'அம்பேத்கர் திடலுக்கு வருவாயா மாட்டாயா? விசிகவில் சில கருப்பு ஆடுகள்...'- சங்கத்தமிழன் சரமாரி கேள்வி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மூத்த நிர்வாகியான சங்கத்தமிழன், தம்மீதான தற்காலிக இடைநீக்கம் ரத்து செய்யப்பட்ட பிறகு, நக்கீரன் டிவிக்கு அளித்துள்ள நேர்காணலில் பல்வேறு அரசியல் சூழல்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். இதுகுறித்த அவரது உரையாடலில், ''கட்சியில் கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே பொறுப்பில் நீடித்து வரும் தமக்கு தற்பொழுது 55 வயதைக் கடந்துவிட்டதால், இளைஞரணிப் பொறுப்பிலிருந்து விலகி மாற்றுப் பொறுப்பைக் கேட்டுத் தலைவரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். தம்மீதான ஒழுங்கு நடவடிக்கைக்குக் காரணமான சமூக ஊடகப் பதிவு என்பது பட்டுவேட்டி கனவில் இருந்தபோது கட்டியிருந்த கோவணம் களவாடப்பட்ட கதையைப் போன்ற ஒரு சாதாரணத் தொண்டனின் எதார்த்தமான ஆதங்கமே தவிர, எங்கள் கட்சி தலைவருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை அல்ல. விசிக முதன்மை செயலாளர் திமுகவை ஆதரிக்கும் வகையில் குண்டக்க மண்டக்கப் பேசி வருகிறார். தம்பிக்கு முதன்மைச் செயலாளர் என்ற உயர்ந்த பதவியையும், சட்டமன்ற உறுப்பினர் வாய்ப்பையும் எங்களுடைய தலைவர் சீட்டு கொடுத்து அழகு பார்த்தார். ஆனால், உளுந்தூர்ப்பேட்டையில் நடைபெறும் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டிற்கான ஊடக ஒருங்கிணைப்புப் பணிகளைச் செய்யாமல், ஒரு முகநூல் பதிவோ, ட்விட்டர் பதிவோ கூடப் போடாமல் முரண்பட்டு நிற்கிறார். அவர் அண்ணா அறிவாலயம் சென்று அழிந்து போகாமல், உடனடியாக நம்முடைய அம்பேத்கர் திடலுக்குத் திரும்ப வேண்டும். வருவாயா மாட்டாயா என்று கேட்கிறேன் இதில் என்ன தவறு உள்ளது. கட்சிக்குள் உழைக்காமல் துரோகம் இழைக்கும் சில 'கருப்பு ஆடுகள்' உள்ளது. வரலாற்றுப் பேரரசுகள் வீழ்ந்ததற்குக் காரணம் பக்கத்திலிருந்த துரோகிகள்தான், விசிகவில் உள்ள கருப்பு ஆடுகளைத் தாங்கள் ஒழித்து பிரியாணி போட விரும்பவில்லை, மாறாக அவர்களைத் திருத்தி நல்வழிப்படுத்தவே விரும்புகிறேன்.''என்றார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மூத்த நிர்வாகியான சங்கத்தமிழன், தமது தற்காலிக இடைநீக்கம் ரத்து செய்யப்பட்ட பிறகு நக்கீரன் டிவிக்கு அளித்த பேட்டியில் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். 11 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே பொறுப்பில் இருந்து வரும் நிலையில், தற்போது 55 வயதைக் கடந்துவிட்டதால் இளைஞரணிப் பதவியிலிருந்து விலகி மாற்றுப் பொறுப்பு வழங்கும்படி கட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக, கட்சியில் உள்ள சிலரை 'கருப்பு ஆடுகள்' என்று விமர்சித்த அவர், அம்பேத்கர் திடலுக்கு வருவாயா இல்லையா என அவர்கள் மீது அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். தன் மீதான ஒழுங்கு நடவடிக்கைக்குக் காரணமான சூழல்கள் குறித்தும் அவர் இந்த நேர்காணலில் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.