“இதற்கென்று ஒரு அமைச்சரை நியமித்து இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” - மா.சுப்பிரமணியன்!
சென்னை மாநகராட்சி சார்பில் சொத்துவரி உயர்த்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியன், “நூறு மடங்கு சொத்து வரி உயர்வு சென்னை மக்கள் தலையில் பேரிடி” எனக் குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த சில நாட்களாகவே சென்னையில் மக்கள் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிற ஒரு செய்தி சொத்து வரி உயர்வு. சென்னை மாநகராட்சியின் சார்பில் சொத்து வரியினை எப்போதாவது ஒருமுறை உயர்த்துவது என்பது வாடிக்கைதான். ஆனால் இந்த அளவுக்கு மக்கள் தலையில் பேரிடியாக அது இருக்காது. ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் மதிப்பீட்டில் இருந்து ஐந்து அல்லது பத்து சதவீதம் உயர்வு என்பது இருக்கத்தான் செய்யும். ஆனால் தற்போதைய உயர்வு என்பது ஒரு சில இடங்களில் நூற்றுக்கு நூறு சதவீதமும் ஒரு சில இடங்களில் நூற்றுக்கு 300 சதவீதம் அளவிற்கு சொத்து வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. எந்த ஒரு முன்னறிவிப்பு இன்றி இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்கிற வகையில் சொத்து வரி உயர்த்தி இருப்பது என்பது மக்களுக்கு மிகப்பெரிய இன்னலை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலை எப்படி உருவானது என்ற காரணம் கேட்டால் அரசு தரப்பில் ஒரு வகையான பதில் தரப்படுகிறது. அதாவது வரி மதிப்பீடுகள் என்பது பரப்பளவை விட குறைவாக மதிப்பிடப்பட்ட குடியிருப்புகள் மாநகராட்சி அலுவலர்களால் கண்டறியப்பட்டு அதன் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு இந்த வரிகள் கூடுதலாக்கப்பட்டுள்ளது என்றும், குடியிருப்பு வகைப்பாட்டில் சொத்து வரி செலுத்தி விட்டு அதனை வணிகப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருகிற உரிமையாளர்களுக்கு சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அரசு தரப்பு கூறுகிறது. ஆட்சிக்கு வந்து மூன்று மாத காலத்தில் இதை இவர்கள் எப்படி கண்டறிந்திருக்கக்கூடும் என்பது பொதுமக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ள ஒரு கேள்வி. ஏற்கனவே மின்சார கட்டணம் பல மடங்கு உயர்ந்த நிலையில் சொத்துவரி உயர்த்தியிருப்பது என்பது ஏற்புடையதாக இல்லை என்று பொதுமக்கள் இதற்கு தங்கள் எதிர்ப்பத் தெரிவிக்கிறார்கள். சொத்து வரி உயர்த்த வேண்டும் என்று சொன்னால் அதற்கென்று முறையான வழிமுறைகள் இருக்கிறது. வழக்கமாக மாநகராட்சி மன்ற கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்களால் விவாதிக்கப்பட்டு இந்த சொத்து வரி உயர்வு என்பது முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இது மன்ற கூட்டத்தில் வைக்கப்படாமல் சர்வாதிகாரமான முறையில் அறிவிக்கப்பட்டு இருப்பது என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும், பல்வேறு துறைகளில் கவனம் செலுத்த வேண்டிய முதலமைச்சர் விஜய் தனது நேரடி கட்டுப்பாட்டில் இந்தத் துறையை வைத்திருப்பதால்தான் சிக்கல் எழுகிறது. இதற்கென்று ஒரு அமைச்சரை நியமித்து அவர் மூலம் இத்தகைய நடவடிக்கைகளை அவர் மேற்கொள்ள வேண்டும். எது எப்படியோ ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்களில் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக இருக்கிறபோது மக்களுக்கான நலத்திட்டங்களை எல்லாம் நிறைவேற்றுவதற்கு வழி இல்லாத ஒரு அரசு மக்கள் மீது மேலும் சுமைகளை வைப்பது என்பது ஒரு மோசமான நடைமுறையாக இருக்கும். எனவே சொத்து வரி உயர்வு குறித்து பரிசீலித்து முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார். இத்தகைய சூழலில் தான் பொதுமக்கள் எழுப்பிய கோரிக்கைகளை கவனமாக ஆய்வு செய்து அதன்படி சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சொத்து வரி உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை மாநகராட்சி சொத்து வரியை உயர்த்திய விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்த வரி உயர்வு சென்னை மக்கள் மீது விழுந்த பெரும் பேரிடி என்று அவர் விமர்சித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியில் சொத்து வரி அவ்வப்போது உயர்த்தப்படுவது வழக்கமான ஒன்றே என்றாலும், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அளவுக்கு அதிகமான உயர்வு மக்களைப் பாதிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இதற்கென பிரத்யேகமாக ஒரு அமைச்சரை நியமிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.