PulseNews
அரசியல்

அமெரிக்காவின் ஜாவெலின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்கும் இந்தியா: இதன் பயங்கர சக்தி என்ன?

எழுதியவர்: அம்ரிதா நாயக் தத்தா ஜாவெலின் என்பது ஒருவரே சுமந்து செல்லக்கூடிய, இலக்கைத் தாக்கிவிட்டு உடனடியாக நகர்ந்துவிடக்கூடிய (Fire-and-forget), நடுத்தர வரம்பு கொண்ட பீரக்கி வண்டி எதிர்ப்பு ஆயுத அமைப்பாகும். இது எதிரிகளின் தற்போதைய மற்றும் எதிர்கால கவச வாகனங்களை அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் படிக்க: இந்தியா அமெரிக்காவிடமிருந்து ‘ஜாவெலின்’ ரக பீரக்கி வண்டி (Tank) எதிர்ப்பு வழிகாட்டப்பட்ட ஏவுகணை அமைப்பை (Anti-tank guided missile system) வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது. அமெரிக்காவின் வெளிநாட்டு ராணுவ விற்பனைச் செயல்முறை (எஃப்.எம்.எஸ்) மூலம் இந்த ஆயுதங்களை வாங்குவதற்காக, இந்திய ராணுவம் வெள்ளிக்கிழமை 'சலுகை மற்றும் ஏற்பு கடிதத்தில்' கையெழுத்திட்டது. இந்திய ராணுவத்தின் இந்த முடிவை வரவேற்பதாக தெரிவித்துள்ள வாஷிங்டன், இந்த மைல்கல் அமெரிக்க மற்றும் இந்திய ராணுவங்களுக்கு இடையிலான நிலையான கூட்டாண்மையை பிரதிபலிக்கிறது என்று கூறியுள்ளது. மேலும், இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் பாதுகாப்புத் துறைகளுக்கு இடையே எதிர்கால ஒத்துழைப்புக்கான கதவைத் திறக்கிறது என்றும் அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. "இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கையெழுத்து, இந்திய ராணுவத்திற்கு அமெரிக்கா வழங்கி வரும் ஆதரவின் ஆழத்தை வெளிப்படுத்துவதுடன், அமெரிக்க - இந்திய முதன்மை பாதுகாப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துகிறது. இது பரஸ்பர நன்மையளிக்கும் கூட்டு உற்பத்திக்கும், இரு நாடுகளின் பாதுகாப்புத் துறை கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான கூடுதல் வாய்ப்புகளுக்கும் வழிகோலுகிறது" என்று இந்தியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் குறிப்பிட்டது. BIG news! India plans to buy the battle-tested Javelin anti-tank system. Just as @secwar highlighted at the May 2026 Shangri-La Dialogue, this is a great step forward in the U.S.-India defense relationship and opens the door to co-production possibilities. The engagement between... — Ambassador Sergio Gor (@USAmbIndia) August 28, 2026 இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் கூறுகையில், "இந்த ஒப்பந்தம் மிகவும் ஆழமான, திறமையான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பாதுகாப்பு கூட்டுறவைப் பிரதிபலிக்கிறது. இது அமெரிக்க ஆதரவின் ஆழத்தை நிரூபிப்பதுடன், நமது பாதுகாப்புத் தொழில்கள் இணைந்து செயல்படுவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது" என்றார். மே மாதத்தில், அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்சேத், இந்தியாவுடன் இணைந்து ஜாவெலின் ஏவுகணைகளை ‘கூட்டு உற்பத்தி’ செய்ய அமெரிக்கா கடமைப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தார்; "நமது படைகளின் ஒட்டுமொத்த தயார்நிலையை மேம்படுத்துவதற்கான உண்மையான, உறுதியான நடவடிக்கைகள் இவை" என்று அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், அதிநவீன முன்னணி ஆயுத அமைப்பைக் கொண்டு மேற்கொள்ளப்படும் இத்தகைய கூட்டு உற்பத்தி, இருதரப்பு பாதுகாப்பு உறவை மேலும் ஆழமாக்குகிறது என்றும் அவர் கூறினார். முன்னதாக, இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் தருவாயில் உள்ளதை செர்ஜியோ கோர் உறுதிப்படுத்தியிருந்தார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், இந்த கொள்முதல் அமெரிக்க-இந்திய பாதுகாப்பு உறவில் ஒரு 'மிகப்பெரிய முன்னேற்றம்' என்றும், இது கூட்டு உற்பத்தி வாய்ப்புகளுக்கு கதவு திறக்கிறது என்றும் அறிவித்தார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுறவு இப்போது 'முன்நிகழ்ந்திராத உச்சத்தை' எட்டியுள்ளதாகவும் அவர் பிரகடனப்படுத்தினார். ஜாவெலின் அமைப்பை வாங்குவது கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவின் திட்டத்தில் இருந்தது. நவம்பர் மாதத்தில், 100 எஃப்.ஜி.எம்-148 (FGM-148) ஜாவெலின் ஏவுகணைகள், ஒரு ஜாவெலின் எஃப்.ஜி.எம்-148 ஏவுகணை (சோதனைப் பயன்பாட்டிற்கு), 25 ஜாவெலின் இலகுரக கட்டளை ஏவுதள அலகுகள் (LwCLU) அல்லது ஜாவெலின் பிளாக் 1 கட்டளை ஏவுதள அலகுகள் (CLU) மற்றும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்களை சுமார் 45.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்திருந்தது. ஜாவெலின் என்றால் என்ன? ஆர்.டி.எக்ஸ் மற்றும் லாக்ஹீட் மார்ட்டின் ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் தயாரிக்கப்படும் இது, ஒருவரே சுமந்து செல்லக்கூடிய, தாக்கிவிட்டு உடனடியாக நகர்ந்துவிடக்கூடிய, நடுத்தர வரம்பு கொண்ட பீரங்கி வண்டி எதிர்ப்பு ஆயுதமாகும். ராணுவ மொழியில், 'பயர் அண்ட் ஃபர்கெட்' (Fire-and-forget) என்றால், ஏவுகணையை ஏவிய பிறகு வீரர்கள் அந்த இடத்திலேயே நிற்க வேண்டிய அவசியமில்லை. 'மேன்-போர்ட்டபிள்' என்றால் வீரர்கள் அதைத் தங்களோடு எளிதாகச் சுமந்து செல்ல முடியும். இந்த இரண்டின் கலவையே இதை மிகவும் ஆபத்தான மற்றும் பயங்கரமான ஆயுதமாக மாற்றுகிறது. ஜாவெலின் ஏவுகணை, கவச வாகனங்கள் மற்றும் பலப்படுத்தப்பட்ட எதிரி முகாம்கள் உட்பட பரந்த அளவிலான இலக்குகளுக்கு எதிராகப் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்க ராணுவம் மற்றும் மெரைன்களால் பயன்படுத்தப்படுகிறது. மேலும், ரஷ்யாவுடனான தற்போதைய போரில் உக்ரைன் உட்பட பல சர்வதேச வாடிக்கையாளர்களையும் இது கொண்டுள்ளது. இந்தியா - அமெரிக்கா பாதுகாப்பு கூட்டாண்மை கடந்த சில ஆண்டுகளில், அமெரிக்காவின் ராணுவக் கொள்முதலைப் பொறுத்தவரை இந்தியா ஒரு முக்கிய சந்தையாக மாறியுள்ளது. இந்தக் காலகட்டத்தில் வாங்கப்பட்ட அல்லது தொடங்கப்பட்ட பரந்த அளவிலான கொள்முதல்களில் ஜாவெலின் அமைப்புகளும் அடங்கும் - இதில் 216 M982A1 எக்ஸ்காலிபர் (Excalibur) தந்திர உத்தி ஏவுகணைகளும் அடங்கும். மேலும் 6 போயிங் P-8I கடல்சார் ரோந்து மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் விமானங்களை வாங்கவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், அப்பாச்சி ஹெலிகாப்டர்களுக்கான ஆதரவு சேவைகள் மற்றும் உபகரணங்களை சுமார் 198.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்தது. கடந்த ஆண்டு, இந்தியா தனது MH60R ஹெலிகாப்டர்களின் ஐந்து ஆண்டு கால பராமரிப்பு ஆதரவுக்கான 'சலுகை மற்றும் ஏற்பு கடிதங்களில்' கையெழுத்திட்டது. அந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.7,995 கோடியாகும். மேலும் அக்டோபர் 2024-ல், 31 MQ-9B அதிநவீன ட்ரோன்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனுடன் MH-60R சீஹாக் பலநோக்கு ஹெலிகாப்டர்கள், அப்பாச்சி மற்றும் சினூக் ஹெலிகாப்டர்கள், சிக் சாயர் துப்பாக்கிகள் மற்றும் M777 அல்ட்ரா-லைட் ஹோவிட்சர் பீரங்கிகளுக்கான ஒப்பந்தங்களும் வரிசையில் உள்ளன. இவற்றுக்கெல்லாம் மத்தியில், கடந்த ஆண்டு அக்டோபரில், இந்தியாவும் அமெரிக்காவும் 'அமெரிக்க - இந்திய முதன்மை பாதுகாப்பு கூட்டாண்மைக்கான கட்டமைப்பில்' கையெழுத்திட்டன. இது பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையே நிலையான உறவை உணர்த்துகிறது.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
அமெரிக்காவின் ஜாவெலின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்கும் இந்தியா: இதன் பயங்கர சக்தி என்ன?
PulseNews சுருக்கம்

அமெரிக்காவிடமிருந்து ஜாவெலின் ரக பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இந்தியா இறுதி செய்துள்ளது. ஒருவரே சுமந்து செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணைகள், இலக்கைத் தாக்கியவுடன் உடனடியாக அங்கிருந்து நகரக்கூடிய (Fire-and-forget) திறன் கொண்டவை.

நடுத்தர வரம்பு கொண்ட இந்த ஏவுகணை அமைப்பு, எதிரிகளின் தற்போதைய மற்றும் எதிர்கால கவச வாகனங்களை அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அதிநவீன ஆயுதங்களை இந்திய ராணுவத்தில் சேர்ப்பதன் மூலம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics