“சட்ட மசோதாவை எம்.பி.க்கள் கிழித்தெறிந்துவிட்டார்கள்” - இ.பி.எஸ். பேச்சு!
நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி மறுவரையறை தொடர்பாகச் சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் இன்று (12.08.2026) தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்நிலையில் இது தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “நிர்வாக வசதிக்காக வாக்காளர்கள் அதிகம் உள்ள மக்களவைத் தொகுதி மற்றும் சட்டமன்றத் தொகுதிகளை வாக்காளர் எண்ணிக்கை மற்றும் பரப்பளவின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்வதில் எந்தத் தவறும் இல்லை. மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு எவ்வித பாதகமும் இல்லாமல், நாடாளுமன்றத் தொகுதி எண்ணிக்கையை தற்போதுள்ள விகிதாச்சாரப்படி, அதாவது 7.18 சதவீதம் குறையாமல் தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும். அதோடு, இன்றைக்கு பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதா தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், 1998ஆம் ஆண்டு மத்தியில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில், அந்த மத்திய ஆட்சியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பங்கு வைத்தது. அதில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த தம்பிதுரை சட்டத்துறை அமைச்சராக இருந்தார். ஜெயலலிதாவின் ஆணைக்கு இணங்க, நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் 33 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அந்தச் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசிக்கொண்டிருந்தபொழுது, எதிர்வரிசையில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த மசோதாவைப் பிடித்துக் கிழித்தெறிந்துவிட்டார்கள். ஆகவே, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 1998ஆம் ஆண்டிலேயே நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு பெற்றுத் தருவதற்கு முயற்சி செய்தது. அதோடு, உள்ளாட்சி அமைப்பில் 33 சதவீத இடஒதுக்கீடு இருந்தது. அதை பெண்கள் அமைப்புகள், பல சட்டமன்ற பெண் உறுப்பினர்கள், பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இருக்கின்றபொழுது, உள்ளாட்சி அமைப்பில் இருந்த 33 சதவீத இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தி, உள்ளாட்சி அமைப்பில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி என்பதை இந்த நேரத்தில் நினைவுகூர்கிறேன். மேலும், தற்போது நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்வதற்கான எந்த அறிகுறியும் இல்லாத நிலையில், தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழக அரசு அரசியல் காரணங்களுக்காக பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, இந்தத் தீர்மானத்தை எவ்வளவு அவசர அவசரமாக சட்டமன்றத்தில் அரசியல் தனித் தீர்மானமாகக் கொண்டு வருகிறது என்று நாங்கள் கருதுகிறோம். இந்தச் சூழ்நிலையில், மத்திய அரசு கொண்டுவர உள்ள தொகுதி மறுவரையறை தமிழ்நாட்டிற்கு சாதகமாக உள்ளதா, பாதகமாக உள்ளதா என்பது பற்றி எதுவுமே தெரியாத நிலையில், அரசியல் காரணங்களுக்காக தமிழக வெற்றிக் கழக அரசு கொண்டு வந்த இந்தத் தீர்மானத்தை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கின்றது. அதே நேரத்தில், இந்தத் தீர்மானத்தில் வரவிருக்கும் மக்களவை பொதுத்தேர்தலிலும், அதன் பிறகு நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் மூன்றில் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டின் பலனைப் பெண்கள் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தத் தீர்மானத்தை மட்டும், அதாவது நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் 33 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற அந்தத் தீர்மானத்தை மட்டும் ஆதரிகின்றேன்” எனத் தெரிவித்தார்.

நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் இன்று (12.08.2026) சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார். இது குறித்துப் பேசிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நிர்வாக வசதிக்காக வாக்காளர் எண்ணிக்கை மற்றும் பரப்பளவின் அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்வதில் தவறில்லை என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் மத்திய அரசு தொகுதி எண்ணிக்கையை மாற்றியமைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், இது தொடர்பாக ஏற்கனவே நாடாளுமன்றத்தில் மசோதாக்களை உறுப்பினர்கள் கிழித்தெறிந்து எதிர்ப்பு தெரிவித்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.