“நீட் தேர்வு முறையை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்” - சட்டப் பேரவையில் தனித் தீர்மானம்!
நீட் தேர்வு முறையை முற்றிலும் ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ் தனித் தீர்மானத்தை இன்று (11.08.2026) தாக்கல் செய்து உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது,“தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு முறையான நீட், சமூக நீதி, சமத்துவம் மற்றும் மாநிலங்களின் உரிமைகளுக்கு எதிரானது என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்கள், கிராமப்புற மற்றும் சமூகப் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் ஆகியோரின் மருத்துவக் கல்வி வாய்ப்புகளை இத்தேர்வு முறை பெரிதும் பாதிக்கிறது. நீட் தேர்வானது வரம்பின்றி அதிக அளவில் கட்டணம் வசூலிக்கும் பயிற்சி மையங்கள் பெருகுவதற்கு வழிவகுத்துள்ளது. மாணவர்களின் கவனத்தை பள்ளிப் பாடத்திட்டத்தைப் பயில்வதிலிருந்து திசைதிருப்பி, நீட் பயிற்சியில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்த கட்டாயப்படுத்துகிறது. 12 ஆண்டுகள் பள்ளிக் கல்வியைப் புறந்தள்ளி, ஒரு நாள் நுழைவுத் தேர்வே மாணவர்களின் உயர்கல்வியைத் தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நீட் தேர்விலிருந்து மாநிலத்திற்கு விலக்கு அளிக்கும் வகையில், 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்ட முன்வடிவை தமிழ்நாடு சட்டப்பேரவை ஒருமனதாக நிறைவேற்றி இருந்தும், குடியரசுத் தலைவரால் அச்சட்ட முன்வடிவிற்கு ஒப்புதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடர் வினாத்தாள் கசிவுகள் மற்றும் முறைகேடுகளால் நீட் இளநிலை 2026 தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு நடத்தப்பட்ட நிலையில், லட்சக்கணக்கான மாணவர்களுக்கு சொல்லொணாத் துயரமும், இளம் மாணவர்களின் உயிரிழப்பும் ஏற்பட்டு, நாடு முழுவதும் உள்ள மாணவர்களின் நம்பிக்கையை இத்தேர்வு முறை முற்றிலும் இழந்துள்ளது. எனவே, இத்தேர்வு முறை அகற்றப்பட வேண்டும். நீட் தேர்வுகளில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் முறைகேடுகளை கருத்தில் கொண்டு, நீட் நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்யும் வகையில், 2019ஆம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணையச் சட்டம், 2020ஆம் ஆண்டு இந்திய மருத்துவ முறைகளுக்கான தேசிய ஆணையச் சட்டம், 2020ஆம் ஆண்டு ஹோமியோபதிக்கான தேசிய ஆணையச் சட்டம் மற்றும் தொடர்புடைய பிற மத்திய சட்டங்களில் தேவையான திருத்தங்களை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது. இதன் மூலம், மாணவர்கள் 12ஆம் வகுப்பு தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மாநிலத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள இயலும் என்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன்” எனத் தெரிவித்தார்.

நீட் தேர்வு முறையை முற்றிலுமாக ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று தனித் தீர்மானத்தைத் தாக்கல் செய்து உரையாற்றினார்.
நீட் தேர்வு முறையானது சமூக நீதி, சமத்துவம் மற்றும் மாநிலங்களின் உரிமைகளுக்கு எதிராக இருப்பதாகத் தமிழக அரசு தொடர்ந்து நிலைப்பாட்டை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார். குறிப்பாகத் தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் மற்றும் சமூக, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய கிராமப்புற மாணவர்களின் நலனைப் பாதிக்கும் வகையில் இந்தத் தேர்வு முறை அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.