‘வந்தே மாதரம்’ முதல் 2 சரணங்கள் மட்டும் ஏன்? காங்கிரஸ் முடிவின் பின்னணியில் உள்ள 1937 வரலாறு
யஷி, ஆசாத் ரஹ்மான் ‘வந்தே மாதரம்’... இந்த இரண்டு வார்த்தைகளே இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிகப்பெரிய உணர்வை ஏற்படுத்தியவை. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் மக்களை ஒன்றிணைத்த இந்தப் பாடல், இன்று மீண்டும் அரசியல் விவாதத்தின் மையமாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடலின் முதல் இரண்டு சரணங்களை மட்டும் பாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், காங்கிரஸ் தனது முடிவுக்கு 1937-ம் ஆண்டு எடுக்கப்பட்ட காங்கிரஸ் செயற்குழு தீர்மானத்தை காரணமாகக் கூறுகிறது. ஆங்கிலத்தில் வாசிக்க அப்படியானால், முதல் இரண்டு சரணங்களுக்கு மட்டும் என்ன சிறப்பு? மீதமுள்ள நான்கு சரணங்களில் அப்படி என்ன இருக்கிறது? இதன் பின்னணி என்ன? 1875-ல் உருவான பாடல் ‘வந்தே மாதரம்’ என்றால், ‘தாயே, உன்னை வணங்குகிறேன்’ என்று பொருள். இந்தப் பாடலை வங்காள எழுத்தாளர் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயர் 1875-ம் ஆண்டு சமஸ்கிருதம் கலந்த வங்காள மொழியில் எழுதினார். பின்னர் 1881-ல் வெளியான அவரது ‘ஆனந்தமடம்’ நாவலில் இந்தப் பாடல் இடம்பெற்றது. 18-ம் நூற்றாண்டின் இறுதியில் வங்காளத்தில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற சன்னியாசிகள் கிளர்ச்சியை பின்னணியாகக் கொண்டது அந்த நாவல். 1905-08 காலகட்டத்தில் நடைபெற்ற சுதேசி இயக்கத்தின் போது ‘வந்தே மாதரம்’ மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. படிப்படியாக அது இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய முழக்கமாக மாறியது. ஆனால், பாடலில் இடம்பெற்ற சில கருத்துகள் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த அறிஞர்களிடம் அப்போது முதலே எதிர்ப்பை ஏற்படுத்தின. 1937-ல் ஏன் முதல் இரண்டு சரணங்கள் மட்டும்? ‘வந்தே மாதரம்’ தொடர்பாக காங்கிரஸுக்குள்ளும் விவாதம் நடந்தது. சுபாஷ் சந்திர போஸ் இந்தப் பாடலை முழுமையாக ஆதரித்தார். அதே நேரத்தில் ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட தலைவர்கள் ரவீந்திரநாத் தாகூரிடம் இதுகுறித்து கருத்து கேட்டனர். தாகூர், பாடலின் முதல் பகுதி தாய்நாட்டின் அழகு, வளம் மற்றும் அதன் மீதான அன்பை வெளிப்படுத்துகிறது என்று குறிப்பிட்டார். ஆனால், முழுப் பாடலையும் அதன் பின்னணியுடன் சேர்த்துப் பார்க்கும்போது, சில பகுதிகள் முஸ்லிம்களின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையில் புரிந்துகொள்ளப்படலாம் என்றும் அவர் கூறினார். இதன் பின்னர் 1937 அக்டோபரில் காங்கிரஸ் செயற்குழு முக்கிய முடிவை எடுத்தது. தேசிய அளவிலான கூட்டங்களில் ‘வந்தே மாதரம்’ பாடும்போது முதல் இரண்டு சரணங்களை மட்டும் பாடலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. மீதமுள்ள சரணங்கள் பொதுவாகப் பாடப்படுவதில்லை என்றும், அவற்றில் சில மதக் கருத்துகள் இருப்பதால் இந்தியாவின் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களிடையே அது சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் காங்கிரஸ் விளக்கியது. மகாத்மா காந்தியின் நிலைப்பாடு என்ன? மகாத்மா காந்திக்கும் ‘வந்தே மாதரம்’ மீது மிகுந்த மரியாதை இருந்தது. அதேநேரத்தில், மத நல்லிணக்கம் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்தார். 1939-ம் ஆண்டு ‘ஹரிஜன்’ இதழில் எழுதிய காந்தி, கலப்பு மதத்தினர் பங்கேற்கும் கூட்டத்தில் யாராவது ‘வந்தே மாதரம்’ பாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், அந்தப் பாடலைப் பாடுவதையே தவிர்க்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்திருந்தார். அவரைப் பொறுத்தவரை, ஒரு பாடலைப் பாடுவதால் மக்களுக்குள் சண்டை ஏற்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. 1938-இல் ஹரிபுராவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸின் ஆண்டு மாநாட்டில் மகாத்மா காந்தி. காங்கிரஸின் தலைவர் சுபாஷ் சந்திர போஸ் அடையாளப் பட்டையை அணிந்துள்ளார்; அவருக்குப் பின்னால் டாக்டர் ராஜேந்திர பிரசாத் அமர்ந்திருக்கிறார்; போஸின் வலதுபுறத்தில் சர்தார் வல்லபாய் படேல் உள்ளார். (புகைப்படம்: விக்கிமீடியா காமன்ஸ்) அப்படியென்றால் அந்த 4 சரணங்களில் என்ன இருக்கிறது? இதுதான் இன்றைய சர்ச்சையின் முக்கிய காரணம். முதல் இரண்டு சரணங்களில் தாய்நாட்டின் இயற்கை அழகு, வளம் மற்றும் தாயின் மீதான அன்பு போன்ற கருத்துகள் முக்கியமாக இடம்பெறுகின்றன. ஆனால் அடுத்தடுத்த சரணங்களில் மொழியும் காட்சிகளும் மாறுகின்றன. மூன்றாவது சரணத்தில், தாய்நாட்டைப் பாதுகாக்க கோடிக்கணக்கான கரங்கள் ஆயுதம் ஏந்தத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. நான்காவது சரணத்தில், தாய்நாட்டின் உருவம் வழிபாட்டுத் தலங்களில் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. ஐந்தாவது சரணத்தில், தாய்நாடு துர்கை, லட்சுமி, சரஸ்வதி போன்ற இந்து தெய்வங்களுடன் ஒப்பிடப்படுகிறது. இதுவே முஸ்லிம் அறிஞர்களின் முக்கிய எதிர்ப்புக்குக் காரணமாக அமைந்தது. இஸ்லாமிய நம்பிக்கையில் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வணங்குவது ஏற்றுக்கொள்ளப்படாது. எனவே, ‘தாய் இந்தியா’வை ஒரு தெய்வமாக சித்தரிக்கும் வகையிலான வரிகள் மத உணர்வுகளைப் பாதிக்கக்கூடும் என்ற எதிர்ப்பு எழுந்தது. வரலாற்றாசிரியர் தனிகா சர்க்கார் கூறியுள்ளபடி, பாடலின் பிற்பகுதி ‘போருக்கான அழைப்பாக’ மாறுகிறது என்றும், ‘ஆனந்தமடம்’ நாவலின் பின்னணியில் முஸ்லிம்கள் எதிரிகளாக சித்தரிக்கப்படுவதால் அந்தப் பகுதிகள் முஸ்லிம்களுக்கு அந்நியமாகத் தோன்றக்கூடும் என்றும் கூறப்படுகிறது. சுதந்திரத்துக்குப் பிறகும் தொடர்ந்த விவாதம் 1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் ‘வந்தே மாதரம்’ தொடர்பான விவாதம் முடிவுக்கு வரவில்லை. இந்தப் பாடலையே தேசிய கீதமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. ஆனால் ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட தலைவர்கள் ‘ஜன கண மன’ பாடலை தேசிய கீதமாகத் தேர்வு செய்வதில் ஆதரவாக இருந்தனர். ‘வந்தே மாதரம்’ பாடலை இசைக்குழுவுடன் அமைப்பது சிரமமாக இருக்கும் என்பதும் நேரு கூறிய காரணங்களில் ஒன்று. இறுதியில் ‘ஜன கண மன’ தேசிய கீதமாகத் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் ‘வந்தே மாதரம்’ சுதந்திரப் போராட்டத்தில் ஆற்றிய வரலாற்றுப் பங்கை அங்கீகரிக்கும் வகையில் அதற்கும் உரிய மரியாதை வழங்கப்பட்டது. 1950 ஜனவரி 24-ம் தேதி அரசியல் நிர்ணய சபையில் ராஜேந்திர பிரசாத் இதைத் தெளிவுபடுத்தினார். ‘ஜன கண மன’ தேசிய கீதமாக இருக்கும் என்றும், சுதந்திரப் போராட்டத்தில் வரலாற்றுப் பங்கு வகித்த ‘வந்தே மாதரம்’ அதற்கு சமமான மரியாதையுடன் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இப்போது மீண்டும் ஏன் சர்ச்சை? இப்போது பாஜக ‘வந்தே மாதரம்’ பாடலின் ஆறு சரணங்களையும் பாட வேண்டும் என்ற நிலைப்பாட்டை வலியுறுத்தி வருகிறது. அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் ஆறு சரணங்களையும் பாடுவதற்கான நடைமுறைகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்கு மத்தியில், நாடாளுமன்றத்தில் 2026-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்தின் மூலம் ‘வந்தே மாதரம்’ பாடலுக்கும் தேசிய கீதமான ‘ஜன கண மன’ பாடலுக்கு வழங்கப்படும் சட்டப் பாதுகாப்புக்கு இணையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தேசியப் பாடல் பாடப்படுவதை திட்டமிட்டு தடுப்பது அல்லது அதை பாடும் கூட்டத்தில் இடையூறு செய்வது குற்றமாக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில்தான் காங்கிரஸ் மீண்டும் தனது பழைய நிலைப்பாட்டை முன்வைத்துள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், 1950 ஜனவரி 24-ம் தேதி ராஜேந்திர பிரசாத் அறிவித்தது முதல் இரண்டு சரணங்களைக் கொண்ட ‘வந்தே மாதரம்’தான் என்று கூறியுள்ளார். மேலும், 2025 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் ‘வந்தே மாதரம்’ குறித்து விவாதம் நடந்ததே தவிர, முழு ஆறு சரணங்களையும் தேசியப் பாடலாக ஏற்றுக்கொள்ளும் தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால், ‘வந்தே மாதரம்’ விவகாரம் இப்போது ஒரு பாடலைப் பாடுவது அல்லது பாடாமல் இருப்பது என்ற எல்லையைத் தாண்டி, வரலாறு, மத உணர்வு, தேசிய அடையாளம் மற்றும் அரசியல் ஆகிய அனைத்தும் கலந்த விவாதமாக மாறியுள்ளது. ஒருபுறம், சுதந்திரப் போராட்டத்தின் உணர்வை பிரதிபலித்த பாடல் என்பதால் முழுமையாகப் பாட வேண்டும் என்ற வாதம் உள்ளது. மறுபுறம், நாட்டின் அனைத்து மதங்களையும் சேர்ந்த மக்களை உள்ளடக்கிய தேசிய நிகழ்வுகளில் சர்ச்சைக்குரிய பகுதிகளைத் தவிர்த்து முதல் இரண்டு சரணங்களை மட்டும் பாடியதே சுதந்திரப் போராட்ட காலத்தில் காங்கிரஸ் எடுத்த முடிவு என்ற வாதமும் உள்ளது. அதனால், ‘வந்தே மாதரம்’ குறித்த இன்றைய அரசியல் சர்ச்சையைப் புரிந்துகொள்ள 1937-ம் ஆண்டின் அந்த முடிவையும், பாடலின் ஆறு சரணங்களின் உள்ளடக்கத்தையும் ஒன்றாகப் பார்ப்பது முக்கியம்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் அடையாளமாக விளங்கிய ‘வந்தே மாதரம்’ பாடல், தற்போது மீண்டும் அரசியல் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சிகளில் இந்தப் பாடலின் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே பாட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முடிவை பாஜக கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி தனது இந்தத் தீர்மானத்திற்கு 1937-ம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட வரலாற்று முடிவே காரணம் என்று விளக்கம் அளித்துள்ளது.