தென்மண்டல முதல்வர்கள் மாநாடு: நீட் விலக்கு முதல் காவிரி வரை: தமிழக உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த விஜய்
சென்னை அருகே கோவளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற 31-வது தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாட்டில், தமிழகத்தின் முக்கியப் கோரிக்கைகள் மற்றும் மாநில உரிமைகளை முன்வைத்து தமிழக முதலமைச்சர் விஜய் சிறப்புரையாற்றினார். அவர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்: "கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாணவர்களைப் பெரிதும் பாதிக்கும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். மருத்துவ மாணவர் சேர்க்கையை பிளஸ் 2 (12-ஆம் வகுப்பு) மதிப்பெண்கள் அடிப்படையிலேயே நடத்த சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட வேண்டும். காவிரி நதிநீர் பங்கீட்டில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளையும் கர்நாடக அரசு உரிய காலத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும். மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை ஏற்க முடியாது. முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க அண்டை மாநிலங்கள் அனைத்தும் உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘போதைப்பொருளற்ற தமிழகம்’ என்பதோடு நின்றுவிடாமல், ‘போதைப்பொருளற்ற தென்னிந்தியா’ உருவாக வேண்டும். ஜிஎஸ்டி அறிமுகத்திற்குப் பிறகு மாநிலங்களின் சுய வருவாய் குறைந்துள்ளது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி, மனிதவள மேம்பாட்டில் சிறந்து விளங்கும் தென்மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது. சிறப்புச் சலுகையை நாங்கள் கேட்கவில்லை; நியாயமான, சமமான நிதிப் பகிர்வையே கேட்கிறோம். மக்கள் தொகையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததற்காகத் தென்மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ இடங்கள் குறையும் நிலை உருவாகக் கூடாது. கர்நாடக மாநிலம் பொம்மசந்திரா முதல் தமிழ்நாட்டின் ஓசூர் வரையிலான பெங்களூரு மெட்ரோ ரயில் திட்ட நீட்டிப்பை விரைந்து செயல்படுத்த வேண்டும். மாநில தன்னாட்சி மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதில் தமிழக அரசு எந்தவொரு சூழலிலும் சமரசம் செய்துகொள்ளாது" என முதலமைச்சர் விஜய் தனது உரையில் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.

சென்னை அருகேயுள்ள கோவளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற 31-வது தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாட்டில், தமிழக முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு மாநிலத்தின் உரிமைகள் குறித்து உரையாற்றினார். இதில், தமிழகத்தின் முக்கியமான கோரிக்கைகளை அவர் வலுவாக முன்வைத்தார்.
குறிப்பாக, நீட் தேர்வால் கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், அந்தத் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், மருத்துவ மாணவர் சேர்க்கையை பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே நடத்த வேண்டும் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.