‘நினைவேந்தல் நிகழ்வை தடுத்து நிறுத்துவது ஏன்?’ - தவெக அரசுக்கு மாணவர் அமைப்பு கண்டனம்!
பெசன்ட் நகரில் தங்கை அனிதாவின் 9ஆம் ஆண்டு நினைவேந்தலுக்கு காவல்துறை அனுமதி மறுத்திருப்பதை தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பு வன்மையாக கண்டித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாவது, ‘இன்று (01/09/2026) சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெறவிருந்த நீட் எதிர்ப்புப் போராளி தங்கை அனிதாவின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுக்கு காவல்துறை கடைசி நேரத்தில் அனுமதி மறுத்துள்ளது. இதனை தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பு (TYSF) சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். திருவிழா, மக்கள் கூடும் இடம், சட்டம்–ஒழுங்கு மற்றும் பொது அமைதி போன்ற காரணங்களைக் கூறி, ஜனநாயக அறவழியிலான அரசியல் செயல்பாடுகளை முடக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. வரும் வெள்ளிக்கிழமைதான் திருவிழா நடைபெறவுள்ளது. நினைவஞ்சலி செலுத்துவதற்கான இடமும் கடற்கரையின் மற்றொரு பகுதியில் அமைந்துள்ளது. மேலும், எங்களது நிகழ்வு மெழுகுவர்த்தி ஏற்றி அமைதியான முறையில் நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு மட்டுமே. இதற்காக 10 நாட்களுக்கு முன்பே காவல்துறையிடம் அனுமதி கோரி கடிதம் அளித்திருந்த நிலையில், 31/08/2026 அன்று காவல்துறையினர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அனுமதி மறுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர். மாற்று இடத்தை ஏற்பாடு செய்வதற்குக்கூட போதிய கால அவகாசம் வழங்காமல், வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவேந்தல் நிகழ்வை கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்துவது எந்த வகையில் நியாயமான நடைமுறையாகும்? கடந்த காலங்களிலும் மக்கள் இயக்கங்கள் முன்னெடுத்த பல்வேறு ஜனநாயக அறவழிப் போராட்டங்கள் மற்றும் நிகழ்வுகளுக்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதனால் பொருளாதார இழப்பு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், ஜனநாயகச் செயல்பாடுகளை முன்னெடுக்கும் மக்கள் இயக்கங்களுக்கு தேவையற்ற மன அழுத்தமும் ஏற்படுத்தப்படுகிறது. இத்தகைய நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். நீட் விலக்கு தொடர்பான தீர்மானங்கள் உள்ளிட்ட மக்கள் போராட்டங்களுக்கான அரசின் ஆதரவை கூட்டமைப்பின் சார்பில் ஏற்கனவே பாராட்டியுள்ளோம். அதேவேளை, நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் மட்டுமல்லாமல், நீட் போன்றே கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கும் இந்திய அளவிலான நுழைவுத் தேர்வு உள்ளிட்ட பல்வேறு அழுத்தங்கள் எதிர்காலத்தில் உருவாகக்கூடும். இதுபோன்ற கல்வி மற்றும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக இளைஞர்களும் பொதுமக்களும் ஒன்றிணைந்து ஜனநாயக அறவழியில் தொடர்ந்து போராடுவதன் மூலமே வெற்றி பெற முடியும். எனவே, ஜனநாயக அறவழிப் போராட்டங்கள் மற்றும் மக்கள் நிகழ்வுகளை நடத்துவதற்கு தமிழக அரசு நிரந்தரமான, உரிய இடங்களை ஒதுக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் இயக்கங்கள் எதிர்கொள்ளும் இதுபோன்ற கடைசி நேர அனுமதி மறுப்புகளைத் தவிர்க்க முடியும். காவல்துறை அனுமதி மறுத்துள்ளதால், இன்று மாலை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெறவிருந்த தங்கை அனிதாவின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு தலைவர்கள் பெரியார் திடலில் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெறவிருந்த நீட் எதிர்ப்புப் போராளி அனிதாவின் 9-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுக்கு, காவல்துறை கடைசி நேரத்தில் அனுமதி மறுத்துள்ளது. இதற்கு தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வை காவல்துறை தடுத்து நிறுத்தியதை வன்மையாகக் கண்டிப்பதாக அக்கட்டமைப்பு அறிவித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இது குறித்துத் தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பு தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.