸ்வின்

சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) அணியின் தலைமப் பயிற்சியாளராக 18 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஸ்டீபன் ஃபிளமிங் பதவி விலகினார். இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீபன் ஃபிளமிங் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் சி.எஸ்.கே அணி நிர்வாகம் புதிய பயிற்சியாளரை தீவிரமாக தேடி வருகிறது. முதலில் ஹேமங் பதானி சிஎஸ்கே பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளதாக பேச்சுகள் எழுந்தன. இதேபோல், மைக் ஹசி, பிரண்டன் மெக்கல்லம், ஆடம் வோஜஸ், மோர்னே மோர்க்கல், அபினவ் முகுந்த் உள்ளிட்டோரின் பெயர்களும் அடிபட்டன. ஆனால் சி.எஸ்.கே நிர்வாகம் எந்தவித தகவலையும் இதுவரை வெளியிடவில்லை. இந்த நிலையில், ஐந்து முறை ஐ.பி.எல் சாம்பியன் பட்டத்தை வாகை சூடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங்கிற்குப் பிறகு அந்தப் பொறுப்பை ஏற்கக்கூடியவர் யார் என்பது குறித்த விவாதத்தில், இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான ஆர். அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்; அப்பொறுப்பை முன்னாள் இங்கிலாந்து வீரர் ஒருவர் ஏற்கக்கூடும் என்று அவர் கூறியுள்ளார். தனது புகழ்பெற்ற ஐ.பி.எல் வாழ்க்கையை சி.எஸ்.கே அணியில் தொடங்கி, ஓய்வு பெறுவதற்கு முன்பு தனது சொந்த அணிக்காக இறுதி சீசனில் ஆடிய அஸ்வின், ஃபிளெமிங்கிற்குப் பிறகு அப்பொறுப்பிற்கு 2019-ல் உலகக் கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் விருப்பமான தேர்வாக உருவெடுத்துள்ளார் என்று அஸ்வின் கூறினார். இது பற்றி அஸ்வின் தனது யூடியூப் சேனலில்,"ஆண்ட்ரூ ஃபிளின்டாஃப் மற்றும் பிரெண்டன் மெக்கல்லம் போன்ற பெயர்கள் அடிபடுகின்றன. ஸ்டீபன் ஃபிளெமிங்கை இங்கிலாந்துக்கு அனுப்பிவிட்டு, மெக்கல்லமை இங்கு அழைத்து வருவது நல்ல பரிமாற்றமாக இருக்கும். இப்போது, மெக்கல்லம் இங்கிலாந்தின் ஒருநாள் மற்றும் டி20 பயிற்சியாளராகவும், சி.எஸ்.கே-வின் பயிற்சியாளராகவும் பணியாற்ற, பதவிகளைப் பகிர்ந்துகொள்வதில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், இயான் மோர்கன்தான் சி.எஸ்.கே-வின் தலைமைப் பயிற்சியாளராக ஆகக்கூடிய அந்த இங்கிலாந்து வீரராக இருப்பார் என்று எனக்குத் தோன்றுகிறது. டிரேடு செயல்முறை இன்னும் செயல்பாட்டில் உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும், சி.எஸ்.கே அணிக்கு இன்னும் பயிற்சியாளர் இல்லை. இது டிரேடு ஒப்பந்தங்கள் குறித்து விவாதிப்பதை மிகவும் கடினமாக்குகிறது. கலீல் அகமது மற்றும் சிவம் துபே ஆகியோருக்காக ஹர்திக் பாண்டியா பரிமாற்றம் செய்யப்படுவது குறித்து வதந்திகள் பரவி வரும் நிலையில், புதிதாகப் பொறுப்பேற்கும் பயிற்சியாளர், கலீல் அல்லது துபேவிடமிருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொணர முடியும் என்று நினைக்கக்கூடும். இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, துபே சி.எஸ்.கே அணிக்காகவே மிருகத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது,” என்று அஸ்வின் கூறினார்.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
இவங்க யாரும் இல்ல; சி.எஸ்.கே-வின் அடுத்த பயிற்சியாளர் இவர்தான்: சொல்லும் அஸ்வின்
PulseNews சுருக்கம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக 18 ஆண்டுகளாகப் பணியாற்றிய ஸ்டீபன் ஃபிளமிங், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் சிஎஸ்கே நிர்வாகம் புதிய பயிற்சியாளரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.

ஹேமங் பதானி, மைக் ஹசி, பிரண்டன் மெக்கல்லம், ஆடம் வோஜஸ், மோர்னே மோர்க்கல் மற்றும் அபினவ் முகுந்த் ஆகியோரின் பெயர்கள் பயிற்சியாளர் பதவிக்காகப் பரிசீலிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இருப்பினும், சிஎஸ்கே-வின் அடுத்த பயிற்சியாளர் யார் என்பது குறித்து அஸ்வின் புதிய தகவலைத் தெரிவித்துள்ளார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#sports