PulseNews
அரசியல்

'தமிழகத்தின் ஒற்றைக் குரல்'...! - நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் நிறைவேறிய அதிரடித் தீர்மானம்...!

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு முறையை நீக்கி, பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் அரசினர் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான 3-வது நாள் விவாதம் சட்டசபையில் இன்று நடைபெற்றது. விவாதம் நிறைவடைந்ததை தொடர்ந்து, மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கோ.க.அருண்ராஜ், நீட் தேர்வு முறைக்கு எதிரான அரசினர் தனித்தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார். நீட் தேர்வு நடைமுறை சமூகநீதி, சமத்துவம் மற்றும் மாநிலங்களின் உரிமைகளை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.குறிப்பாக தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்கள், கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு மருத்துவக் கல்விக்கான வாய்ப்புகளில் இந்தத் தேர்வு முறை பெரும் தடையாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். பள்ளிக் கல்வியில் மாணவர்கள் பெற்ற அறிவு மற்றும் திறமையை விட, தனியார் பயிற்சி மையங்களில் பெறப்படும் பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் சூழலை நீட் உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.நீட் தேர்வை மையமாகக் கொண்டு அதிக கட்டணம் வசூலிக்கும் பயிற்சி மையங்கள் பெருகியுள்ளதாகவும், இதனால் மாணவர்கள் பள்ளிப் பாடங்களை ஆழமாகக் கற்றுக்கொள்வதைவிட நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 12 ஆண்டுகள் பள்ளிக் கல்வியில் மாணவர்கள் கற்றுக்கொண்ட அறிவையும், அவர்களின் கல்வித் திறனையும் புறக்கணித்து, ஒரே ஒரு நாள் நடைபெறும் நுழைவுத் தேர்வின் முடிவை அடிப்படையாகக் கொண்டு உயர்கல்வி வாய்ப்பை தீர்மானிப்பது நியாயமான நடைமுறை அல்ல என்றும் அவர் தெரிவித்தார். தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற நோக்கில், 2021-ம் ஆண்டு தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை சட்டமுன்வடிவை தமிழக சட்டசபை ஒருமனதாக நிறைவேற்றியது.ஆனால், அந்த சட்டமுன்வடிவுக்கு இதுவரை ஜனாதிபதியின் ஒப்புதல் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.இதனால், தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பை பாதுகாக்கும் வகையில் நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நீட் தேர்வை சுற்றி தொடர்ந்து எழுந்து வரும் வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடு உள்ளிட்ட புகார்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.2026-ம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைகளும், அதனைத் தொடர்ந்து மறுதேர்வு நடத்தப்பட்ட சூழலும், இந்தத் தேர்வு முறையின் மீதான நம்பகத்தன்மையை மேலும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இத்தகைய சூழலில், நீட் தேர்வு முறையை முழுமையாக ரத்து செய்வதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக சட்டசபை வலியுறுத்தியது.நீட் தேர்வு முறையை அகற்றும் வகையில், தேசிய மருத்துவ ஆணையம் தொடர்பான மத்திய சட்டம், இந்திய மருத்துவ முறைகளுக்கான தேசிய ஆணையம் தொடர்பான சட்டம், ஓமியோபதி தொடர்பான தேசிய ஆணையச் சட்டம் உள்ளிட்ட தொடர்புடைய மத்திய சட்டங்களில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது. இதன் மூலம், பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.அரசினர் தனித்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். அதேவேளையில், மற்ற கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.இதையடுத்து, நீட் தேர்வு முறையை அகற்ற வலியுறுத்தி கொண்டு வரப்பட்ட அரசினர் தனித்தீர்மானம் சட்டசபையின் முடிவுக்கு விடப்பட்டது. தீர்மானத்திற்கு எதிராக யாரும் வாக்களிக்காத நிலையில், அது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தார்.

Seithipunal13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
'தமிழகத்தின் ஒற்றைக் குரல்'...! - நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் நிறைவேறிய அதிரடித் தீர்மானம்...!
PulseNews சுருக்கம்

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு முறையை ரத்து செய்து, பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் அரசினர் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் அவையில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

2026-2027-ஆம் நிதியாண்டிற்கான பொது மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான மூன்றாவது நாள் விவாதங்கள் சட்டப்பேரவையில் நடைபெற்றன. விவாதங்கள் முடிவடைந்த நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கோ.க.அருண்ராஜ் நீட் தேர்வுக்கு எதிரான இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

மூலம்: SeithipunalSeithipunal-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics