PulseNews
விளையாட்டு

'இந்திய செஸ் வீரர்களும் ஆணவம் கொண்டவர்களே': அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் ஓபன் டாக்

உலகின் முன்னணி செஸ் வீரர்களில் ஒருவரான அமெரிக்க கிராண்ட்மாஸ்டர் ஹிகாரு நகமுரா, உயர்மட்ட செஸ் வீரர்களின் மனநிலை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். முன்னணி செஸ் வீரர்கள் அனைவருக்குமே ஒருவிதமான ஆணவம் இருப்பதாகவும், இந்திய வீரர்களும் இதற்கு விதிவிலக்கல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். “முன்னணி வீரர்கள் அனைவருக்கும் ஈகோ இருக்கும்” செஸ் விளையாட்டில் உலகின் உயர்ந்த நிலையில் இருக்கும் வீரர்கள் தங்களது திறமை மீது அதிக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். அதனால் அவர்களிடம் ஆணவம் அல்லது ஈகோ இருப்பது இயல்பான ஒன்றுதான் என அவர் கூறியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் நேரலையில் பேசிய அவர், "உண்மை என்னவென்றால், ஒவ்வொரு முன்னணி வீரரும் மிகுந்த ஆணவம் கொண்டவர்களே. மற்றவர்களை விடச் சிலர் தங்கள் உணர்ச்சிகளையும் மனவோட்டங்களையும் வெளிக்காட்டாமல் உள்ளுக்குள்ளேயே வைத்துக்கொள்வதில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள், அவ்வளவுதான். இந்த செய்தியை ஆங்கிலதத்தில் படிக்கவும் ஆனால், மற்ற வீரர்கள் மிகவும் அமைதியானவர்கள், அவர்களுக்கு ஆணவமோ அல்லது பெரிய அளவிலான அகங்காரமோ (ego) இல்லை என்று யாராவது நினைத்தால், அவர்கள் தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்கள் என்றே அர்த்தம். ஏனெனில், அவர்கள் அனைவரிடமும் அந்தப் பண்பு இருக்கிறது. நானும் அதற்கு விதிவிலக்கல்ல. எல்லோரிடமும் ஆணவம் இருக்கிறது; எல்லோரிடமும் அகங்காரம் இருக்கிறது. ஒரு மிகச்சிறந்த சதுரங்க வீரராகத் திகழ அத்தகைய குணம் அவசியமானது. அது கட்டாயம் இருக்க வேண்டும். அதுதான் எதார்த்தம். சிலர் அதை வெளிக்காட்டாமல் அடக்கி வைப்பதில் திறமையானவர்களாக இருக்கலாம், ஆனால் ஒவ்வொரு முன்னணி வீரரிடமும் அகங்காரம் இருக்கவே செய்கிறது. இந்திய வீரர்களிடமும் கூட," என்று ஹிகாரு நகமுரா கூறினார். இந்திய வீரர்களும் விதிவிலக்கல்ல இந்திய செஸ் வீரர்கள் சமீப ஆண்டுகளில் உலக அளவில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். குறிப்பாக டி. குகேஷ், ஆர். பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி உள்ளிட்ட இளம் வீரர்கள் சர்வதேச அரங்கில் தொடர்ந்து சாதித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய வீரர்களிடமும் ஈகோ இருப்பதாகவும் ஹிகாரு நகமுரா குறிப்பிட்டுள்ளார். ஆனால், அது அவர்களின் தனிப்பட்ட குணநலன்களை குறை கூறும் வகையிலானது அல்ல; உலகின் உச்ச நிலை போட்டியில் இருக்கும் வீரர்களிடம் பொதுவாக காணப்படும் மனநிலையின் ஒரு பகுதியாகவே இதை அவர் விளக்கியுள்ளார். வெற்றிக்கு பின்னால் இருக்கும் மனநிலை உலகின் முன்னணி செஸ் வீரர்களுக்கு தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என்ற அழுத்தம் இருக்கும். ஒவ்வொரு போட்டியிலும் தங்களது திறமையை நிரூபிக்க வேண்டிய சூழல் இருப்பதால், தன்னம்பிக்கை, போட்டி மனப்பான்மை மற்றும் ஈகோ ஆகியவை அவர்களின் செயல்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஹிகாரு நகமுரா தெரிவித்தார். வெஸ்லி ஈகோ கொண்டவரா? அமெரிக்க கிராண்ட்மாஸ்டர் வெஸ்லி சோ, தனது அமைதியான குணம் மற்றும் நட்பான அணுகுமுறைக்காக அறியப்பட்டு, பெரும்பாலும் ஒரு விதிவிலக்காகக் கருதப்படுகிறார். வெஸ்லி சோவைப் பற்றிக் கேட்டபோது, ​​ஹிகாரு நகமுரா நுணுக்கமான கருத்தை முன்வைத்தார். "வெஸ்லியைப் பற்றி நான் என்ன சொல்வேன் என்றால், பல ஆண்டுகளுக்கு முந்தைய வெஸ்லியைப் பார்த்தால், இப்போது இருப்பதை விட அப்போது அவரிடம் அதிகமாக இருந்தது என்று நான் சொல்லியிருப்பேன். ஏனென்றால், ஆட்டங்களில் வெற்றி பெற பெரும் அபாயங்களை எடுப்பதை விட, தனது நிதி நிலையை அதிகப்படுத்தும் ஆட்டத்தை விளையாடுவதில்தான் வெஸ்லி இப்போது பொதுவாக மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அதனால், இப்போது அது அந்த அளவுக்கு அதிகமாக இல்லாமல் இருக்கலாம்.” என்று அவர் தெரிவித்தார். வெஸ்லி சமீபத்தில் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தாவை டைபிரேக்குகளில் தோற்கடித்து தனது மூன்றாவது சின்க்ஃபீல்ட் கோப்பையை வென்றார் என்பது குறிபிடத்தக்கது. விஸ்வநாதன் ஆனந்த்-திற்கு ஈகோவே இல்லையா? சர்வதேச செஸ் அரங்கில் மற்றொரு அமைதியான ஆளுமை, ஐந்து முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் ஆவார். சென்னையைச் சேர்ந்த இவர் செஸ் பலகையின் மீது தனது நிதானத்தை அரிதாகவே இழந்து, கண்ணியத்துடன் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். ஆனால், தோல்விக்குப் பிறகு அவர் நாற்காலியை வீசியதாகக் கூறப்படும் புத்தகத்தைச் சுட்டிக்காட்டி, ஹிகாரு நகமுரா அதை "மனநோய் சார்ந்த நடத்தை" என்று அழைத்தார். “விஸ்வநாதன் ஆனந்த்-திற்கு ஈகோவே இல்லையா? என்றால், சில ஆண்டுகளுக்கு முன்பு அவரைப் பற்றி ஒரு புத்தகம் வெளியானது. அதில், அவர் ஒரு நாள் இரவு முழுவதும் தூங்காமல் இருந்ததாகவோ அல்லது நாற்காலியை வீசியெறிந்ததாகவோ ஒரு சம்பவம் குறிப்பிடப்பட்டிருந்தது. மன்னிக்கவும், ஆனால், விஸ்வநாதன் ஆனந்த் அப்படிச் செய்தார் என்பதற்காக அதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது; அது ஒருவிதமான மனப்பிறழ்வு சார்ந்த நடத்தையே. எதார்த்தத்தை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். அது அவரிடம் மிகுந்த ஆர்வமும், ஈகோவும் இருப்பதையும், அவர் எப்போதும் வெற்றிபெறவே விரும்புகிறார் என்பதையும் காட்டுகிறது. அப்படி இல்லை என்று பாவனை செய்வது நன்றாகத்தான் இருக்கும், ஆனால் உண்மை அதுவல்ல. எல்லோரும் அப்படித்தான் இருக்கிறது. மன்னிக்கவும், ஆனால் அதுதான் எதார்த்தம்,” என்றும் ஹிகாரு நகமுரா தெரிவித்தார்.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
'இந்திய செஸ் வீரர்களும் ஆணவம் கொண்டவர்களே': அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் ஓபன் டாக்
PulseNews சுருக்கம்

உலகின் முன்னணி செஸ் வீரர்களில் ஒருவரான அமெரிக்க கிராண்ட்மாஸ்டர் ஹிகாரு நகமுரா, உயர்மட்ட வீரர்களின் மனநிலை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். முன்னணி செஸ் வீரர்கள் அனைவரிடமும் ஒருவிதமான ஆணவம் அல்லது ஈகோ இருப்பது இயல்பு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனநிலைக்கு இந்திய செஸ் வீரர்களும் விதிவிலக்கல்ல என்று கூறியுள்ள அவர், விளையாட்டில் உயர்ந்த நிலையில் இருக்கும் வீரர்கள் தங்களது திறமை மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருப்பதால் இத்தகைய ஈகோ வெளிப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#sports