சைக்கிள் பழுது பார்த்து தினமும் ரூ.300 சம்பாதித்த தந்தை... மண் வீட்டில் வளர்ந்த மகள்: காமன்வெல்த் போட்டியில் வரலாறு படைத்த அஸ்மிதா தே
சைக்கிள் பழுது பார்த்து தினமும் ரூ.300 சம்பாதித்த தந்தை, மண் வீட்டில் வளர்ந்த வாழ்க்கை, இத்தகைய கடினமான சூழலில் இருந்து வந்த அஸ்மிதா தே, காமன்வெல்த் போட்டியில் ஜூடோவில் தங்கப் பதக்கம் வென்று இந்திய விளையாட்டு வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார். 2026 காமன்வெல்த் போட்டிகள் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்றன. இதில் பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவு ஜூடோ போட்டியில் கனடாவின் ஹெய்டி குவாச்சை எதிர்கொண்ட அஸ்மிதா தே, ‘கோல்டன் ஸ்கோர்’ சுற்றில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இதன்மூலம் காமன்வெல்த் போட்டியில் ஜூடோவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை படைத்தார். சைக்கிள் கடையில் தொடங்கிய கனவு திரிபுராவின் தெற்கு திரிபுரா மாவட்டம் பெலோனியாவைச் சேர்ந்தவர் அஸ்மிதா தே. மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்த இவர், சிறிய கிராமத்தில் உள்ள மண் வீட்டில் வளர்ந்தார். அவரது தந்தை அர்ஜுன் தே சைக்கிள்களை பழுது பார்த்து குடும்பத்தை நடத்தி வந்தார். ஒரு நாளைக்கு சுமார் ரூ.300 மட்டுமே வருமானமாக கிடைத்தபோதிலும், தனது மகளின் விளையாட்டு கனவுக்கு அவர் ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. “நான் திரிபுராவில் உள்ள மிகவும் சிறிய கிராமத்தைச் சேர்ந்தவள். அங்கு மக்கள் இவ்வளவு பெரிய கனவுகளை காண்பதில்லை. ஆனால், என் அப்பா எப்போதும் என்னை ஆதரித்தார்” என்று அஸ்மிதா தெரிவித்துள்ளார். ஓட்டப்பந்தயத்தில் இருந்து ஜூடோவுக்கு ஆரம்பத்தில் அஸ்மிதாவுக்கு ஜூடோவில் ஆர்வம் இல்லை. அவர் 800 மீட்டர் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட தடகளப் போட்டிகளில் பங்கேற்று வந்தார். அப்போது அவரது திறமையை கவனித்த பயிற்சியாளர் ஒருவர் ஜூடோவில் முயற்சி செய்யுமாறு அறிவுறுத்தினார். அதன்பிறகு பெலோனியா வித்யாபீத் பயிற்சி மையத்தில் பீனா தேப்நாத் வழிகாட்டுதலில் ஜூடோ பயிற்சியைத் தொடங்கினார். பின்னர் திரிபுரா விளையாட்டுப் பள்ளியில் மாணிக் லால் தேப் பயிற்சி அளித்தார். பள்ளி அளவிலான போட்டிகள் மற்றும் கேலோ இந்தியா போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம், 2018-ம் ஆண்டு போபாலில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் (SAI) பிராந்திய மையத்தில் சேரும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு பயிற்சியாளர் யஷ்பால் சோலங்கி அவரது வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தார். காயம் ஏற்பட்டபோதும் கைவிடாத தந்தை ஜூடோ பயிற்சி, போட்டிகள், பயணங்கள் என அனைத்துக்கும் அதிக செலவு தேவைப்பட்டது. ஏற்கெனவே பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வந்த குடும்பத்துக்கு இது கூடுதல் சுமையாக இருந்தது. ஒரு கட்டத்தில் அஸ்மிதாவுக்கு கடுமையான முழங்கால் காயம் ஏற்பட்டது. இதனால் அவரது விளையாட்டு வாழ்க்கையே கேள்விக்குறியானது. ஆனால், தந்தை அர்ஜுன் தே தனது மகளை டெல்லிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்ததுடன், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் மருந்துகளுக்கான செலவையும் ஏற்றுக்கொண்டார். அஸ்மிதாவின் விளையாட்டு பயணத்தில் அவரது தந்தையின் ஆதரவு மிகப்பெரிய தூணாக இருந்தது. தந்தையின் மரணம்... உடைந்து போன அஸ்மிதா 2025 டிசம்பரில் அர்ஜுன் தே மூளை பக்கவாதத்தால் உயிரிழந்தார். காமன்வெல்த் போட்டிக்கான தேர்வு போட்டியில் அஸ்மிதா தகுதி பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பாகவே அவரது தந்தை உயிரிழந்தது அவரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. தனது மிகப்பெரிய ஆதரவாளரான தந்தையை இழந்ததால், இனி ஜூடோவை தொடர வேண்டிய அவசியம் இல்லை என்று அஸ்மிதா ஒரு கட்டத்தில் நினைத்துள்ளார். “எல்லாமே முடிந்துவிட்டதாக நினைத்தேன்” என்று தங்கப் பதக்கம் வென்ற பிறகு அவர் உருக்கமாக நினைவுகூர்ந்தார். ஆனால், அவரது தாய் அவரை தொடர்ந்து ஊக்கப்படுத்தினார். கணவரின் இறுதிச் சடங்கு முடிந்த சில நாட்களிலேயே, அஸ்மிதாவை மீண்டும் பயிற்சிக்கு செல்லுமாறு அவரது தாய் வலியுறுத்தினார். “உன் அப்பா ஜூடோவை தொடர்வதை ஒருபோதும் தடுக்கவில்லை; நீயும் இப்போது அதை நிறுத்தக்கூடாது” என்று தாய் அறிவுறுத்தியுள்ளார். பயிற்சியாளர் யஷ்பால் சோலங்கியும் அஸ்மிதாவை மீண்டும் பயிற்சிக்கு அழைத்தார். இதையடுத்து அவர் போபாலில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையம் மையத்தில் மீண்டும் பயிற்சியைத் தொடங்கினார். தந்தை பார்க்க முடியாத தங்கப் பதக்கம் கிளாஸ்கோவில் இறுதிப் போட்டியில் அஸ்மிதா களமிறங்கியபோது, மண் வீட்டில் இருந்து சர்வதேச அரங்கம் வரை அவர் கடந்து வந்த பாதை மிக நீண்டது. 2022-ம் ஆண்டு ஆசிய கேடட் மற்றும் ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம், 2023-ம் ஆண்டு மக்காவ் ஜூனியர் ஆசிய கோப்பையில் தங்கப் பதக்கம், 2025-ம் ஆண்டு காசாபிளாங்கா ஆப்பிரிக்க ஓபனில் தனது முதல் சீனியர் சர்வதேச பட்டம் என அவர் படிப்படியாக முன்னேறினார். காமன்வெல்த் இறுதிப் போட்டியில் ஹெய்டி குவாச்சுடன் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இருவரும் சமநிலையில் இருந்ததால் ‘கோல்டன் ஸ்கோர்’ சுற்று நடத்தப்பட்டது. அதில் தீர்மானிக்கும் புள்ளியைப் பெற்று 2-1 என்ற கணக்கில் அஸ்மிதா வெற்றி பெற்றார். இதன்மூலம் இந்திய ஜூடோவுக்கு வரலாற்றுத் தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தார். ஆனால், பதக்கம் வென்ற அந்த மகிழ்ச்சியான தருணத்திலும் அவரது நினைவு முழுவதும் தந்தையைப் பற்றியே இருந்தது. “அப்பா இந்தப் பதக்கத்தை பார்த்திருக்க வேண்டும்” என்று அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார். அடுத்த கனவு என்ன? காமன்வெல்த் தங்கப் பதக்கம் அஸ்மிதாவின் வாழ்க்கையை மட்டுமல்ல, அவரது குடும்பத்தின் எதிர்காலத்தையும் மாற்றியுள்ளது. மண் வீட்டில் வளர்ந்த அஸ்மிதாவின் அடுத்த பெரிய கனவு, தனது குடும்பத்துக்காக ஒரு வீட்டைக் கட்ட வேண்டும் என்பதுதான். ஜூடோ தனக்கு ஒழுக்கத்தையும், பதக்கங்களையும், உலகம் முழுவதும் பயணிக்கும் வாய்ப்பையும் வழங்கியுள்ளதாக கூறும் அஸ்மிதா, தற்போது அந்த விளையாட்டு தனக்கு அளித்த வெற்றியை தனது குடும்பத்தின் வாழ்க்கையை மாற்றுவதற்குப் பயன்படுத்த விரும்புகிறார். சைக்கிள் பழுது பார்த்து தினமும் ரூ.300 சம்பாதித்த தந்தையின் எளிய வாழ்க்கையில் இருந்து, இந்தியாவின் முதல் காமன்வெல்த் ஜூடோ தங்கப் பதக்கம் வரை அஸ்மிதா தே கடந்து வந்த பாதை, வசதி இல்லாவிட்டாலும் கனவுகளுக்கு எல்லை இல்லை என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

தினமும் சைக்கிள் பழுது பார்க்கும் பணியின் மூலம் 300 ரூபாய் மட்டுமே வருமானம் ஈட்டும் தந்தையின் மகளான அஸ்மிதா தே, மிகவும் ஏழ்மையான சூழலில் மண் வீட்டில் வளர்ந்து வந்தவர். இத்தகைய கடினமான பொருளாதாரப் பின்னணியைக் கடந்தும், அவர் தனது விடாமுயற்சியால் விளையாட்டுத் துறையில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற 2026 காமன்வெல்த் போட்டிகளில், ஜூடோ பிரிவில் அஸ்மிதா தே தங்கப்பதக்கம் வென்றுள்ளார். பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவில் கனடாவின் ஹெய்டி குவாச்சை எதிர்கொண்ட அவர், ‘கோல்டன் ஸ்கோர்’ சுற்றில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.