ஆதவ் Vs உதய் 900 கோடி மோதல்! உண்மை என்ன?
ச ட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் முக்கியப் பிரச்சனைகளுக்கு பெரும்பாலும் வாய் திறப்பதில்லை முதல்வர் விஜய். அமைச்சர்களை விட்டே ஆழம் பார்க்கிறார். குறிப்பாக, தி.மு.க.வுக்கு எதிராக த.வெ.க. அமைச்சர்கள் ஆவேசம் காட்டுகின்றனர். அவையில் இல்லாதவர்கள் குறித்து விவாதிப்பது பேரவை மரபு அல்ல! ஆனால், அந்த மரபுகளை உடைத்துக்கொண்டிருக் கிறார்கள் த.வெ.க. அமைச்சர்கள். அதனை ரசிக்கவும் செய்கிறார் விஜய். அந்த வகையில், 900 கோடி ரூபாய் விவகாரம் த.வெ.க. -தி.மு.க. இடையே கடும் மோதலை உருவாக்கியது. பேரவையில் உருவான மோதல், தற்போது பொதுவெளியிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. திருத்தப்பட்ட பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீது கடந்த வெள்ளிக் கிழமை நடந்த விவாதங்களின் போது, டாஸ்மாக் வருவாய் குறித்த பிரச்சனையை எதிர்க்கட்சிகள் எழுப்பினர். அதற்கு மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் விக்னேஷ், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் பதில் தந்தனர். அருண்ராஜின் குற்றச்சாட்டுக்கு தி.மு.க. தரப்பில் ஆதாரம் கேட்கப்பட்டது. அப்போது பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "உறுப்பினர்கள் ஆதாரம் கேட்கிறார்கள். மதுவிலக்கு எங்கள் கொள்கை. ஆட்சிக்கு வருவதற்கு முன்பும் சரி, ஆட்சிக்கு வந்த பிறகும் சரி, இங்குள்ள எங்கள் உறுப்பினர்களும், அமைச்சர்களும் எந்த தொழில்களிலும் ஈடுபட்டது கிடையாது. தி.மு.க. பொருளாளர் சாராயக்கடை நடத்துகிறாரா, இல்லையா? தி.மு.க. எம்.பி. சாராயக்கடை நடத்துகிறாரா, இல்லையா? இதுக்கு மேலே என்ன ஆதாரம் வேண்டும்?''’என்று ஆவேசமாக பேச, தி.மு.க. உறுப்பினர்களிடமிருந்து, லாட்டரி, லாட்டரி என குரல் ஒலித்தது. அதைக்கேட்டு டென்சனான ஆதவ் அர்ஜுனா, "உறுப்பினர்கள் இங்கு லாட்டரி என் கிறார்கள். உதயநிதி இதற்கு பதில் சொல்லணும். லாட்டரி நிறுவனத்திடமிருந்து 900 கோடி ரூபாய் தி.மு.க. ஏன் வாங்கியது? இதற்கு பதில் சொல்லட்டும். லாட்டரி நிறுவனத்திடமிருந்து மு.க.ஸ்டாலின் எதற்காக 900 கோடி வாங்க வேண்டும்? தைரியம் இருந்தா பதில் சொல்லச் சொல்லுங்க; தைரிய மிருந்தா,... தைரியமிருந்தா... சொல்லுங்க. நான் எந்த தொழிலையும் செய்யலை. எந்த நிறுவனத்தையும் நடத்தலை''’என்று ஏகத்துக்கும் எகிறினார். இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க.வின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், "லாட்டரி நிறுவனத்திட மிருந்து தி.மு.க. ஏன் ஃபண்ட் வாங்கியது என அமைச்சர் கேட்கிறார். அதைக் கொடுத்தது அவருடைய மாமனார் (லாட்டரி மார்ட்டின்) தான். அவரிடம் கேட்டு விளக்கம் பெற்றுக்கொள்ள வேண்டும்''’என்று பதிலடி தந்தார். உடனே எழுந்த ஆதவ் அர்ஜுனா, "அது அவருக்கும், அவருடைய அப்பா (ஸ்டாலின்) வுக்கும் மட்டும்தான் தெரியும். எனக்குத் தெரியாது. அப்பா கிட்டத்தான் கேட்கணும். அப்பாவை காணோம். வீட்டுக்குப்போய் அப்பாகிட்டே கேளுங்க, உங்க அப்பா கரெக்டா சொல்லுவாரு''’ என்று சொல்ல, சபையில் ஏக பரபரப்பு. லாட்டரி மார்ட்டினிடமிருந்து தி.மு.க. பெற்ற 900 கோடி ரூபாய் விவகாரம் பேரவையைத் தாண்டியும் பொதுவெளியிலும் விமர்சனத்துக் குள்ளானது. மார்ட்டினிடமிருந்து தி.மு.க. லஞ்சம் பெற்றது என்கிற தொனியில் இதனை த.வெ.க.வினர் பரப்பத் தொடங்கியுள்ளனர். தி.மு.க.வும் இது குறித்து சீரியஸாக பதிலடி தருவதற்கும், உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்தும் விளக்கமளிக்கவும் திட்டுமிட்டு செயலாற்றி வருகிறது. எதற்காக வாங்கப்பட்டது? எப்படி தரப்பட்டது? என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என ஸ்டாலினிடம் தி.மு.க.வின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி யுள்ளனர். உதயநிதியை நோக்கி ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியதால் அவருக்கு பதிலடி தர, இந்த விவகாரத்தை தி.மு.க. இளைஞரணியினர் கையிலெடுத்துள்ளனர். ஆதவ் அர்ஜுனாவின் குற்றச்சாட்டு பொய் என்பதை நிரூபிக்க தி.மு.க. இளைஞரணியினர் வரிந்துகட்டுகிறார்கள். இதுகுறித்து தி.மு.க. இளைஞரணி மாநில துணைச்செயலாளர் ஜோயலிடம் கேட்டபோது, ‘’"மாமனார் சொத்தில் மஞ்சள் குளிக்கிறவர் ஆதவ் அர்ஜுனா. அந்த நபருக்கு அறிவும் இல்லை; மூளையும் கிடையாது. தி.மு.க.வுக்கு 900 கோடி ரூபாய் எதற்காக தரப்பட்டது என்பது அந்த ஆளுக்கும் (ஆதவ்) தெரியும். ஆனா, உண்மையை மறைத்து பேரவையில் பொய் சொல்லியிருக்கிறார். அதாவது, அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நிதியை தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்குவது நடைமுறையில் இருக்கிறது. இதனை மத்திய அரசு அங்கீகரிக்கிறது. அந்த வகையில் தங்களின் ஆதாயங்களுக்காக அரசியல் கட்சிகளுக்கு தொழிலதிபர்கள் கட்சி நிதி வழங்குவது வழக்கம். சம்பந்தப்பட்ட கட்சியின் அறக்கட்டளைக் குத்தான் நிதி கொடுக்கப்படும். தனி நபர்களிடம் வழங்க முடியாது. கட்சி நிதியை தேர்தல் பத்திரங்களாகத் தரும்போது, தந்தவர்கள் எந்த அடையாளத்தையும் தரத் தேவையில்லை; தரவும் மாட்டார்கள். அதனால் யார், யார் தந்தார்கள் என்பது கட்சியின் தலைமைக்குத் தெரியாது. அப்படித்தான், தி.மு.க.வுக்கு ஆதவ்வின் மாமனாரான லாட்டரி மாஃபியா மார்ட்டின் நிதி கொடுத்திருக்கிறார். கொடுத்தவர் சும்மா இருக்கவில்லை. எங்கள் தலைவர் ஸ்டாலினை சந்தித்து, ’தி.மு.க.வுக்கு நிதி தந்திருக்கிறோம்; தமிழகத்தில் லாட்டரி தொழிலை நடத்த அனுமதிக்க வேண்டும்’ என்று மார்ட்டின் சொல்ல, அதிர்ச்சியடைந்த தலைவர் ஸ்டாலின், ’"லாட்டரியை அனுமதித்தால் தமிழகம் சீரழிந்துவிடும்; எந்த காலத்திலும் அனுமதிக்க மாட்டேன்'’ என மறுக்க, ’"கள்ளச் சந்தையில் திருட்டுத்தனமாக விற்பதற்காவது அனுமதிக்க வேண்டும். போலீசிடம் ஒரு வார்த்தை நீங்க சொல்லிவிட்டால் எந்த தொந்தரவும் இருக்காது'’ என மார்ட்டின் சொல்லவும் செம டென்சனாகிவிட்டார் தலைவர் ஸ்டாலின். "உடனே, எழுந்து போயிடுங்க. இல்லைன்னா நான் என்ன சொல்வேன்னு எனக்கே தெரியாது. தமிழ்நாட்டு பக்கமே உங்களை விடமாட்டேன். தமிழகத்தை நினைச்சிக்கூட பார்த்திடாதீங்க' எனக் கோபமாக எச்சரித்து அனுப்பிவிட்டார். லாட் டரிக்கு அனுமதி கேளுங்க; கொடுக்கலைன்னா ப்ளாக்கில் விற்க அனுமதி கேளுங்க என்கிற ஐடியாவை மாமனார் மார்ட்டினுக்கு கொடுத்ததே ஆதவ் அர்ஜுனாதான். அதுமட்டுமல்ல, மாமனார் முயற்சி தோல்வியடைய, கள்ளத்தனமாக லாட்டரி விற்க, ஸ்டாலினிடமும் உதயநிதியிட மும் பல வழிகளிலும் காலில் விழுந்து கெஞ்சியது நீதானே? அதையெல்லாம் மறந்துவிட்டாயா ஆதவ்? ஏற்கனவே தி.மு.க.வில் எம்.பி. சீட், எம்.எல்.ஏ. சீட் கேட்டு எங்கள் இளம் தலைவர் உதயநிதியிடம் வலியுறுத்தினார் ஆதவ் அர்ஜுனா. அதற்கு வாய்ப்பில்லை என்பதை அந்தாளுக்குப் புரியும்படி தெளிவு படுத்தினார் உதயநிதி. இந்த முயற்சி யில் தோல்வியடைந்த நிலையில்தான், தேர்தல் பத்திரம் வழங்கி விட்டு ஸ்டாலினை சந்தித்து லாட்டரிக்கு அனுமதி கேளுங்கள் என்கிற யோசனையை மாமனார் மார்ட்டினுக்கு கொடுத்தார் ஆதவ். அந்தாளின் இந்த முயற்சியும் தோல்வியடைந்தது. இதனால் இயல்பாகவே, ஸ்டாலின் மீதும், உதயநிதி மீதும் எரிச்சலடைந்தார் ஆதவ். இந்த நிலையில் 2024-ல் மீண்டும் எம்.பி. சீட் கேட்டு ஆதவ் அடம்பிடிக்க, அப்போதும் அவருக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் தானே கட்சி தாவினாய்? இத்தகைய சம்பவங் களால்தான் தி.மு.க.வை பழிவாங்க அப்போதே திட்டமிட்டு காய்களை நகர்த்தி, தற்போது சட்டப்பேரவையில் அதனை வெளிப்படுத்தியிருக் கிறார் ஆதவ் அர்ஜுனா. இந்தியாவின் பல பகுதிகளில் லாட்டரி விற்று பல குடும்பங்களின் தாலியை அறுத்தவர்கள் ஆதவ்வும், மார்ட்டினும்! இவரது மாமனார் மார்ட்டின், தி.மு.க.வுக் காக மட்டுமல்ல, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கும் கோடிக்கணக்கில் தேர்தல் நிதி வழங்கியிருக்கிறார். தி.மு.க.வை பார்த்து கேள்வி எழுப்பும் ஆதவ், பா.ஜ.க. -காங்கிரஸ் தலைமையை நோக்கி இதே கேள்வியை தைரியம் இருந்தால் கேட்க முடியுமா? அப்படி கேட்க தைரியம் இருக்கா? தெம்பு இருக்கா? திராணி இருக்கா? கேட்டுப் பாரு,... நீதான் தைரியமான ஆளாச்சே...கேளு! இவர்களாகவே திருட்டுத்தனமாக நிதி தருவார்களாம், திருட்டுத் தொழில் நடத்த தி.மு.க. அனுமதிக்கணுமாம்... ஆனா, யோக்கியமானவர் மாதிரி வேஷம் கட்டுகிறார் ஆதவ். எதற்காக, எந்த வடிவத்தில் தேர்தல் நிதி தந்தோம் என மாமனுக் கும் (மார்ட்டின்) மருமகனுக்கும் (ஆதவ்) தெரியும். எங்க தலைவரிடம் என்ன கோரிக்கை வெச்சீங் கன்னு தைரியமிருந்தா சொல்லு.... சொல்லத் திராணி இருக்கா? அந்த உண்மை யை மறைத்துவிட்டு, விஜய்யை ரசிக்க வைக்க, பொய் சொல்லி சட்டமன்றத்தை கேவலப்படுத்தி யிருக்கிறார் ஆதவ் அர்ஜுனா. இது மட்டுமல்ல, நான் எந்த தொழிலிலும் இல்லை; எந்த நிறுவனத்திலும் இல்லை என ஆவேசமாக கத்தியிருக்கிறார் ஆதவ். எந்த தொழிலையும் எந்த நிறு வனத்தையும் நடத்தலைன்னா தேர்தல் ஆணையத்தில் கொடுத்த பிரமாணபத்திரத்தில் உன் சொத்து மதிப்பு 534 கோடி என குறிப்பிட்டிருக்கிறாய். எந்த தொழி லையும் நடத்தாத உனக்கு எப்படி 534 கோடி சொத்து வந்தது? சட்டசபையில் பொய் சொன்ன தற்காக இவரை சபாநாயகர் தண்டிக்க வேண்டும். நாகரிகமாக பதில் சொல்ல வேண்டும் என எங்கள் தலைவர் எங்களுக்கு அரசியல் கற்றுக் கொடுத்திருப்பதால் நாகரிகமாக பேசுகிறோம். இல்லையெனில் எங்கள் ஆவேசம் வேறு மாதிரி இருக்கும். 900 கோடி விவகாரத்தையும், உனக்கு சொத்து எப்படி வந்தது என்பதையும் பொது வெளியில் விவாதிக்க நாங்கள் ரெடி? நீ ரெடியா? தைரியமிருக்கா எங்களுடன் விவாதிக்க?'' ” என்று கொந்தளிக்கிறார் தி.மு.க.வின் ஜோயல். ஆதவ் அர்ஜுனாவின் பொய்களை மக்கள் முன்பு அம்பலப்படுத்தத் தயாராகி வருகிறது தி.மு.க.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் முக்கியமான கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதில் அளிப்பதற்கு பதிலாக, தனது அமைச்சர்களைக் கொண்டே பதிலடி கொடுக்கச் செய்கிறார். அவை மரபுகளை மீறி, அவையில் இல்லாதவர்கள் குறித்து விவாதிப்பதை அமைச்சர்கள் வழக்கமாகக் கொண்டுள்ள நிலையில், அதனை முதலமைச்சர் விஜய் ரசித்து வருகிறார்.
இந்த சூழலில், 900 கோடி ரூபாய் விவகாரம் ஒன்று த.வெ.க மற்றும் தி.மு.க இடையேயான மோதலுக்கு முக்கிய காரணமாக மாறியுள்ளது. இது போன்ற விவாதங்கள் பேரவையில் கடும் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன.