PulseNews
அரசியல்

AM - PM பார்க்காமல் உழைக்கும் எங்கள் CM தான் நாளைய PM !சட்டசபையில் புகழ்பாடும் அமைச்சர்கள்!கடிவாளம் போடுவாரா முதலமைச்சர் விஜய்?

தமிழக முதல்வர் விஜய்யை எதிர்காலத்தில் இந்தியாவின் பிரதமராக பார்க்க வேண்டும் என தவெக அமைச்சர்கள் சிலர் சட்டப்பேரவையில் வெளிப்படையாகப் பேசி வருவது, கட்சிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக வெற்றிக் கழகம் 2024 பிப்ரவரியில் தொடங்கப்பட்டு, இரண்டே ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது. தற்போது விஜய் முதல்வராக பொறுப்பேற்று சுமார் 100 நாட்களே கடந்துள்ள நிலையில், “நாளைய பிரதமர் விஜய்” என்ற பேச்சுகள் முன்வைக்கப்படுவது தேவையற்றது என சில தவெக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் கருதுவதாக கூறப்படுகிறது. தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, எதிர்காலத்தில் தென்னிந்தியாவில் அல்லது தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக வேண்டும் என்றும், தமிழகத்தின் குரல் நாடாளுமன்றத்தில் பிரதமர் பதவியில் இருந்து ஒலிக்க வேண்டும் என்றும் பேசியதாக கூறப்படுகிறது. அதேபோல் சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் சரத்குமார், “எங்கள் இதயத்திலும், இல்லத்திலும், கோட்டையிலும் முதலமைச்சராக இருக்கும் எங்கள் தலைவா... நாளைய பாரதத்தின் பிரதமர் நீங்கள் தான்” என விஜய்யை புகழ்ந்து பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் பிரதமராக வேண்டும் என்பதற்கு எதிர்ப்பு இல்லை என்றாலும், முதலில் தமிழ்நாட்டில் ஐந்து ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்து மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும் என்பதே தற்போது எழுந்துள்ள முக்கிய கோரிக்கையாக இருக்கிறது. திமுக, அதிமுக போன்ற கட்சிகளில் தலைவர்களை அளவுக்கு அதிகமாக புகழ்வது அரசியல் கலாசாரமாக மாறியதாக விமர்சனங்கள் இருந்த நிலையில், அதே பாதையில் தவெகவும் சென்றுவிடக் கூடாது என சமூக வலைதளங்களில் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மக்கள் எதிர்பார்க்கும் முக்கியமான விஷயங்கள் வேலைவாய்ப்பு, விலைவாசி, கல்வி, சுகாதாரம், சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட அன்றாட பிரச்சினைகளுக்கான தீர்வுகள்தான். எனவே சட்டப்பேரவையிலும் பொது வெளியிலும் முதல்வரை புகழ்வதைவிட, மக்கள் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்து அமைச்சர்கள் அதிகம் பேச வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது. முதல்வர் விஜய்யும் இதுபோன்ற அதீத புகழ்ச்சிகளை ஊக்குவிக்காமல் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே ஒரு தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆட்சிக்கு வந்த 100 நாட்களிலேயே பிரதமர் கனவு பேசுவதற்குப் பதிலாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆட்சியின் செயல்பாடுகளால் மக்களின் மனதை வெல்வதே விஜய்க்கு அரசியல் ரீதியாக மிகப்பெரிய பலமாக அமையும் என்பதே இந்த விமர்சனங்களின் சாரமாக உள்ளது.

Seithipunal13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
AM - PM பார்க்காமல் உழைக்கும் எங்கள் CM தான் நாளைய PM !சட்டசபையில் புகழ்பாடும் அமைச்சர்கள்!கடிவாளம் போடுவாரா முதலமைச்சர் விஜய்?
PulseNews சுருக்கம்

தமிழக முதல்வர் விஜய்யை எதிர்கால இந்தியாவின் பிரதமராகப் பார்க்க விரும்புவதாக தவெக அமைச்சர்கள் சிலர் சட்டப்பேரவையில் வெளிப்படையாகப் பேசி வருகின்றனர். 2024 பிப்ரவரியில் தொடங்கப்பட்ட இக்கட்சி, இரண்டு ஆண்டுகளில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

விஜய் முதல்வராகப் பொறுப்பேற்று 100 நாட்களே கடந்துள்ள நிலையில், இத்தகைய பேச்சுக்கள் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, அமைச்சர்களின் இத்தகைய கருத்துக்கு முதல்வர் விஜய் முற்றுப்புள்ளி வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மூலம்: SeithipunalSeithipunal-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics