PulseNews
அரசியல்

விஜய் குறித்த சர்ச்சை பேச்சு: “என் பதிவில் பார்த்துக்கொள்ளுங்கள்” என நயினார் நாகேந்திரன் பதில்

தமிழக முதல்வர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் தனது கருத்துக்கு விளக்கம் அளித்துள்ளார். ஆனால், இதுகுறித்து செய்தியாளர்கள் நேரடியாக கேள்வி எழுப்பியபோது, “என்னுடைய பதிவில் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று மீண்டும் மீண்டும் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பேசிய நயினார் நாகேந்திரன், சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தனது தந்தை குறித்து பேசியதை விமர்சித்தார். அப்போது, “சட்டமன்றத்தில் அப்பாவை தேடினால் எப்படி? வீட்டில் போய் அம்மாவிடம் கேட்டால்தானே அப்பா யார் என்று சொல்வார்கள்” என்று அவர் கூறியிருந்தார். நயினார் நாகேந்திரனின் இந்தப் பேச்சுக்கு தவெக அமைச்சர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜக நிர்வாகிகளான குஷ்பு, கஸ்தூரி உள்ளிட்டோரும் இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது. இதனிடையே நயினார் நாகேந்திரனுக்கு எதிராக டிஜிபி அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்த நயினார் நாகேந்திரன், தனது பேச்சு திரித்து சித்தரிக்கப்படுவதாகவும், யாரையும் குறிப்பிட்டு எந்த உள்நோக்கத்துடனும் பேசவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், “தாய் மீதும், தாய் நாட்டின் மீதும், தாய்மொழி மீதும் மிகுந்த அக்கறை கொண்டவன் நான்” என்றும் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், அவரது சர்ச்சை பேச்சு தொடர்பாக செய்தியாளர்கள் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு நேரடியாக பதிலளிக்காமல், “நான் என்னுடைய விளக்கத்தை ஏற்கனவே கொடுத்துள்ளேன். அதில் பாருங்கள்” என்று கூறினார். அமைச்சர்கள் மற்றும் அண்ணாமலை உள்ளிட்டோர் கூட தனது கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோதும், “என்னுடைய பதிவில் பார்த்துக்கொள்ளுங்கள்... என்னுடைய பதிவில் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று ஒரே பதிலை மீண்டும் மீண்டும் கூறிவிட்டு அங்கிருந்து வேகமாக புறப்பட்டுச் சென்றார். நயினார் நாகேந்திரன் சர்ச்சையில் சிக்குவது இது முதல்முறை அல்ல. 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக நடிகை திரிஷா குறித்து அவர் பேசிய கருத்தும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது விஜய்யை விமர்சித்துப் பேசிய நயினார், “விஜய் அனுபவம் இல்லாதவர். முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். திரிஷாவை விட்டு வெளியே வர வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்தப் பேச்சுக்கு திரிஷா தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் தனிநபர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனப் பொருளாக மாற்றக்கூடாது என்றும், உயர் பதவியில் இருப்பவர்கள் பொது விவாதங்களில் பொறுப்புடனும் சமநிலையுடனும் பேச வேண்டும் என்றும் திரிஷா தரப்பு தெரிவித்திருந்தது. இதையடுத்து நயினார் நாகேந்திரன் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்திருந்தார். “தவறி வந்த ஒரு வார்த்தை. யாரேனும் வருத்தப்பட்டிருந்தால், என்னுடைய வருத்தத்தை மனப்பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறியிருந்தார். இந்நிலையில், மீண்டும் முதல்வர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தனது கருத்துக்கு விளக்கம் அளித்த பிறகும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்காமல் நயினார் நாகேந்திரன் புறப்பட்டுச் சென்றது அரசியல் கவனத்தை பெற்றுள்ளது.

Seithipunal14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
விஜய் குறித்த சர்ச்சை பேச்சு: “என் பதிவில் பார்த்துக்கொள்ளுங்கள்” என நயினார் நாகேந்திரன் பதில்
PulseNews சுருக்கம்

தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது தந்தை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார். பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது, சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தனது தந்தை குறித்துப் பேசியதை நயினார் நாகேந்திரன் விமர்சித்துப் பேசினார்.

இதன்பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்த அவர், தனது சமூக வலைதளப் பதிவில் விளக்கத்தைக் காணுமாறு மீண்டும் மீண்டும் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். தனது சர்ச்சைக்குரிய கருத்துக்கு நேரடி விளக்கம் அளிக்க அவர் மறுத்துவிட்டார்.

மூலம்: SeithipunalSeithipunal-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics