PulseNews
அரசியல்

கூட்டணி கணக்கில் புதிய திருப்பம்...? காங்கிரசுடன் மீண்டும் கைகோர்க்கிறாரா ஜி.கே.வாசன்...!

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்த மக்கள், த.வெ.க.வுக்கு வாய்ப்பு வழங்கியுள்ள நிலையில், புதிய அரசு பொறுப்பேற்று 100 நாட்களை கடந்துள்ளது. இந்த குறுகிய காலத்திலேயே ஆட்சியின் செயல்பாடுகளில் சில மாற்றங்களை பார்க்க முடிவதாகவும், குறிப்பாக ஊழல் குறைந்திருப்பதை உணர முடிவதாகவும் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் நடைபெற்ற த.மா.கா. மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜி.கே.வாசன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழக அரசியல் நிலவரம், கூட்டணி சூழல், த.வெ.க. ஆட்சி மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அவர் விரிவாக பேசினார். தமிழக அரசியல் களம் நீண்ட காலமாக தி.மு.க., அ.தி.மு.க. என்ற இரு துருவங்களை சுற்றியே இருந்து வந்தது. தற்போது அந்த நிலை மாறி, சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய அரசியல் மாற்றத்தை மக்கள் விரும்பியுள்ளனர். திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக புதிய கட்சிக்கு மக்கள் வாய்ப்பு வழங்கியிருப்பது, அவர்களின் மாற்றத்திற்கான எதிர்பார்ப்பை வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில், கூட்டணி கட்சிகளுக்கும் அரசியலில் முக்கியத்துவம் தொடர்ந்து இருக்கும். வரும் தேர்தல்களிலும் பெரும்பாலான கட்சிகள் கூட்டணி அமைத்தே தேர்தலை சந்திக்கும். இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகே, மக்கள் எந்த மனநிலையில் உள்ளனர் என்பதை ஓரளவுக்கு தெளிவாக அறிய முடியும். தேர்தலில் வாக்களித்த மக்களின் மனநிலை தொடர்ந்து அதே நிலையில் இருக்கும் என்று கூற முடியாது.த.மா.கா.வை பொறுத்தவரை கட்சியை மேலும் வலுப்படுத்தும் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். கட்சி செயல்பாடுகள் குறைவாக உள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி, நிர்வாக கட்டமைப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை அடையாளம் கண்டு, கூட்டணியில் உரிய இடங்களைப் பெறுவதுடன், கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி உள்ளாட்சியில் சிறப்பான நிர்வாகத்தை வழங்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களையும் புரிந்து கொண்டு, வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டால்தான் மக்களின் எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்க முடியும்.தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, கூட்டணி மற்றும் தேர்தல் நிலைப்பாடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். த.வெ.க. அரசு பொறுப்பேற்று தற்போது 100 நாட்கள்தான் கடந்துள்ளன. வரும் காலங்களில் இந்த அரசு மேலும் நல்ல பல திட்டங்களை செயல்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது.அதேபோல், தற்போதைய ஆட்சியில் ஊழல் குறைந்திருப்பதை பார்க்க முடிகிறது. இது ஒரு நல்ல மாற்றமாக உள்ளது என ஜி.கே.வாசன் தெரிவித்தார். மின்கட்டணம், தனியார் பேருந்து கட்டணம், வரி உயர்வு உள்ளிட்டவற்றால் பொதுமக்கள் சந்திக்கும் பொருளாதார சுமைகளையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். மக்கள் மீது கூடுதல் சுமை ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மேகதாது அணை விவகாரம் மற்றும் தொகுதி மறுவரையறை போன்ற தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளில் த.மா.கா. தொடர்ந்து தமிழக அரசுக்கு துணை நிற்கும்.காவிரி நீர் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுகளையும் காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பையும் கர்நாடக அரசு மதித்து தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிட வேண்டும். தமிழகத்திற்கு தண்ணீர் கிடைப்பது நமது உரிமை; அதை வழங்க வேண்டியது கர்நாடகத்தின் கடமை. இந்த முக்கிய பிரச்சினையில் அனைத்து கட்சிகளும் அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும். தேவைப்படும் நேரத்தில் தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி, தமிழகத்தின் உரிமைக்காக ஒருமித்த முடிவை எடுக்கும் என நம்புகிறோம்.இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

Seithipunal15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
கூட்டணி கணக்கில் புதிய திருப்பம்...? காங்கிரசுடன் மீண்டும் கைகோர்க்கிறாரா ஜி.கே.வாசன்...!
PulseNews சுருக்கம்

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் கடந்துள்ள நிலையில், தற்போதைய ஆட்சி செயல்பாடுகளில் மாற்றங்கள் தெரிவதாகவும், குறிப்பாக ஊழல் குறைந்திருப்பதாகவும் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கருத்து தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து இவ்வாறு கூறினார்.

தற்போது தமிழக அரசியல் சூழலில் கூட்டணி குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், ஜி.கே.வாசன் மீண்டும் காங்கிரசுடன் இணைய வாய்ப்புள்ளதா என்பது குறித்து அரசியல் களத்தில் எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன. கிருஷ்ணகிரி நிகழ்வுக்குப் பிறகு, இது தொடர்பான புதிய திருப்பங்கள் குறித்து அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

மூலம்: SeithipunalSeithipunal-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics