“இன்றைக்கு நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது” - தங்கம் தென்னரசு பேட்டி!
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பரந்தூர் விமான நிலைய திட்ட விவகாரம் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து திமுக உறுப்பினர்கள் இன்று (24.08.2026) அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து தங்கம் தென்னரசு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “திமுகவின் கொறடா எ.வ. வேலு, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கே.என். நேரு ஆகியோர் வலியுறுத்திய பிறகும், ‘அதை இன்று எடுத்துக்கொள்கிறோம், நாளை எடுத்துக்கொள்கிறோம்’ என்று ஒவ்வொரு நாளும் தள்ளிப்போய், இறுதியாக திங்கள்கிழமை உங்களுடைய கவன ஈர்ப்பை சிறப்பு கவன ஈர்ப்பாக எடுத்துக்கொள்கிறோம் என்று அவர்கள் எங்களிடத்தில் தெரிவித்திருந்தார்கள். எனவே, சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மூலமாக திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமல்ல, அனைத்து எதிர்க்கட்சிகளுமே பரந்தூர் விமான நிலையம் குறித்து, அதன் அவசியம், தேவைகள், தமிழ்நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சி குறித்து, விமானப் போக்குவரத்தில் மற்ற மாநிலங்களோடு, அண்டை மாநிலங்களோடு நாம் எவ்வாறு பின்தங்கி இருக்கிறோம் என்பதை எல்லாம் அரசின் கவனத்துக்குக் கொண்டு வருவதற்கு இந்த வாய்ப்பு தேவை என்பதை வலியுறுத்தி இந்தக் கவன ஈர்ப்பில் உரையாற்றுவதற்காக இருந்தோம். ஆனால், அவை கூடியவுடன் முதலமைச்சர் விஜய் 110-வது விதியின் கீழ் பரந்தூர் விமான நிலையம் குறித்த ஓர் அறிவிப்பினை வெளியிட்டார். அதற்கு மேலே விதியின்படி அதில் பேசுவதற்கு ஏதுமில்லை என்று எதிர்க்கட்சிகளுடைய குரலை, கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மூலமாக இந்த மிக முக்கியமான பிரச்சினையில் இருக்கக்கூடிய நியாயங்களை, நாம் எதிர்கொள்ளக்கூடிய சவால்களை, நாம் எதிர்கொள்ளக்கூடிய பொருளாதாரத் தேக்க நிலையை, இந்த விமான நிலையம் வரவில்லை என்றால் எத்தகைய சூழ்நிலை உருவாகும் என்பதை எதிர்க்கட்சிகள் சொல்வதற்கான வாய்ப்பினை முற்றிலுமாக மறுத்து, நிராகரித்து, அந்த வாய்ப்பை கொடுக்க முடியாத அளவில் அவர்கள் திட்டமிட்டே விதி எண் 110இல் ஓர் அறிக்கையைப் படித்து, அதற்கு மேலே விவாதம் இல்லை என்று சபாநாயகர் இன்றைக்கு தெரிவித்துள்ளார். ஜனநாயக ரீதியில் எதிர்க்கட்சியினுடைய குரல்வளையை நெருக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை இன்றைக்கு பேரவைத் தலைவர் உருவாக்கியிருக்கிறார். மீண்டும் எழுந்து, ‘நாங்கள் 110-ல் அந்த விதியின் கீழ் இந்த விவாதத்தை வைக்க விரும்பவில்லை. ஆனால், ஏற்கனவே நாங்கள் 55-வது விதியின் கீழ் இந்தக் கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கிறோம். சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானமாக அதை எடுத்துக்கொள்கிறேன் என்று பலமுறை நீங்கள் உறுதி அளித்ததற்குப் பிறகும், இன்றைக்கு இப்படி 110-ன் கீழ் படித்து, இதன் மீது விவாதத்தை நீங்கள் திட்டமிட்டுத் தவிர்த்திருக்கிறீர்கள். எனவே, எங்களுக்கு விதி எண் 55-ன் கீழ் கவன ஈர்ப்பில் இதை நீங்கள் வழங்க வேண்டும்’ என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், கொறடாவும் அதை வலியுறுத்தினார்கள். அதை வலியுறுத்தித் தொடர்ந்து வலியுறுத்தியும் இந்த அரசு செவிசாய்க்காத காரணத்தால், எதிர்க்கட்சிகளுடைய அடிப்படை ஜனநாயக உரிமையை மறுத்து, அவர்கள் குரல்வளையை நெரித்து கருத்துகளைப் பேசுவதற்கு இடம் தராத இந்த அவைத் தலைவர் நடவடிக்கையைக் கண்டித்து, நாங்கள் இன்றைக்கு முழுமையாக வெளிநடப்பு செய்து வந்திருக்கிறோம். வெளிநடப்பு செய்தாலும் கூட, இதில் இருக்கக்கூடிய உண்மை நிலைமைகளை தெரிவிப்பது எங்களுடைய கடமை என்று கருதுகிறோம். நம் எல்லாருக்கும் தெரியும், விமான நிலையம் என்பது எவ்வளவு பெரிய முக்கியமான ஒன்று என்று. குறிப்பாக, தமிழ்நாட்டிற்கு, சென்னையில் அமையக்கூடிய இந்த விமான நிலையம் என்பது தமிழ்நாட்டினுடைய பொருளாதாரச் சூழ்நிலைக்கு எவ்வளவு அத்தியாவசியமான ஒன்று, இன்றியமையாத ஒன்று, பொருளாதார வளர்ச்சிக்கும், தொழில் வளர்ச்சிக்கும் மிக முக்கியமான தேவையாக விமான நிலையம் அமைந்திருக்கிறது என்பதை நாம் நன்றாக அறிவோம். அந்த அடிப்படையில்தான், நாடு சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு சென்னையில் அமைந்திருக்கக்கூடிய இந்த விமான நிலையம் ஒரு காலத்தில் சிறப்பான ஒரு விமான நிலையமாக இருந்தது. இந்தியாவில் இருக்கக்கூடிய எல்லா விமான நிலையங்களுடன் ஒப்பிடுகையில், ஒரு காலத்தில், 2008-ல் சென்னை விமான நிலையம் மூன்றாவது இடத்தில் இருந்தது. கோப்புப்படம் அப்போது கர்நாடக மாநிலத்தில் அருகே இருக்கக்கூடிய பெங்களூரு விமான நிலையம், விமானங்களுடைய பயணிகளுடைய போக்குவரத்தில் ஐந்தாவது இடத்தில் இருந்தது. நாம் அப்போது மூன்றாவது இடத்தில் இருந்தோம். ஆனால், இன்றைக்கு நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. ஏறத்தாழ நாலரை கோடி பயணிகளுடைய எண்ணிக்கையின் அடிப்படையில் பெங்களூரு இன்றைக்கு மூன்றாவது இடத்துக்கு வந்துவிட்டது. வெறும் 2.3 கோடி, அதாவது 2 கோடியே 30 லட்சம் பயணிகளைக் கொண்டு நம்முடைய சென்னை விமான நிலையம் இன்றைக்கு ஐந்தாம் இடத்துக்குப் பின்தங்கி வந்திருக்கிறது” எனத் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தில் பரந்தூர் விமான நிலையத் திட்டம் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திமுக உறுப்பினர்கள் இன்று (24.08.2026) வெளிநடப்பு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தங்கம் தென்னரசு, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கே.என்.நேரு மற்றும் திமுக கொறடா எ.வ.வேலு ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தியும், அரசு அவற்றை ஒவ்வொரு நாளும் தள்ளிப்போட்டு வருவதாகக் குறிப்பிட்டார். தற்போதைய நிலைமை தலைகீழாக மாறியிருப்பதாகத் தெரிவித்த அவர், கவன ஈர்ப்புத் தீர்மானம் தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என விமர்சித்தார்.