அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா ஏற்புக்கு எதிரான வழக்கு : உயர் நீதிமன்றத்தில் காரசார வாதம்!
அதிமுகவின் கொறடா உத்தரவை மீறி த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாகக் கூறி, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆறு பேருக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்தது. இந்நிலையில், அவர்களுடைய ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல். ரவி ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மதிகாரி அமர்வு முன்பு இன்று (01.09.2026) மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “இந்த வழக்கில் சபாநாயகர் தரப்பில் ஏற்கனவே அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ராஜினாமா செய்தவர்கள் சுய விருப்பத்துடன் பதவி விலகுகிறார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு, அது உறுதி செய்யப்பட்ட பிறகே ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விசாரணை வெறும் சம்பிரதாயமாகவே நடைபெற்றுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் கடமையை நிறைவேற்றும் வகையில் அர்த்தமுள்ள எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை” என்று வாதிட்டனர். மேலும், “ராஜினாமா கடிதங்களை அளித்த சில நிமிடங்களிலேயே அவர்கள் தலைமைச் செயலகத்தில் அமைச்சரை சந்தித்து த.வெ.க.வில் இணைந்துவிட்டனர். ஆனால், இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தாமல் அவர்களின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல், ராஜினாமாவை ஏற்கும் முன்னர் தகுதி நீக்கக் கோரி புகார் அளித்த மனுதாரர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு எந்தவித நோட்டீசும் அனுப்பப்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது” என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கோப்புப்படம் இதனையடுத்து சபாநாயகர் தரப்பில் வாதிடுகையில், “ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டதால், அதன்பிறகு தகுதி நீக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ராஜினாமா சட்டப்படி செல்லுபடியானதாக இருந்தால், ஒரு எம்.எல்.ஏ. பதவியில் நீடிக்க வேண்டும் என்று சபாநாயகர் வற்புறுத்த முடியாது. ராஜினாமாவை ஏற்காமல் இருப்பது அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனது கடமையைச் செய்யத் தவறியதாகிவிடும். மேலும், எம்.எல்.ஏ. ஒருவர் சுய விருப்பத்துடன் ராஜினாமா செய்தாரா என்பதை மட்டுமே சபாநாயகர் விசாரிக்க முடியும்” என வாதிடப்பட்டது. மேலும் இந்த வழக்கில் ராஜினாமா செய்த ஆறு எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஒருவர் எம்.எல்.ஏ.வாக இருந்து கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு வேறு கட்சிக்கு ஆதரவளிப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சியில் இணைவது ஜனநாயக அரசியலின் ஒரு பகுதியாகும். எனவே, எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதால், அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை செல்லத்தக்கதல்ல. அவர்களுடைய ராஜினாமா உண்மையானது ஆகும். சுய விருப்பத்தின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டது என்றும்” தெரிவித்தார். மேலும், “ஒருவேளை ராஜினாமா கடிதங்கள் வேறு நபர் மூலம் சபாநாயகருக்கு அனுப்பப்பட்டிருந்தால், அவற்றின் உண்மைத் தன்மை குறித்து சபாநாயகர் விசாரணை நடத்தலாம். ஆனால், எம்.எல்.ஏ.க்கள் நேரில் சந்தித்து கைப்பட எழுதி ராஜினாமா கடிதங்களை அளித்துள்ளதால், அதன் உண்மைத் தன்மையை சந்தேகிக்க முடியாது. எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை கேள்விக்குட்படுத்தும் அதிகாரம் தொகுதி மக்களுக்கு மட்டுமே உள்ளது” என்றும் வாதிடப்பட்டது. சட்டப்பேரவை செயலர் தரப்பில் வாதிடுகையில், “எம்.எல்.ஏ.க்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் தற்போது பதவியை ராஜினாமா செய்துள்ளதால், அந்த ராஜினாமாவை சபாநாயகர் ஏற்காமல் இருக்க முடியாது” எனத் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளனர்.

அதிமுகவின் கொறடா உத்தரவை மீறி, த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்த ஆறு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், அந்த எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதை எதிர்த்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் எம்.எல். ரவி ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மதிகாரி தலைமையிலான அமர்வில் இன்று (01.09.2026) விசாரணைக்கு வந்தன. விசாரணையின் போது, சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்யக் கோரும் இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் காரசாரமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன.