PulseNews
அரசியல்

தலா ஒரு தொகுதிக்கு மாவட்டச் செயலாளர்; விஜய பாஸ்கர்கள் தலையில் இடி: வருத்தம் தெரிவித்த ஆர்.பி உதயகுமார்

அ.தி.மு.க.வில் ராஜாவாக வலம் வந்த விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன் போன்ற முன்னாள் அமைச்சர்கள் தற்போது த.வெ.க.வில் சாதாரண பதவி பெற்று அவதிப்படுவதாக ஆர்.பி. உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதோடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் பேசி இருப்பதாவது; "நேற்றைய தினம் த.வெ.க கட்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திரைப்படத்தில் ஒரு நகைச்சுவை காட்சி வரும் 'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்' என்பது போல, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ராஜாவாக வலம் வந்த விராலிமலை விஜயபாஸ்கர், கரூர் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன் போன்ற முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் த.வெ.கவில் கூஜாக்களாக மாறி அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். வெகுமானத்தை எதிர்பார்த்து போனவர்கள் இன்றைக்கு தன்மானத்தை இழந்து நிற்கிறார்கள். விராலிமலை விஜயபாஸ்கர் போன்றவர்களுக்கெல்லாம் அதிமுகவில் இருக்கிறபோது, தொண்டர்கள் உழைத்து சம்பாதித்த பணத்தில் ரோஜா மாலைகளையும், பொன்னாடைகளையும் அணிவித்து கைகளில் வீரவாளும் செங்கோலும் கொடுத்து 'இந்த நாட்டை ஆளுகின்ற ராசா' என்று மனதார வாழ்த்திய அந்த காட்சிகள் எல்லாம் நமக்கு நினைவுக்கு வருகிறது. அப்படி அழகு பார்த்த இயக்கத்தை தள்ளி வைத்துவிட்டு, தவெகவிற்கு சென்ற நீங்கள் இப்போது அலங்கோலமாக மாறிவிட்டீர்கள். இன்றைக்கு சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆளுமை மிக்க பதவியை எதிர்பார்த்து காத்திருந்து, 'முதல்வர் விஜய்யின் கருணை பார்வை ஒரு முறை நம் மீது பட்டுவிடாதா, அதன் மூலம் நமக்கு சாப விமோசனம் கிடைத்துவிடாதா' என்று தவமாய் தவமிருந்த அதிமுகவின் முன்னாள் போர் படைத் தளபதிகளுக்கு இப்போது தவெகவில் என்ன பதவி கொடுத்துள்ளார்கள்? அவர்கள் இனிமேல் போருக்கு செல்லத் தேவையில்லை; போர் கருவிகளைத் துடைத்து சுத்தப்படுத்தி வைக்கின்ற அலங்காரப் பதவிகளைத்தான் முதல்வர் விஜய் வாரி வழங்கி இருக்கிறார். மாவட்ட செயலாளர் அல்லது மாவட்ட தலைவர்கள் என்றுதான் இதுவரை கேள்விப்பட்டுள்ளோம்; ஆனால் 'மாவட்ட அமைப்பு செயலாளர்' என்ற பதவி இதுவரை கேள்விப்படாத செய்தியாக இருக்கிறது. கொள்கையை, கோட்பாடுகளை, லட்சியத்தை மற்றும் குறிப்பாய் நன்றியை மறந்தவர்களுக்கு திருநெல்வேலி அல்வா கிண்டி கொடுத்துவிட்டார் விஜய். ஆகையால்தான், இருக்கிற இடத்தில் இருந்தால் மட்டுமே எல்லோருக்கும் மரியாதை என்பதை நேற்று தவெக கட்சியின் அறிவிப்பு உணர்த்தியுள்ளது. இதுபோன்று காலம் தகுந்த தீர்ப்புகளை வழங்கும் என்பதற்கு விஜயபாஸ்கரின் பரிதாபங்கள் நமக்கு ஒரு பாடமாக இருக்கிறது." இவ்வாறு ஆர்.பி. உதயகுமார் அந்த வீடியோவில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

The Indian Express16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
தலா ஒரு தொகுதிக்கு மாவட்டச் செயலாளர்; விஜய பாஸ்கர்கள் தலையில் இடி: வருத்தம் தெரிவித்த ஆர்.பி உதயகுமார்
PulseNews சுருக்கம்

அதிமுகவில் முன்னாள் அமைச்சர்களாக வலம் வந்த சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு மற்றும் உடுமலை ராதாகிருஷ்ணன் போன்றோர், தற்போது தவெகவில் இணைந்து சாதாரண பதவிகளைப் பெற்று அவதிப்படுவதாக ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். தவெகவில் இவர்களுக்கு 'மாவட்ட அமைப்பு செயலாளர்' போன்ற முக்கியத்துவமற்ற பதவிகளே வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுகவில் ராஜாவாக மதிக்கப்பட்ட இவர்கள், பதவி மற்றும் ஆதாயம் எதிர்பார்த்து சென்றதால் தற்போது தன்மானத்தை இழந்து நிற்பதாக அவர் சாடியுள்ளார். நன்றியை மறந்து சென்றவர்களுக்கு தவெக தகுந்த பாடம் புகட்டியுள்ளதாகக் குறிப்பிட்ட உதயகுமார், இருக்கும் இடத்தில் இருந்தால்தான் மரியாதை கிடைக்கும் என்பதை இவர்களின் தற்போதைய நிலை உணர்த்துவதாகத் தெரிவித்துள்ளார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics