கோயில் நிதியில் கல்லூரி கட்ட தடையில்லை; தி.மு.க-வுக்கு எதிரான மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு
முந்தைய தி.மு.க ஆட்சியில் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சார்பில் சென்னை கொளத்தூரிலும், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் நிதியில் திருச்செங்கோட்டிலும், பழனி தண்டாயுதபாணி கோவில் நிதியில் ஒட்டன்சத்திரத்திலும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சார்பில் விளாத்திகுளத்திலும் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்து தமிழக உயர் கல்வித்துறை செயலாளர் கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி அரசாணை வெளியிட்டார். இந்த அரசாணைக்கு தடை விதிக்கக் கோரியும், அதை ரத்து செய்யக் கோரியும் சென்னையைச் சேர்ந்த டி.ஆர். ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி ஜெயச்சந்திரன் மற்றும் இ மனோகரன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கபாலீஸ்வரர் கோவில் நிதியை பயன்படுத்தி கொளத்தூர் மற்றும் ஒட்டன்சத்திரத்தில் கல்லூரிகள் அமைக்கப்பட்டு மூன்று பேட்ச் மாணவர்கள் படிப்பை முடித்து விட்டதாகவும், திருச்செங்கோடு மற்றும் விளாத்திகுளத்தில் கல்லூரிகள் இன்னும் அமைக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் கொளத்தூர் மற்றும் ஒட்டன்சத்திரத்தில் உள்ள கல்லூரிகளில் இந்து சமய படிப்புகள் நடத்தப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார். மனுதாரரான டி.ஆர் ரமேஷ், கோவில் நிதியை கல்லூரிகள் கட்ட பயன்படுத்துவதற்கான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கோவில் நிதியை கல்விக்காக பயன்படுத்தலாம் என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

கோயில் நிதியைப் பயன்படுத்தி கல்லூரிகள் தொடங்குவதற்கு தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. முந்தைய தி.மு.க ஆட்சியில் சென்னை, திருச்செங்கோடு, பழனி மற்றும் திருச்செந்தூர் ஆகிய கோயில்களின் நிதியைக் கொண்டு அந்தந்த பகுதிகளில் கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கி கடந்த அக்டோபர் 6-ம் தேதி தமிழக உயர் கல்வித்துறை செயலாளர் அரசாணை பிறப்பித்திருந்தார்.
இந்த அரசாணையை எதிர்த்தும், அதை ரத்து செய்யக் கோரியும் சென்னையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கோயில் நிதியில் கல்லூரி கட்டுவதற்குத் தடை ஏதுமில்லை என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.