“பெண்கள் சார்பாக முதல்வர் விஜய்க்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” - பிரேமலதா பேச்சு!
நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி மறுவரையறை தொடர்பாகச் சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் இன்று (12.08.2026) தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்நிலையில் இது தொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், “மக்கள் தொகை மறுசீரமைப்பில் உறுதியாக தமிழ்நாட்டிற்கு 59 எம்.பி.க்களுக்கு மேல், 7 முதல் 8 லட்சம் மக்களுக்கு ஒரு எம்.பி. என்ற வீதம் கண்டிப்பாக வரும்போது அது சிறப்பாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேபோல, பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை, ஒரு பெண் அவை உறுப்பினராகவும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் பொதுச்செயலாளராகவும், ஒட்டுமொத்த பெண்கள் சார்பாகவும் நான் வரவேற்கிறேன். ஏற்கனவே விஜயகாந்த இருந்தபொழுது, 33 சதவீதத்திற்காக மாபெரும் ஒரு பெண்கள் மாநாட்டை நடத்தி, பெண்களுக்காக ஒரு சீருடையை வழங்கி, பெண்களுக்கு மரியாதை கொடுத்தவர் இந்த அவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த். அந்த வகையில், பெண்கள்தான் இந்த நாட்டின் கண்கள் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. இங்கே இருக்கின்ற ஒவ்வொரு உறுப்பினருக்கும் நிச்சயமாக முதுகு எலும்பாக இருப்பது யார் என்றால் பெண்கள்தான். அந்தப் பெண்கள் நிச்சயமாக அரசியலிலும் கோலோச்ச வேண்டும். இன்றைக்கு எல்லா இடங்களிலும் பெண்கள் வந்து மிகச் சிறப்பாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் பொழுது, அரசியலிலும் மிகப்பெரிய அளவில் பெண்களை ஊக்கப்படுத்துகின்ற நம்முடைய கட்சிகளுக்கு என்னுடைய நன்றிகளை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அவையிலும் அதிகமான பெண்கள் இருக்கிறார்கள். எனவே, முதலமைச்சர் விஜய்க்கு நிச்சயமாக இந்த நேரத்தில் பெண்கள் சார்பாக நான் நன்றி சொல்லுகிறேன். இன்னும் இந்த விகிதாச்சாரம் அதிகமாக வேண்டும் என்பதையும் இந்த நேரத்தில் நான் கேட்டுக் கொள்கிறேன். அந்த வகையில், பெண்களுக்கு 543 இடங்களில் இருந்து 33 சதவீதம் ஒதுக்கினால், மொத்தம் 179 பெண் எம்.பி.க்கள் வருவார்கள். அதற்கு மாறாக, 815 எம்.பி.க்கள் இருக்கும்போது 33 சதவீத இடஒதுக்கீட்டின்படி வழங்கினால், 269 பெண் எம்.பி.க்கள் வருவார்கள். அப்படிப் பார்த்தால், மொத்தம் டெல்லியில் 269 பெண் எம்.பி.க்கள் வரும்பொழுது, பெண்களுக்கு 90 பேர் அதிகமாக வாய்ப்பு இருக்கிறது. அதனால், நிச்சயமாக இந்த இரண்டு தீர்மானங்களிலுமே, ஒன்று, மத்திய அரசு சட்ட முன்வடிவைக் கொண்டு வர வேண்டும். அதற்குப் பிறகுதான் தொகுதி மறுசீரமைப்பைப் பற்றி நாம் ஆய்வு செய்தால் சிறப்பாக இருக்கும் என்ற என் கருத்தைக் கூறுகிறேன். பெண்களுக்கு 33 சதவீதம் வழங்கி, நிச்சயமாக நமது தமிழ்நாட்டிலே இந்த 39 எம்.பி.க்களை 59 எம்.பி.க்களாக உயர்த்தி, 7 முதல் 8 லட்சம் மக்களுக்கு ஒரு எம்.பி. வீதம் டெல்லியில் சென்று தமிழ்நாட்டிற்காகக் குரல் கொடுக்கும்பொழுது, நிச்சயமாக தமிழ்நாட்டை இன்னும் மிகப்பெரிய அளவில் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல முடியும். மக்களுக்கும் மத்திய அரசின் மூலம் கிடைக்க வேண்டிய பணிகளையும் திட்டங்களையும் கொண்டு வர முடியும். மத்திய அரசின் மூலம் மாநில அரசும் நிச்சயமாக அந்தத் திட்டங்களைக் கொண்டு வர முடியும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை” எனத் தெரிவித்தார்.

நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி மறுவரையறை தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் இன்று (12.08.2026) தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இது குறித்துப் பேசிய பிரேமலதா விஜயகாந்த், மக்கள் தொகை மறுசீரமைப்பின் மூலம் தமிழ்நாட்டிற்கு 59-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கிடைக்க வேண்டும் என்றும், 7 முதல் 8 லட்சம் மக்களுக்கு ஒரு எம்.பி. என நிர்ணயம் செய்வது சிறப்பாக இருக்கும் என்றும் கருத்து தெரிவித்தார்.
மேலும், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை முதலமைச்சர் கொண்டு வந்ததற்கு, அனைத்துப் பெண்கள் சார்பாகவும் தனது நன்றியைத் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.