'கார் இல்லை...வேட்புமனுவில் ரூ.10 ஆயிரம்தான் இருப்பதாகவும் சொல்வீர்கள்'...! - உதயநிதியை விமர்சித்த ஆதவ் அர்ஜுனா
“தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீதி, சிறை, சட்டம், எரிசக்தி, அறநிலையத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கும் திட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் பரபரப்பான விவாதம் நடைபெற்றது. தமிழக அரசு கடன் சுமையில் இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அரசின் கூடுதல் செலவுகளை தவிர்க்கும் வகையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முக்கிய முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்தார். சட்டப்பேரவையில் அவர் பேசுகையில், “அரசு சார்பில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட உள்ள காரை திமுகவை சேர்ந்த 59 உறுப்பினர்களும் பெற்றுக்கொள்ள மாட்டோம். முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து உறுப்பினர்களும் கையெழுத்திட்ட கோப்பையும் சமர்ப்பித்துள்ளோம்.அரசின் தேவையற்ற செலவுகளை குறைக்க வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே கார் வழங்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலினின் அறிவிப்புக்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அரசு கார் வழங்கும் முடிவு அனைவருக்கும் கட்டாயமாக வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் எடுக்கப்படவில்லை என்று விளக்கமளித்தார்.“பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் கோரிக்கையை ஏற்றுத்தான் முதலமைச்சர் கார் வழங்குவது குறித்து அறிவித்தார். உறுப்பினர்களின் தேவையை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டது.எதிர்க்கட்சித் தலைவருக்கு மூன்று வீடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் ஏன் அரசு பங்களாவில் வசிக்கிறார்? ஒருவரிடம் சொந்த வீடு இருப்பதால் அவருக்கு அரசு வசதி வழங்கக்கூடாது என்று கூற முடியுமா? வீடும் காரும் இல்லாமல் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த உறுப்பினர்களில் சிலரிடமும் கார் இல்லை. எனவே, தேவையுள்ள உறுப்பினர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கார் வைத்திருக்கும் த.வெ.க. உறுப்பினர்கள் அரசு கார் கேட்டு விண்ணப்பிக்க மாட்டார்கள்” என்று அமைச்சர் தெரிவித்தார். அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, திமுக உறுப்பினர்கள் அரசு காரை மறுப்பதன் பின்னணியை விளக்கினார்.“எங்களுக்கு கார் வேண்டாம் என்றுதான் கூறுகிறோம். அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படக்கூடாது என்பதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளோம். எங்களுடைய வேட்புமனுவை குறிப்பிட்டு பேசினால், வேண்டுமானால் வழக்கு தொடருங்கள்.அமைச்சர் சொந்த வீட்டில் வசித்தாலும், அந்த வீட்டுக்கு அரசு வாடகை செலுத்துகிறது. அரசு செலவில் வீடு வேண்டாம் என்று அவரும் எழுதிக் கொடுக்கட்டும்” என்று கே.என்.நேரு தெரிவித்தார்.இந்த விவகாரம் குறித்து பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார் கூறுகையில், தங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு அரசு கார் தேவைப்படுவதாக தெரிவித்தார்.“பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் என்னிடம் ஏற்கனவே கார் உள்ளது. எனவே, யாருக்கு உண்மையில் கார் தேவைப்படுகிறதோ, அவர்களுக்கு மட்டும் அரசு சார்பில் கார் வழங்கலாம் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு” என்று அவர் கூறினார்.சிபிஐ சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரன் கூறுகையில், சில உறுப்பினர்கள் கார் கேட்டு கோரிக்கை வைத்திருப்பதாக தெரிவித்தார்.“சில சட்டமன்ற உறுப்பினர்கள் கார் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களுக்கு முதல்-அமைச்சர் கார் வழங்குவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், எங்களைப் பொறுத்தவரை அரசு கார் தேவையில்லை என்பதே நிலைப்பாடு” என்று அவர் தெரிவித்தார்.இதனிடையே, உதயநிதி ஸ்டாலினின் அறிவிப்புக்கு அமைச்சர் ஷாஜகான் பதிலளித்தார். “சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு கார் வழங்குவது தற்போது மட்டும் பேசப்படும் விவகாரம் அல்ல. பல ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, 300-க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றியத் தலைவர்களுக்கு கார் வழங்கினார். அப்போது இருந்த நிதிநிலையும் இதேபோன்றுதான் இருந்தது. அப்போது கேள்வி எழுப்பாமல், தற்போது மட்டும் அரசு கார் வழங்குவது குறித்து கேள்வி எழுப்புவது ஏன்?” என்று அமைச்சர் ஷாஜகான் கேள்வி எழுப்பினார்.அரசு கார் வழங்கும் திட்டத்தை ஆதரிப்பவர்கள் ஒருபுறமும், தேவையில்லாத செலவுகளை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்துபவர்கள் மறுபுறமும் கருத்துகளை முன்வைத்ததால், சட்டப்பேரவையில் இந்த விவகாரம் கவனம் பெற்றது.

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்கும் திட்டம் குறித்து அவையில் நடைபெற்ற விவாதத்தின் போது, அரசின் கடன் சுமையைச் சுட்டிக்காட்டி உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்தார். அரசின் கூடுதல் செலவுகளைத் தவிர்க்க திமுக உறுப்பினர்கள் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஆதவ் அர்ஜுனா, உதயநிதியை விமர்சித்துள்ளார். கார் வேண்டாம் என்று கூறுவது போல், வேட்புமனுவில் தன்னிடம் 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருப்பதாகக் கூறுவீர்கள் என்று அவர் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.