அவையில் பேசிக்கொண்டிருந்த இ.பி.எஸ். : திடீரென குறுக்கிட்ட சபாநாயகர்!
தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, கவன ஈர்ப்பு தீர்மானம் மீது இன்று (24.08.2026) பேசுகையில், “சட்டப்பேரவை விதி 55ன் கீழ் ஒரு கவன ஈர்ப்பு கொடுத்திருக்கின்றோம். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூரிலிருந்து டெல்டா மாவட்டங்களுக்கு குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு தண்ணீர் திறக்கப்படவில்லை. அதனால் நிலத்தடி நீரை நம்பி சுமார் 2 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்தார்கள். அதில் ஒரு லட்சம் ஏக்கர் தண்ணீர் இல்லாமல் காய்ந்து...” எனப் பேசிக் கொண்டிருந்தார். அதற்கு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், “அறிவிப்பு கொடுத்திருக்கிறீர்கள். அரசிடமிருந்து இன்னும் பதில் வரவில்லை. நீங்கள் விளக்கமாக சொல்ல ஆரம்பித்து, பதில் வராமல் அதை அனுமதித்தால், அரசாங்கம் ஏன் பதில் தரவில்லை என்ற பிரச்சினை வரும். பதில் வந்தவுடன் விரிவாக பேசுவதற்கான வாய்ப்பு உங்களுக்கு உள்ளது. இப்போது நீங்கள் பதிவு செய்துவிட்டீர்கள். மேட்டூர் அணையில் ஏன் தண்ணீர் திறக்கவில்லை என்று கேள்வியாக கேட்டுவிட்டீர்கள். நீர்வளத்துறை அமைச்சர் பதில் கிடைத்தவுடன், இதே அவையில் நான் பதில் சொல்லச் சொல்கிறேன். அதுவரைக்கும் இதை, பதிவு செய்ததாக நான் ஏற்றுக்கொள்கிறேன். பதிவு பண்ணியாச்சு” எனத் தெரிவித்தார். இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி மீண்டும் பேசுகையில், “டெல்டா மாவட்டங்களில் சென்ற வாரம் பெய்த திடீர் மழையால் சுமார் 2,000 ஏக்கரில் விளைந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. மேலும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையால் நனைந்து நொறுங்கி உள்ளன. ஆகவே, இந்த இரண்டு விஷயங்கள் குறித்தும் அரசினுடைய கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்” எனத் தெரிவித்தார். அதற்கு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், “இதை பதிவு செய்து கொள்கிறோம். அறிவிப்புக்கு அமைச்சர், அரசிடமிருந்து பதில் வந்தவுடன், விரிவாக விவாதிப்பதற்கு நான் அனுமதி அளிப்பேன். இதோடு ‘மென்ஷன்’ செய்து கொள்கிறேன். 13 உறுப்பினர்கள் பேச வேண்டும். ஆறு மானியக் கோரிக்கைகள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (24.08.2026) உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி மேட்டூரிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் நிலையில், இந்தாண்டு தண்ணீர் திறக்கப்படாததை அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாக, நிலத்தடி நீரை நம்பி 2 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை பயிர்களில், ஒரு லட்சம் ஏக்கர் வரை தண்ணீர் இன்றி காய்ந்துவிட்டதாக அவர் விளக்கமளித்துக்கொண்டிருந்தபோது சபாநாயகர் குறுக்கிட்டார். சட்டப்பேரவை விதி 55-ன் கீழ் இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை முன்வைப்பதாக அவர் தனது பேச்சில் குறிப்பிட்டிருந்தார்.