சீனியர்களுக்கு ஸ்டாலின் அதிரடி மெசேஜ்? “நான் சொன்ன மாற்றங்களை கட்டாயம் செய்வேன்” என திட்டவட்டம்!
சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திமுகவில் அமைப்பு ரீதியான மாற்றங்களை மு.க.ஸ்டாலின் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், செயற்குழு கூட்டத்திற்கு முன்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகளை நேரில் அழைத்து அவர் நடத்திய ஆலோசனை தற்போது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில், கட்சியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு மறுசீரமைப்பு நடவடிக்கைகளை கட்டாயம் மேற்கொள்ளப் போவதாக ஸ்டாலின் மூத்த நிர்வாகிகளிடம் திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், சட்டப்பேரவைத் தேர்தலின்போது மூத்த நிர்வாகிகளின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு கடைசி நேரத்திலும் வேட்பாளர் பட்டியலில் மாற்றங்களை செய்ததாக குறிப்பிட்ட ஸ்டாலின், “நீங்கள் பரிந்துரை செய்தவர்கள்தானே போட்டியிட்டார்கள். அவர்கள் ஏன் வெற்றி பெறவில்லை?” என நேரடியாக கேள்வி எழுப்பியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த கேள்வியால் கூட்டத்தில் இருந்த மூத்த நிர்வாகிகள் அமைதியாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில் கட்சியின் அமைப்பு ரீதியான மறுசீரமைப்பு தொடர்பாக பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை 77-ல் இருந்து 110 ஆக அதிகரிக்கவும், மாவட்டச் செயலாளராக இருப்பவர்களின் அதிகபட்ச வயதை 70 ஆக நிர்ணயிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒருவர் அதிகபட்சம் மூன்று முறை மட்டுமே மாவட்டச் செயலாளர் பதவியை வகிக்க முடியும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிளைச் செயலாளர் உள்ளிட்ட கீழ்மட்ட பொறுப்புகளிலும் வயது மற்றும் பதவிக்காலம் தொடர்பாக கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாற்றங்கள் திமுகவின் பல்வேறு மூத்த நிர்வாகிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நீண்ட காலமாக மாவட்ட அளவில் செல்வாக்கு செலுத்தி வரும் பல சீனியர்கள் தங்களது பதவிகளை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. தற்போதைய அமைப்பில் 77 மாவட்டச் செயலாளர்கள் உள்ள நிலையில், புதிய கட்டமைப்பில் பல தொகுதிகள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதன் மூலம் சுமார் 46 புதிய மாவட்டச் செயலாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என திமுக வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டாலினின் இந்த முடிவுக்கு ஆரம்பத்தில் சில மூத்த நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்டாலும், அவர் தனது முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது. கட்சிக்குள் பல ஆண்டுகளாக ஒரே நிர்வாகிகள் மாவட்ட அளவில் அதிகாரம் செலுத்தி வருவதால், அவர்களைச் சுற்றி தனித்தனி அதிகார மையங்கள் உருவாகியிருப்பதாக தலைமை கருதுவதாக கூறப்படுகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காகவே மாவட்ட அமைப்பில் பெரிய அளவிலான மாற்றங்கள் கொண்டு வரப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், பதவியை இழக்கக்கூடிய மூத்த நிர்வாகிகள் தங்களுக்குப் பதிலாக தங்களது வாரிசுகளுக்கு மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை பெற்றுத் தர முயற்சி செய்யலாம் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. ஆனால், அதற்கும் ஸ்டாலின் சம்மதிப்பாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. புதிய தலைமுறையினருக்கு வாய்ப்பு அளித்து பழைய அதிகார மையங்களின் ஆதிக்கத்தை குறைப்பதே இந்த மறுசீரமைப்பின் முக்கிய நோக்கம் என்ற நிலையில், மீண்டும் வாரிசுகளுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டால் பழைய பவர் சென்டர்கள் வேறு வடிவில் தொடரும் என்பதை தலைமை கணக்கில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அடுத்தகட்டமாக புதிய மாவட்டச் செயலாளர்களை தேர்வு செய்யும் விவகாரத்தில் சீனியர்களின் வாரிசுகளுக்கு வாய்ப்பு கிடைக்குமா அல்லது முற்றிலும் புதிய முகங்களுக்கு ஸ்டாலின் வாய்ப்பு வழங்குவாரா என்ற எதிர்பார்ப்பு திமுகவுக்குள் அதிகரித்துள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப்பின் திமுகவில் அமைப்பு ரீதியான மாற்றங்களைக் கொண்டுவருவதில் மு.க.ஸ்டாலின் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, செயற்குழு கூட்டத்திற்கு முன்னதாக கட்சியின் மூத்த நிர்வாகிகளை நேரில் அழைத்து அவர் நடத்திய ஆலோசனை அக்கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையின்போது, கட்சியின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது உறுதி என்று ஸ்டாலின் மூத்த நிர்வாகிகளிடம் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தான் முன்வைக்கும் மாற்றங்களைச் செயல்படுத்துவதில் உறுதியாக இருப்பதை அவர் இந்த சந்திப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.