PulseNews
அரசியல்

இ. டபிள்யு. எஸ் இட ஒதுக்கீடு கேட்ட தளவாய் சுந்தரம்; அ.தி.மு.க இதை எதிர்ப்பதாக அறிவித்த சி.வி சண்முகம்: சட்ட சபையில் பரபரப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான (EWS) இடஒதுக்கீடு தொடர்பாக அதிமுக உறுப்பினர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு அவையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. சட்டப்பேரவையில் பேசிய அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான இடஒதுக்கீடு என்ற சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வந்த பிறகும் அதனை எதிர்த்து நீதிமன்றத்திற்குச் சென்ற ஒரே இயக்கம் தி.மு.க.தான். கேரளாவில் EWS பிரிவினருக்கு 5% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தற்போது மக்கள்தொகை கணக்கெடுப்பு நடந்து வருவதால், அதன் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கும் EWS பிரிவினருக்கு 5% இடஒதுக்கீடாவது பெற்றுத்தர சட்டத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அப்போது குறுக்கிட்டுப் பேசிய முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. உறுப்பினருமான சி.வி.சண்முகம் இதற்கு மறுப்பு தெரிவித்தார். சமூக நீதியைக் காத்த இயக்கம் அ.தி.மு.க. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்டதுதான் 69% இடஒதுக்கீடு. EWS முறையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று ஜெயலலிதா தெளிவாகத் தெரிவித்திருந்தார். தொடர்ந்து 10% EWS இடஒதுக்கீட்டை அ.தி.மு.க. இன்று வரை ஏற்றுக்கொள்ளவில்லை. அதைக் கொண்டுவந்தது மத்திய அரசுதான்; பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருந்தபோதும் கூட அ.தி.மு.க EWS-ஐ ஏற்றுக்கொள்ளவில்லை. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டுச் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டபோது, அது ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருந்தது. அப்போது, 7.5% கோப்பில் கையெழுத்திட வேண்டும் என்றால் 10% EWS இடஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஆளுநர் நிபந்தனை விதித்து, மசோதாவில் கையெழுத்திடாமல் காலம் தாழ்த்தினார். இதையடுத்து, அரசமைப்புச் சட்டப்பிரிவு ஆர்ட்டிகிள் 162-ஐப் பயன்படுத்தி அப்போதைய முதலமைச்சர், 7.5% இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றினார். எனவே, தளவாய் சுந்தரம் கூறுவது அவருடைய தனிப்பட்ட கருத்து; இதில் அதிமுகவிற்கு உடன்பாடில்லை" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்துப் பேசிய தளவாய் சுந்தரம், இது எனது தனிப்பட்ட கருத்து கிடையாது. இது குறித்து ஏற்கனவே பலமுறை முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து மட்டும்தான் பேசினேன். தற்போது மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெற்று வருவதன் காரணமாக, தமிழ்நாட்டிற்கு 5% EWS இடஒதுக்கீட்டைப் பெற்றுத்தர வேண்டும் என்றுதான் கேட்டுள்ளேன் என்று தெரிவித்தார். ஒரே கட்சியை சேர்ந்த 2 மூத்த உறுப்பினர்கள் இடஒதுக்கீடு விவகாரத்தில் அவையிலேயே மாறுபட்ட கருத்துகள் முன்வைத்ததால் சட்டப்பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
இ. டபிள்யு. எஸ் இட ஒதுக்கீடு கேட்ட தளவாய் சுந்தரம்; அ.தி.மு.க இதை எதிர்ப்பதாக அறிவித்த சி.வி சண்முகம்: சட்ட சபையில் பரபரப்பு
PulseNews சுருக்கம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான (EWS) இடஒதுக்கீடு குறித்த விவாதத்தின் போது, அ.தி.மு.க உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இ.டபிள்யு.எஸ் இட ஒதுக்கீட்டை ஆதரித்து தளவாய் சுந்தரம் பேசிய நிலையில், அதனை அ.தி.மு.க எதிர்ப்பதாக சி.வி. சண்முகம் அறிவித்தது அவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மத்திய அரசு கொண்டு வந்த பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீட்டு சட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் சென்ற ஒரே இயக்கம் தி.மு.க தான் என்று தளவாய் சுந்தரம் குறிப்பிட்டார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகும் தி.மு.க அதனை எதிர்ப்பதாகக் குறிப்பிட்ட அவர், கேரளாவில் இ.டபிள்யு.எஸ் பிரிவினருக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவதையும் சுட்டிக்காட்டினார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics