உயர்சாதி ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு; பேரவையில் அதிமுகவில் வெடித்த மோதல்!
தமிழக சட்டப்பேரவையில் இன்று (21-08-26) நீதி, சிறை, சட்டம், எரிசக்தி, அறநிலையத்துறை ஆகிய துறைகளின் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாத்தின் போது அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. கூட்டத்தொடரில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம், “தமிழகத்தில் உயர்ஜாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இதில் பாதிக்கப்பட்டவன் நானும் ஒருவன். எங்கள் கிராமத்தில் 125 நாள் வேலைக்கு நிறைய பேர் போயிட்டு இருக்கிறார்கள். வறுமை கோட்டின் கீழே இருக்கிறார்கள். உயர் ஜாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு திருத்தம் வந்த போது நாங்கள் கோரிக்கை வைத்தோம். ஆனால் நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்த பிறகு இடஒதுக்கீட்டை எதிர்த்து நீதிமன்றத்திற்கு சென்ற ஒரே மாநிலம் இது தான். மத்திய அரசாங்கம் கொண்டு வந்த திருத்தத்திற்கு எதிர்த்து போன ஒரே கட்சி என்றால் அது திமுக தான். கேரளாவில் 5% இடஒதுக்கீடு கொடுக்கிறார்கள். எனவே சட்டத்துறை அமைச்சர் மூலமாக முதல்வரிடம் பேசி உயர்ஜாதி ஏழைகளுக்கு இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும். இப்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கிறது, அந்த அடிப்படையில் எங்களுக்கு ஒரு 5% இடஒதுக்கீடாவது பரிந்துரை செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். அதனை தொடர்ந்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், “தளவாய் சுந்தரம் ஒரு கருத்தை சொன்னார். அது அவருடைய சொந்த கருத்தாக இருந்தால் அதில் பிரச்சனை இல்லை. ஆனால் அவர் அதிமுக உறுப்பினராக இருக்கிறார். அதனால் அது அதிமுக அவருடைய கருத்தை ஏற்றுக் கொள்வதாக அமைந்துவிடும். ஏனென்றால் அதிமுக சமூகநீதியை காக்கின்ற ஒரு இயக்கம். சமூகநீதி காத்த வீராங்கனை என்ற பட்டம் பெற்றவர் ஜெயலலிதா. அவரால் பாதுக்காக்கப்பட்டதுதான் 69% இடஒதுக்கீடு. அப்படிப்பட்டவர்கள் இந்த 10% இடஒதுக்கீட்டை அதிமுக இன்றுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதை நாங்கள் தெளிவுப்படுத்துகிறோம். அதை கொண்டு வந்தது மத்திய அரசாங்கம். மத்திய அரசாங்கத்தில் நாங்கள் பா.ஜ.கவுடன் கூட்டணி இருந்த போதும் அந்த 10% இடஒதுக்கீட்டை ஏற்று கொள்ளவில்லை. ஏ 7.5% சட்ட திருத்தத்தை கொண்டு வந்தபோது அந்த சட்ட திருத்தம் ஆளுநருடைய ஒப்புதலுக்காக காத்திருந்தது. ஆளுநர் அந்த சட்ட திருத்தத்திற்கு கையெழுத்திட ஒரு நிபந்தனை விதித்தார். நீங்கள் உயர்ஜாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீட்டை ஏற்றுக்கொண்டால் நான் இதில் உடனடியாக கையெழுத்து போடுகிறேன் என்று அன்றைக்கு சொன்னார். ஆனால் அன்றைக்கு எங்கள் முதலமைச்சர் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று தெளிவாக சொல்லிவிட்டார். அதனால்தான் அந்த 7.5 சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்தினார். ஒரு கட்டத்தில் மருத்துவ படிப்புக்கான அனுமதி தொடங்கிவிட்டது, இனியும் காலம் தாமதப்படுத்தக் கூடாது என்றுதான் சட்டத்திருத்தம் 162ஐ பயன்படுத்தி நேரடியாக அதை வெளியிடலாம் என்று இந்தியாவில் எந்த முதலமைச்சரும் இல்லாத அளவுக்கு அந்த ஆணையை வெளியிட்டு அதை நிறைவேற்றினோம். எனவே உயர்ஜாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீட்டை அதிமுக ஏற்றுக்கொள்ளவில்லை, இன்றுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. தளவாய் சுந்தரத்தின் கருத்து அவருடைய கருத்து, அதில் நாங்கள் தலையிடவில்லை” என்று கூறினார். அதனை தொடர்ந்து தளவாய் சுந்தரம், “69% இடஒதுக்கீட்டுக்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது, இது தனிப்பட்ட கருத்தும் கிடையாது. ஏற்கனவே இது சம்பந்தமாக பலமுறை முதலமைச்சரிடம் வைத்திருக்கிறது நீதிமன்றத்த. நீதிமன்றத்திற்கு சென்ற பின் தான் நான் பேசினேன். இப்பொழுது மக்கள் தொகை சர்வே நடந்து கொண்டிருக்கிறது. அதில் 5% எங்களுக்கு தர வேண்டும் என்று கேட்கிறோம்” என்று கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, அதிமுக எம்.எல்.ஏக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதல் உருவானது.
இந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அதிமுக எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம், தமிழகத்தில் உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள தங்களை போன்றவர்கள் இதனால் பாதிக்கப்படுவதாக அவர் தனது கருத்தைப் பதிவு செய்தார்.