அனுபவம் இல்லாத த.வெ.க; ஆட்சியைக் கைபற்ற ஆளுமைத் திறமை வேண்டும்: அ.தி.மு.க நிர்வாகி வேலுச்சாமி
கோவை புதூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அ.தி.மு.க. தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கோவை புறநகர் மாவட்ட செயலாளர் செ.ம. வேலுச்சாமி, தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய செ.ம. வேலுச்சாமி, கொங்கு மண்டலத்தை அ.தி.மு.க.வின் எஃகு கோட்டையான வைத்திருந்து பணியாற்றியவர் எஸ்.பி. வேலுமணி என்றும் கொங்கு மண்டலத்தின் ஒரே வெற்றி வீரர் அன்பு சகோதரர் எஸ்.பி. வேலுமணி என்றும் புகழ்ந்தார். தற்போது உள்ள ஆளும் கட்சி கூட நமது அ.தி.மு.க.வின் திட்டங்களை தான் பட்ஜெட்டில் அறிவிக்கிறார்கள் என்றார். நீட் தேர்வு எதிர்ப்பு குறித்து நாடே ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டம் நடைபெற்றது என்பதை குறிப்பிட்ட அவர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் அமைச்சராக இருக்கின்ற பொழுது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் முதலமைச்சராக இருந்தபோது நீட்டுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தார் என்றும் 7.5% சதவிகிதம் இட ஒதுக்கீடும் கொண்டுவரப்பட்டது என்று தெரிவித்தார். நான் மேயராக இருக்குபோது கோவையை சிங்கப்பூர் போன்று கொண்டுவர வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்ததாகவும் அதனை செய்து காட்டியவர் எஸ்.பி. வேலுமணி என்றும் கூறினார். எனக்கு எந்த விருப்பு வெறுப்பும் இல்லை என்னை திட்டினாலும் நான் அதை பொருட்படுத்த மாட்டேன் என் தவறுகளை சுட்டி காட்டினாலும் நான் அதனை ஏற்றுக் கொள்வேன் என்று கூறிய அவர் எனக்கும் வேலுமணிக்கும் உள்ள உறவு யாருக்கும் அரசியல் வரலாற்றிலேயே கிடையாது என்றும் தெரிவித்தார். குடும்ப உறவுகள் போன்று இருந்து வருவதாகவும் அந்த உறவுகளை நான் ஒருபோதும் விட்டது கிடையாது என்றும் கூறினார். தி.மு.க கூட்டணி வைத்து 20 ஆண்டு காலம் இருந்து வந்ததாகவும் தற்போது கூட்டணி எல்லாம் போய் அனாதை போன்று நிற்பதாகவும் தமிழக வெற்றி கழகம் கட்சியை எடுத்துக் கொண்டால் அந்த கட்சிக்கு வாக்களித்தவர்களும் அந்த கட்சிக்காக உழைத்தவர்களும் திருதிருவென்று முழித்துக் கொண்டிருக்கிறார்கள், ஏன் இவர்களை ஜெயிக்க வைத்தோம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்தார். வெற்றி பெற்றது முக்கியம் இல்லை என்றும் ஆளுமை திறமை வேண்டும் என்றும் சுட்டிக்காட்டிய அவர் அனுபவம் உள்ளவர்கள் தான் கட்சிக்கு வேண்டும் என்றும் எடுத்துக் கூறுவதற்கும் ஆளில்லை அதனை கேட்பதற்கும் ஆளில்லை என்ற அளவிற்கு தான் தமிழக வெற்றி கழகம் கட்சி உள்ளது என்று தெரிவித்தார். வரக்கூடிய தேர்தல்களில் நூற்றுக்கு நூறு வெற்றி பெறக்கூடிய கட்சியாக அ.தி.மு.க. உள்ளது என்றும் ஏதாவது ஒரு கட்சியை தனித்து போட்டியிட சொன்னால் அவர்கள் டெபாசிட் கூட வாங்க மாட்டார்கள் என்று தெரிவித்தார். என்னிடம் எஸ்.பி. வேலுமணி பேசும் போது கூட மாவட்டத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை, பிரச்சனை வேறு இடத்தில் தான் உள்ளது என்று கூறினார் என்றார். இங்கு அனைவரும் ஒற்றுமையாக தான் இருக்கிறோம் என்றும் தயவு செய்து சமூக வலைத்தளங்களில் நம்மைப் பற்றி எந்த ஒரு விமர்சனங்களையும் முன்வைக்க வேண்டாம் தி.மு.க மற்றும் தமிழக வெற்றி கழகத்தை தான் நாம் அட்டாக் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். கட்சி தலைமையில் சில விஷயங்கள் நம் கையை மீறி நடைபெறுகிறது என்றும் அதற்காக என்னை ஆதங்கப்படுவதில் எந்த ஒரு அர்த்தமும் இல்லை என்று கூறினார். எனக்கு எப்போதும் நல்லது சொல்லி தான் பழக்கம் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்து விட்டது என்பதற்காக சதி செய்யலாம், எடுக்கலாம் என்ற எண்ணம் எனக்கு கிடையாது என்று கூறினார். எங்களுக்குள் நீங்கள் எந்த ஒரு குழப்பத்தையும் ஏற்படுத்தி விட வேண்டாம் என்றும் நாங்கள் அனைவரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம் என்று தெரிவித்தார். மேலும், புதிதாக வந்தவர்களை நாம் வரவேற்க வேண்டும் என்றும் அவர்களுக்காண ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார். மேலும், 14ஆம் தேதி விவசாயிகள் கடனை தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியதைப் போல தள்ளுபடி செய்யாததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக கூறிய அவர் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் இரண்டு முறை விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்றும் தெரிவித்தார். 2010 ஆம் ஆண்டு கோவையில் செம்மொழி மாநாடு நடைபெற்ற பொழுது அப்பொழுது எதிர்க்கட்சியாக இருந்து நாம் செய்த போராட்டம் தான் ஆட்சி மாற்றத்திற்கு காரணமாக அமைந்தது என்றும் குறிப்பிட்டார். மேலும் எங்களுக்குள் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக தான் இருக்கிறோம் என்றும் தொண்டர்கள் நிர்வாகிகள் நீங்களும் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். செய்தி: பி.ரஹ்மான் - கோவை

கோவை புதூர் பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க. தொண்டாமுத்தூர் தொகுதி செயல் வீரர்கள் கூட்டத்தில், மாவட்ட செயலாளர் செ.ம. வேலுச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய செ.ம. வேலுச்சாமி, தமிழக வெற்றி கழகத்திற்கு அனுபவம் இல்லை என்றும், ஆட்சியைப் பிடிக்க ஆளுமைத் திறமை அவசியம் என்றும் விமர்சித்தார். அனுபவம் இல்லாத அந்த கட்சிக்காக உழைத்தவர்கள் இன்று ஏமாற்றமடைந்துள்ளனர் என்றும், மற்ற கட்சிகள் தனித்துப் போட்டியிட்டால் டெபாசிட் கூட பெற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் பேசிய வேலுச்சாமி, தனக்கும் எஸ்.பி. வேலுமணிக்கும் இடையே குடும்ப உறவைப் போன்ற பிணைப்பு இருப்பதாகவும், சமூக வலைதளங்களில் தேவையில்லாத விமர்சனங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டார். தி.மு.க. மற்றும் தமிழக வெற்றி கழகத்தையே அனைவரும் எதிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்திய அவர், வரவிருக்கும் தேர்தல்களில் அ.தி.மு.க. நூறு சதவீதம் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், தேர்தல் வாக்குறுதிபடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படாததைக் கண்டித்து வரும் 14-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அவர் அறிவித்தார்.