சிங்கப்பெண் விளையாட்டு திருவிழா. 500 மையங்கள் தரம் உயர்வு: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் விளையாட்டுத் துறைக்கான பல்வேறு முக்கிய கோரிக்கைகள் மற்றும் புதிய அறிவிப்புகளை விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் தற்போது 10 முதல் 17 இடங்களில் மட்டுமே விளையாட்டு வீரர்கள் தங்குவதற்கான விடுதிகள் உள்ளன. இந்நிலையை மாற்றி, இந்த ஆண்டிற்குள்ளாகவே 38 விளையாட்டு மாவட்டங்களிலும் விளையாட்டு மாணவர்களுக்கான புதிய தங்கும் விடுதிகள் தொடங்கப்படும். சென்னையில் புதிய பாரா ஒலிம்பிக் பயிற்சி மையம் மற்றும் விளையாட்டு மையம் அமைக்கப்படும். விளையாட்டுத் துறையில் மாற்றுத்திறனாளிகளுக்குத் தனிப்பட்ட சிறப்பு வசதிகள் செய்து தரப்படும். திறமையான மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு முறையான ஒலிம்பிக் பயிற்சிகள் வழங்கப்படும். ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை அதிகரிக்கப்படும். சென்னையில் 'ஒலிம்பிக் இல்லம்' புதிதாக அமைக்கப்படும் என்றார். தமிழகத்தில் உள்ள 500 விளையாட்டு மையங்கள் தரம் உயர்த்தப்படும். பெரம்பூர் மற்றும் வில்லிவாக்கத்தில் புதிய பல்நோக்கு விளையாட்டு மையங்கள் உருவாக்கப்படும். விளையாட்டு சங்கங்களில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், அந்தச் சங்கங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்று நடத்தும். டென்னிஸ் விளையாட்டு வளர்ச்சிக்காக ஒடிசா மாநிலம் 200 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதை சுட்டிக்காட்டிய அமைச்சர், நாமும் அனைவரும் ஒன்றிணைந்து முயற்சி செய்து ஒலிம்பிக் பதக்கங்களை வெல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார். மகளிர் விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக பெண்களுக்கான பிரத்யேக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். இதற்காக 'சிங்கப்பெண் விளையாட்டு திருவிழா' ஏற்பாடு செய்யப்படும். தமிழகத்தின் கிராமிய பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்படும் என்று விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் விளையாட்டுத் துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் 'சிங்கப்பெண்' விளையாட்டு திருவிழா நடத்தப்படும் என்றும், மாநிலம் முழுவதும் 500 விளையாட்டு மையங்கள் தரம் உயர்த்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போதுள்ள குறைவான தங்கும் விடுதி வசதிகளை மேம்படுத்தும் வகையில், இந்த ஆண்டிற்குள் அனைத்து 38 விளையாட்டு மாவட்டங்களிலும் மாணவர்களுக்கான புதிய தங்கும் விடுதிகள் அமைக்கப்படும் என அவர் அறிவித்தார்.