அரசின் விதியை மீறி வசூல் மாதா மருத்துவ கல்லூரியில் மாணவிகளுக்கு மிரட்டல்..? சேர்மன் பீட்டருக்கு தெரியுமா?
சென்னை கோவூரில் மாதா மருத்துவ கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகின்றது. மாதா கல்வியியல் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் இந்த கல்லூரிக்கு ரியல் ஏஸ்டேட் அதிபராக இருந்து திடீர் கல்வி தந்தையாக உயர்ந்த எஸ்.பீட்டர் சேர்மனாக உள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை பூர்வீகமாக கொண்டவர் பீட்டர். இவரது மகள்களான ஜோஸ்பின் ரோஸி, ரோஸ்லின் ஆகியோர் துணை தலைவராகவும், மருமகன்களான மதன்குமார் மற்றும் ராகவ் மேலான் இயக்குனர்களாகவும் உள்ளனர். டாக்டர் ஸ்ரீதர நாராயணனை டீனாக கொண்டு செயல்படும் மாதா மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயிலும் மாணவர்களிடம் ஆண்டுக்கு 21 லட்சம் வரை கல்வி கட்டணமாக வசூலிக்கப்படும் நிலையில் , மத்திய மாநில அரசுகளின் உத்தரவை மீறி 5 ஆவது ஆண்டுக்கும் கட்டணம் செலுத்தச்சொல்லி மாணவ மாணவிகளை டார்ச்சர் செய்ய துவங்கி உள்ளதாக புகார் எழுந்தது. சிவானந்தம் என்ற மருத்துவ பேராசிரியரை வைத்து ஒவ்வொரு மாணவிகளிடமும் தனி தனியாக பேசி 5 ஆம் ஆண்டு கட்டணத்தை கட்டச்சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும், அப்படி செலுத்தவில்லை என்றால் தேர்வு எழுத அனுமதிக்க மாட்டோம் என்று மிரட்டியதாகவும் அங்குள்ள மாணவிகள் கடந்த ஜூலை மாதம் முதல் அமைச்சரின் தனி பிரிவிற்கு புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் அங்கு ஆய்வு மேற்கொண்ட எம்.ஜி.ஆர் மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் அந்த கல்லூரிக்கு அபராதம் விதித்ததோடு 5 ஆம் ஆண்டு மாணவர்கள் பயிற்சி மருத்துவராக பணி மேற்கொள்வார்கள் என்பதால் கல்வி கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் எச்சரித்திருந்தனர். இந்த நிலையில் மாதா மருத்துவ கல்லூரி நிர்வாகம் , மீண்டும் பேராசிரியர் சிவானந்தம் மூலம் மாணவிகளிடம் 5 ஆம் ஆண்டுக்காண கட்டணத்தை கேட்டு மிரட்ட தொடங்கியதாக கூறப்படுகின்றது. மொத்தம் 150 மாணவ மாணவிகள் உள்ள நிலையில் ஒவ்வொருவரிடமும் 17 லட்சம் ரூபாய் முதல் 21 லட்சம் ரூபாய் வரை கல்வி கட்டணமாக செலுத்த சொல்லி டார்ச்சர் செய்ததாகவும், பணம் கட்டாத மாணவிகளை வகுப்பறைகளுக்கு வெளியே நிற்க வைத்து தண்டனை கொடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட மாணவியர்களின் பெற்றோர்கள் முதல் அமைச்சரின் தனி பிரிவில் மீண்டும் புகார் அளித்தனர். இதையடுத்து மீண்டும் எம்.ஜி.ஆர் மருத்துவ கவுன்சிலில் இருந்து ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளிடம் 20 மாணவ மாணவிகள் பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் தங்களிடம் மாதா கல்லூரி நிர்வாகம் 5 ஆம் ஆண்டுக்காண கட்டணம் கேட்டு நிர்பந்தித்ததாகவும், பேராசிரியர்களை விட்டு மன உளைச்சல் ஏற்படும் அளவுக்கு கடுமையாக மிரட்டியதாகவும் குறிப்பிட்டு உள்ளனர். மருத்துவ கவுன்சிலில் இருந்து அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் தகவல் முன் கூட்டியே கிடைக்க பெற்றதால், மாதா கல்லூரி நிர்வாகம் மாணவ மாணவிகளிடம் அன்பாக பேசுவது போல நடித்து கெஞ்சி கூத்தாடியதாகவும், அதனையும் மீறி பாதிப்புக்குள்ளான மாணவ மாணவிகள் இந்த கடிதத்தை எழுதிக்கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது . அதே நேரம் இது குறித்து விளக்கம் அளித்த அந்த கல்லூரியின் பேராசிரியர் சிவானந்தம் தங்கள் கல்லூரியில் நான்கரை ஆண்டுகளுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகின்றது என்றும் 5 ஆம் ஆண்டு மாணவர்களிடம் கட்டணம் கேட்கப்படவில்லை என்றும் மறுப்பு தெரிவித்தார். விதியை மீறி கட்டணம் வசூலித்த புகாரில் அபராதம் விதிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள்,மீண்டும் மாணவர்களை மிரட்டியதாக புகாரில் சிக்கி உள்ள மாதா மருத்துவ கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

சென்னை கோவூரில் இயங்கி வரும் மாதா மருத்துவக் கல்லூரி, மாதா கல்வியியல் அறக்கட்டளையின் கீழ் செயல்படுகிறது. ரியல் எஸ்டேட் அதிபரான எஸ்.பீட்டர் இந்த கல்லூரியின் சேர்மனாக உள்ளார், இவரது குடும்ப உறுப்பினர்கள் துணைத் தலைவர்களாகவும், மேலாண் இயக்குனர்களாகவும் பொறுப்பு வகிக்கின்றனர்.
இந்த மருத்துவக் கல்லூரியின் டீனாக ஸ்ரீதர நாராயணன் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அரசின் விதிகளை மீறி மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதாகவும், மாணவிகளுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இது குறித்து சேர்மன் பீட்டருக்குத் தெரியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.