“கோரிக்கையைக் கேட்க ஒரு அமைச்சரைக் கூட அனுப்பாதது ஏன்?” - டி.டி.வி. தினகரன் கேள்வி!
பணி நிரந்தரம், தினக்கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு பணி நிரந்தரம் கோரி போராடிய தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாகக் கைது செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, பணி நிரந்தரம் கோரி போராடிய தூய்மைப் பணியாளர்களை பனையூருக்கு அழைத்து ஆறுதல் தெரிவித்த தவெக தலைவர் ஜோசப் விஜய், முதலமைச்சரான பின்பு அதே தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையைக் கேட்க ஒரு அமைச்சரைக் கூட அனுப்பாதது ஏன்?. 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாகப் பணியாற்றிய பணியாளர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முன்வராததன் காரணமே தூய்மைப் பணியாளர்களை போராட்டக் களத்திற்குத் தள்ளியுள்ளது. மக்களின் சுகாதாரத்தையும், சென்னை மாநகரத்தின் தூய்மையையும் பேணிக்காக்கும் தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற அடிப்படைக் கோரிக்கையை ஏற்க மறுத்து, காவல்துறையின் மூலம் அவர்கள் மீது அடக்குமுறையை ஏவியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, போராட்டத்தில் ஈடுபட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்கப்படுவதோடு, அவர்களின் அடிப்படைக் கோரிக்கையை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பணி நிரந்தரம் மற்றும் தினக்கூலி உயர்வு உள்ளிட்ட நீண்ட கால கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு தூய்மைப் பணியாளர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாகக் கைது செய்துள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
பணியாளர்களின் கோரிக்கைகளைக் கேட்பதற்காக ஒரு அமைச்சரைக்கூட அரசு அனுப்பாதது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.