“இப்படிப்பட்ட தலைவர்களை எந்தக் கட்சியிலாவது பார்த்திருக்கிறோமா?” - சி.வி. சண்முகம்!
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார். அதில், “வெற்றி பெற்றால் அது என்னால் வெற்றி பெற்றது; தோல்வி அடைந்தால் கட்சி நிர்வாகியால் தோல்வி அடைந்ததாக பழியைத் தூக்கிப் போடுகிற இப்படிப்பட்ட தலைவர்களை இந்தியாவில் எந்தக் கட்சியிலாவது பார்த்திருக்கிறோமா?. இந்தியாவில் இருக்கிற தேசியக் கட்சிகளாகட்டும், மாநிலத்தில் இருக்கிற மாநிலக் கட்சிகளாகட்டும், தேர்தலில் தோல்வி அடைந்தால், படுதோல்வி அடைந்தால், அந்தக் கட்சியினுடைய தலைவர் தார்மீகப் பொறுப்பேற்று, ‘அந்தத் தோல்விக்கு நாங்கள்தான் காரணம்’ என்று பல தலைவர்கள் ராஜினாமா செய்திருக்கிறார்கள். ஏன், ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியினுடைய தலைவராக இருந்தபோது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்கு பொறுப்பேற்று, தன்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். நாங்கள் ராஜினாமா செய்யச் சொல்லவில்லை. நாங்கள் ராஜினாமா கோரிக்கையே வைக்கவில்லை. நீங்கள்தான் பொதுச்செயலாளர் என்று இன்றைக்கும் சொல்லுகிறோம். தோல்விக்கான காரணத்தை ஆராயுங்கள். தொடர் தோல்வியில் நாம் இருக்கிறோம். இந்தத் தோல்வியிலிருந்து இந்தக் கட்சியை மீட்டெடுக்க வேண்டும். உண்மையான நிலவரத்தை கலந்து பேசுங்கள் என்றுதான் நாங்கள் சொன்னோம். வேறு எதற்காகவும் எங்கள் மீது பழி போடவில்லை. இன்னொன்று சொல்கிறார். திமுக கூட்டணிக்கு நாங்கள்தான் சொன்னோம் என்று. இது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். உலகத்துக்கே தெரியும். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியத் தலைவர் பரதனிடம் கேளுங்கள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடம் கேளுங்கள். கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரிடம் கேளுங்கள். முஸ்லிம் லீக் கட்சித் தலைவரிடம் கேளுங்கள். ஏன், ஆர்.எஸ். பாரதியிடம் கேளுங்கள். ‘நாங்களெல்லாம் பங்காளிகள்’ என்று கூறுகிறார். என்னைக்கு நாங்களெல்லாம் பங்காளியானோம்? எப்போது பங்காளியானோம்?. நான்காம் தேதியிலிருந்து எடப்பாடியாருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் ஏற்பட்ட அந்த உறவு, பங்காளி என்று பேசுகிற அளவுக்கு உருவாக்கிவிட்டது. ‘திருமாவளவனை நான் முதலமைச்சர் ஆக்குவதற்கு சொன்னேன்’ என்று சொன்னார். ஆமாம், சொன்னேன். நான் ஏற்கனவே பேட்டியில் சொல்லியிருக்கிறேனே. ஏன் சொன்னேன்? எப்போது சொன்னேன்?. நீங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை உங்கள் வீட்டிலே கூட்டினீர்கள். கூட்டி என்ன சொன்னீர்கள்? ‘திமுக ஆதரவோடு நான் முதலமைச்சர் ஆவதற்கு ஆதரவு அளித்தார்கள். இப்போது சில கட்சிகள் அதில் ஒத்துக்கொள்ளவில்லை. அதனால் மாற்றுத் திட்டமாக திருமாவளவனை முதலமைச்சர் ஆக்குவோம். மற்ற அமைச்சர்கள் எல்லாம் நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்கிறார்கள் என்று சொன்னார். இதனைச் சொன்னபோது அது எப்படி நாம் ஏற்றுக்கொள்ள முடியும்?. திமுக ஆதரவோடு நீங்கள் முதலமைச்சராவது ஏற்றுக்கொள்ளப்படும்போது, ஏன் திருமாவளவனை முதலமைச்சர் ஆக்கிவிட்டு, நீங்கள் மீதி இருக்கிற 30 அமைச்சர்களையும் அதிமுக ஆக்குவது என்ன தவறு என்று சொன்னேன். நான் அதில் மறுக்கவில்லையே. இன்னைக்கும் சொல்கிறேன். நான் சொன்னதுதான் உண்மை. எப்போது சொன்னேன்? நீங்கள் சொன்னதற்குப் பிறகு சொன்னேன். அதே சமயம்‘திருமாவளவனை ஏற்றுக்கொள்ள முடியாது. அது எப்படி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் என்று சொல்லிவிட்டு நாம் இருப்பது? அதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்’ என்று சொன்னார். சரி, நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டாம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் திமுகவை எதிர்த்து தொடங்கப்பட்ட இயக்கம். தவெகவும் திமுகவை எதிர்த்து அரசியல் செய்கிறது. திமுகவை எதிர்த்து வெற்றி பெற்றிருக்கிறது. நாம் இருவருமே ஒரே கொள்கையில் இருக்கிறோம். ஏன் தவெகவை நாம் ஆதரிக்கக்கூடாது என்று சொன்னேன். சொன்னேன். எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. நீங்கள் திமுகவோடு முதலமைச்சராகின்றபோது, திமுக எதிர்ப்பு இருக்கிற தவெகவை ஆதரிப்பதில் என்ன தவறு என்று சொன்னோம். இதுதான் நடந்தது. இதையெல்லாம் மூடி மறைத்துவிட்டு, இன்றைக்கு திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று நாங்கள் சொன்னதாகச் சொல்கிறார். ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால் உண்மையாகிவிடும் என்று சொல்கிறார். எத்தனை மாதம் கழித்து சொல்கிறார்?. அதுவும் அவரே சொல்ல மாட்டார். சொல்லிக் கொடுக்கிறார்”எனத் தெரிவித்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துள்ள முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், தேர்தலில் வெற்றி பெற்றால் தனக்கும், தோல்வி அடைந்தால் நிர்வாகிகளுக்கும் பொறுப்பேற்கும் தலைவரை இந்தியாவில் எங்கும் பார்த்ததில்லை என்று சாடியுள்ளார். தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று ராகுல் காந்தி பதவி விலகியது போல, தொடர் தோல்விகளில் இருந்து கட்சியை மீட்டெடுக்க ஆக்கபூர்வமான விவாதங்களை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், திமுக கூட்டணியை ஆதரித்ததாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு முற்றிலும் பொய் என்று மறுத்துள்ள சி.வி. சண்முகம், எடப்பாடி பழனிசாமிக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையே நிலவும் உறவு குறித்து கேள்வி எழுப்பினார். திருமாவளவனை முதலமைச்சராக்குவது குறித்த தனது கருத்து, எடப்பாடி பழனிசாமி முன்வைத்த மாற்றுத் திட்டத்திற்குப் பிறகுதான் கூறப்பட்டது என்றும், திமுகவை எதிர்க்கும் தவெக-வை ஆதரிப்பதில் உள்ள நியாயத்தை தாம் சுட்டிக்காட்டியதாகவும் அவர் விளக்கமளித்தார்.