“தவெக சொன்ன மாதிரி நடந்துக்கவே இல்லை” - முதல்வரை ஆதரித்தற்காக மன்னிப்பு கேட்ட நடிகை!
தமிழ்நாட்டில் தவெக ஆட்சியில் மின்சாரம் தொடர்பான பிரச்சனை தொடர்ந்து கொண்டே வருகிறது. இதில் தவெக தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்ற பின் முதல் கையெழுத்தாக 200 யூனிட் இலவச மின்சார திட்டத்தில் கையெழுத்திட்டார். ஆனால் தேர்தல் வாக்குறுதிக்கு எதிராக இது அமைந்ததாக விமர்சனங்கள் எழுந்தது. அதாவது வாக்குறுதியில் 200 யூனிட் இலவசம் எனச் சொல்லிவிட்டு பின்பு 500 யூனிட்டிற்கு குறைவான மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே அது செல்லும் என சில கண்டிஷன் போடப்பட்டது எதிர்வினையைச் சந்தித்தது. மேலும் அதிக நேர மின் வெட்டு, மின் கட்டண உயர்வு என அடுத்தடுத்து மின்சாரம் தொடர்பான பிரச்சனைகள் வெடித்தது. இதில் மின் கட்டண உயர்வு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே முதல்வரின் முதல் கையெழுத்து தொடர்பாக சின்னத்திரை நடிகை வைஷாலி சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், “எங்க தளபதியோட முதல் கையெழுத்தே 200 யூனிட் ஃப்ரீ... இப்ப நீங்க என்ன பேசப்போறீங்க” என உற்சாகம் பொங்க முதல்வர் விஜய்க்கு ஆதரவாகப் பேசியிருந்தார். ஆனால் அது தொடர்பாக தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் வெளியிட்ட வீடியோவுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கடந்த இரண்டு மூன்று மாதங்களாகவே சாமானிய மக்களின் கரண்ட் பில் அதிகமாக வந்துகொண்டிருக்கிறது. எனக்கும் இதே நிலைமை தான். கரண்ட் பில் விஷயத்தில் தவெக சொன்னது போல் செயல்படவில்லை. இப்படியே போனால் மக்களுடைய வாழ்வாதாரம் ரொம்பவே கஷ்டமாகிவிடும். நீங்கள் சொன்ன 200 யூனிட் ஃப்ரீ என்ற திட்டத்தை எடுத்துவிட்டு இதற்கு முன்பு கரண்ட் பில் எப்படி வந்ததோ அதே மாதிரி கொடுத்தாலே மக்களுக்கு உதவியாக இருக்கும். இப்படியே சென்றால் கவர்மெண்ட் மேல் மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிடும்” என்றுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக, 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. 500 யூனிட்டிற்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே இந்தத் திட்டம் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டதால் பொதுமக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் முதலமைச்சரை ஆதரித்துப் பேசியதற்காக நடிகை ஒருவர் மன்னிப்பு கோரியுள்ளார். தவெக தலைவர் விஜய் சொன்னபடி செயல்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள அவர், தனது முந்தைய ஆதரவு நிலைப்பாட்டிற்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.