'ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டது யாருன்னு தெரியும்': உதயநிதி பேச்சுக்கு உடனே வந்த பதிலடி
சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை தொடர்பான விவாதத்தின்போது முதல்வர் ஜோசியம் சொன்ன பிறகு தான் அந்த ஊழல் பைல்களை திறப்பாரா என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் நிர்மல் குமார் ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்ட நிகழ்வு இங்கு நடந்திருக்கிறது என்று பேசியது அவையில் சலசலப்பு ஏற்பட்டது. தமிழக சட்டசபை கூட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தொடங்கியது. அப்போது பொது மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பட்ஜெட் தொடர்பான விவாதம் முடிந்து, தற்போது மானியக் கோரிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் இன்று சட்டம், சிறப்பு செயலாக்கம் உள்ளிட்ட 4 துறைகளுக்கான மானியக் கோரிக்கை தொடர்பான விவாதம் தொடங்கியது. இதில் முதல் பேச்சாளரான எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது அவர், முதல்வர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பேசும்போது, 3 முக்கிய துறைகளின் ஊழல் பைல்கள், தனது டேபிளில் இருப்பதாக சொன்னார். அதை திறக்கும்படி வைத்துவிடாதீர்கள் என்று சொன்னார். நாங்கள் சொல்கிறேம். முதல்வர் அந்த பைல்களை விரைவில் திறந்து பார்க்க வேண்டும். தக்க ஆதாரங்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் எதற்காக இப்போது அந்த பைல்களை திறக்காமல் இருக்கிறார்? ஜோசியக்காரர்கள் சொன்னால் தான் திறப்பாரா? சினிமா மாதிரி பஞ்ச் டைலாக் பேசிவிட்டால் மட்டும் போதாது. நாங்கள் எதற்கும் பயப்படமாட்டோம். முதல்வர் விரைவில் அந்த பைல்களை திறந்து சரியான ஆதாரங்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும் என்று உதயநிதி பேசியிருந்தார். இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் நிர்மல்குமார் ஜோசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சொன்னார், ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்ட நிகழ்வுகள் எல்லாம் தமிழ்நாடு பார்த்திருக்கிறது என்று பேசியது அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும் எதை செய்தாலும் வெளிப்படையாக எந்த ஒளிவு மறைவும் இல்லாமல், செய்ய தெரியும். எப்போது எதை செய்ய வேண்டும் என்றும் தெரியும். எல்லா துறைகளிலும், சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்து வருகிறோம். சட்டவிரோமாக எது நடந்திருந்தாலும் அதற்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தான் வருகிறது, அதனால் நாங்கள் ஏற்கனவே ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்ட கதையை பார்த்துவிட்டோம் என்று நிர்மல் குமார் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தொடங்கிய தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது, முதல்வர் ஜோசியம் பார்த்த பிறகுதான் ஊழல் கோப்புகளைத் திறப்பாரா என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு அணிந்த நிகழ்வு இங்கேயே நடந்திருப்பதாகக் குறிப்பிட்டது அவையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.