கிழக்கு, மேற்கு கடல் எல்லைகளை கண்காணிக்க அமெரிக்காவின் 2 'சீ கார்டியன்' ட்ரோன்கள்: இந்திய கடற்படை அதிரடி
இந்திய கடற்படையின் கடல்சார் கண்காணிப்புத் திறனை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், அமெரிக்காவின் பிரபல ஜெனரல் அட்டாமிக்ஸ் ஏரோநாட்டிகல் (General Atomics Aeronautical) நிறுவனத்திடமிருந்து இரண்டு 'எம்.க்யூ-9பி சீ கார்டியன்' (MQ-9B Sea Guardian) அதிஉயர நீண்ட தூர கண்காணிப்பு ட்ரோன்களை 30 மாத கால குத்தகை அடிப்படையில் பெறுவதற்கான ஒப்பந்தத்தை பாதுகாப்பு அமைச்சகம் திங்கள்கிழமை மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ. 1,943 கோடி ஆகும். பாதுகாப்புத் துறை கூடுதல் செயலாளர் மற்றும் இயக்குநர் ஜெனரல் (கொள்முதல்) ஏ. அன்பரசு முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க நவீன தொழில்நுட்ப அமைப்புகள், சென்சார்கள் மற்றும் நவீன பேலோடுகளுடன் கூடிய இந்த எம்.க்யூ-9பி சீ கார்டியன் ட்ரோன்கள், இந்திய கடற்படையின் கடல்சார் விழிப்புணர்வுத் திறனை (Maritime Domain Awareness) கணிசமாக அதிகரிக்கும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த அமைப்புகள் கடல் பரப்பில் தொடர்ச்சியான உளவு, கண்காணிப்பு மற்றும் தகவல் சேகரிப்புப் பணிகளை மேற்கொள்ள உதவும். இதன் மூலம் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணித்து விரைந்து செயல்படும் இந்தியாவின் திறன் வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் கடற்படைக்காக இந்த அதிஉயர நீண்ட தூர ட்ரோன்களை குத்தகைக்கு எடுக்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியிருந்தது. முன்னதாக, 2020-ம் ஆண்டு இந்தியா-சீனா எல்லைப் பதற்றத்தின் போது ஓராண்டு குத்தகைக்கு பெறப்பட்ட 2 எம்.க்யூ-9ஏ (MQ-9A) ரக ட்ரோன்களை கடற்படை இயக்கி வருகிறது; அவற்றின் குத்தகை காலமும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. தற்போது புதிதாக இணைய உள்ள 2 ட்ரோன்களுடன் சேர்த்து கடற்படையின் வசம் இந்த எண்ணிக்கை 4-ஆக உயரும். இது நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு கடல்சார் பிராந்தியங்களை ஒரே நேரத்தில் தீவிரமாகக் கண்காணிக்க கடற்படைக்கு வழிவகுக்கும். எம்.க்யூ-9பி சீ கார்டியன்: முக்கிய தொழில்நுட்ப விவரங்கள் இறக்கை நீளம் (Wingspan): 79 அடி (24 மீட்டர்) நீளம் (Length): 38 அடி (11.6 மீட்டர்) இன்ஜின் (Power Plant): ஹனிவெல் TPE331-10 டர்போபிராப் (Honeywell TPE331-10 Turboprop) அதிகபட்ச டேக்-ஆஃப் எடை: 5,670 கிலோ (12,500 பவுண்டுகள்) எரிபொருள் கொள்ளளவு: 2,722 கிலோ (6,000 பவுண்டுகள்) பேலோடு கொள்ளளவு: உட்புறம் 363 கிலோ; வெளிப்புறம் 1,814 கிலோ ஹார்ட்பாயிண்டுகள் (Hardpoints): 9 வெளிப்புற இணைப்புகள் (8 இறக்கைகளில், 1 மத்தியில்) பறக்கும் உயரம் (Maximum Altitude): 40,000 அடி (12,192 மீட்டர்) தொடர்ந்து பறக்கும் திறன் (Endurance): 40 மணி நேரம் வேகம் (Airspeed): 210 KTAS செயல்பாட்டு தூரம் (Range): 6,000 நாட்டிகல் மைல்கள் (Nautical Miles) 31 ட்ரோன்கள் வாங்கும் மெகா திட்டம் தற்போதுள்ள பழைய ட்ரோன்களின் குத்தகை காலம் முடிந்தாலும், புதிதாக வாங்கப்படவுள்ள 31 எம்.க்யூ-9பி ட்ரோன்களின் விநியோகம் தொடங்கும் வரை இந்த 2 புதிய ட்ரோன்களின் குத்தகை நீடிக்கும் எனத் தெரிகிறது. மேலும், இந்த புதிய குத்தகை ட்ரோன்கள் வாங்கப்படவுள்ள 31 ட்ரோன்களின் அதே கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டிருக்கும். முன்னதாக 2024-ல், இந்திய முப்படைகளுக்காக 31 எம்.க்யூ-9பி ரக ட்ரோன்களை வாங்குவதற்காக அமெரிக்காவுடன் சுமார் 3.5 பில்லியன் டாலர் (ரூ. 28,000 கோடிக்கும் மேல்) மதிப்பிலான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. உளவு மற்றும் கண்காணிப்புப் பணிகளுடன் சேர்த்து, மலைப்பகுதிகள் மற்றும் கடல் பகுதிகளில் உள்ள இலக்குகள் மீது துல்லியமான வான்வழித் தாக்குதல்களை நடத்தும் திறனும் இந்த ட்ரோன்களுக்கு உண்டு. இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் திறனை மேம்படுத்தும் வகையில், ஜெனரல் அட்டாமிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் ஒரு சர்வதேச அளவிலான பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் மையம் (MRO Facility) அமைக்கப்படவுள்ளதுடன், சில ட்ரோன்கள் இந்தியாவிலேயே கட்டமைக்கப்படவும், குறிப்பிட்ட சதவீத பாகங்கள் உள்நாட்டிலேயே கொள்முதல் செய்யப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் கடல்சார் கண்காணிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில், அமெரிக்காவின் ஜெனரல் அட்டாமிக்ஸ் ஏரோநாட்டிகல் நிறுவனத்திடமிருந்து இரண்டு 'எம்.க்யூ-9பி சீ கார்டியன்' ரக ட்ரோன்களை இந்திய கடற்படை குத்தகைக்கு எடுக்கிறது. 30 மாத கால ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த கொள்முதல் மூலம், நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு கடல் எல்லைகளைக் கண்காணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சுமார் 1,943 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் திங்கள்கிழமை கையெழுத்திட்டுள்ளது. அதிஉயரப் பகுதியில் நீண்ட தூரம் பறந்து கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளக்கூடிய இந்த ட்ரோன்கள், இந்திய கடற்படையின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும்.