திருமணம் ஆகாதவர்கள் மது குடிச்சா ரூ.5000 ஃபைன்; நாகை கிராமத்தில் பஞ்சாயத்து வைத்த அறிவிப்பு பேனர்
நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடி மீனவ கிராமத்தில், பொது அமைதி மற்றும் இளைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, திருமணம் ஆகாதவர்கள் மது அருந்தினால் ரூ.5,000 அபராதம் வசூலிக்கப்படும் என ஊர் பஞ்சாயத்தார்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பேனர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மது நாட்டிற்கும் வீட்டுக்கும் கேடு" என்ற பொன்மொழி வெறும் வாசகம் மட்டுமல்ல; அது எண்ணற்ற குடும்பங்களின் நிம்மதியைச் சீர்குலைக்கும் கசப்பான உண்மை. மதுப்பழக்கம் தனிமனித ஆரோக்கியத்தைக் கெடுப்பதுடன், கல்லீரல் பாதிப்பு, நரம்புத் தளர்ச்சி போன்ற தீவிர நோய்களுக்கும் வழிவகுக்கிறது. மேலும், போதையினால் ஏற்படும் குடும்பத் தகராறுகள், வீண் கடன்கள் மற்றும் சாலை விபத்துகள் ஆகியவை சமூக அமைதியையும் இளைஞர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்குகின்றன. இத்தகைய மதுவின் தீமைகளிலிருந்து தங்கள் கிராமத்தின் எதிர்கால தூண்களான இளைஞர்களைக் காக்கவும், ஊரின் அமைதியை நிலைநாட்டவும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு மீனவ கிராமம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம், விழுந்தமாவடி மீனவ கிராமத்தில் ஊர் பஞ்சாயத்தார்கள், இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் சார்பாக, “பொதுமக்கள் கவனத்திற்கு, மதுவை ஒழிப்போம், மக்களை காப்போம்” என்று வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பேனரில் எழுதியிருப்பதாவது: குடித்தால் ரூ.5000 அபராதம் #Nagapattinam #Vilundamavadi #AlcoholBan #VillagePanchayat #PublicNotice #thanthitv pic.twitter.com/Ulzj1G2Yu8 — Thanthi TV (@ThanthiTV) August 12, 2026 “நமது கிராமத்தின் பொது அமைதி, இளைஞர்களின் நலன், பொதுசுகாதாரம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு 02.08.2026 முதல் ஊரில் திருமணம் ஆகாதவர்கள் (இளைஞர்கள்) மது அருந்த முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், திருமணம் ஆகாதவர்கள் மது அருந்துவதை ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால் ரூ.5000 அபராதம் வசூலிக்கப்படும். இதனுடன் திருமணம் ஆனவர்கள் குடிபோதையில் வீட்டிலோ அல்லது பொது இடத்திலோ பிரச்னைகள் ஏற்பட்டு நமது ஊருக்கு வரும் பட்சத்தில் ரூ.5000 அபராதம் வசூலிக்கப்படும். இந்த நல்ல முயற்சிக்கு ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இன்றைய சரியான முடிவு நாளைய சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும். மதுவை தவிர்போம், நம் எதிர்கால வாழ்க்கையையும், நம் சமூகத்தையும் பாதுகாப்போம்” என்று அறிவிக்கப்பட்டு இப்படிக்கு ஊர் பஞ்சாயத்தார்கள், இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் என எழுதப்பட்டுள்ளது. சமூகத்தில் போதைப்பொருட்களின் பயன்பாட்டைக் குறைக்கவும், இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் கிராம அளவிலேயே மக்கள் ஒன்றிணைந்து எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை பாராட்டுகளைப் பெற்று வருகிறது. சட்ட அமலாக்கத் துறையினரின் நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டு, ஊர் பொதுமக்களே முன்னெடுத்துள்ள இந்த விழிப்புணர்வு முயற்சி பிற கிராமங்களுக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடி மீனவ கிராமத்தில், பொது அமைதியை நிலைநாட்டவும் இளைஞர்களின் நலனைக் காக்கவும் ஊர் பஞ்சாயத்தார்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து புதிய கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளனர். இதன்படி, திருமணமாகாத இளைஞர்கள் மது அருந்தினால் அவர்களுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மது அருந்துவது தனிநபர் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதுடன் குடும்ப அமைதியையும் சிதைக்கும் என்பதால், இந்த நடவடிக்கையை கிராம மக்கள் மேற்கொண்டுள்ளனர்.