'திருமாவை முதலமைச்சராக்கச் சொன்னதில் என்ன தவறு?': சட்ட மன்றத்திற்கு வெளியே சி.வி.சண்முகம் பரபரப்பு பேட்டி
சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், திடீரென அவையிலிருந்து வெளியே வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ சி.வி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அப்போது பேசிய சி.வி.சண்முகம், “அக்ரி கிருஷ்ணமூர்த்தி சமீபகாலமாக உண்மைக்கு மாறான, பொய்யான தகவல்களைப் பரப்பி வருகிறார். மே 4-ம் தேதிக்குப் பிறகு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், தொடர்ந்து பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. அம்மாவின் மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வராக்கப்பட்டார். 2021-ல் ஆட்சியை இழந்தோம். இப்போது எதிர்க்கட்சி அந்தஸ்துகூட இல்லை. அன்றைய அரசியல் சூழலில் வலிமையான தலைவர் தேவைப்பட்டதால் அவரைத் தேர்வு செய்தோம். ஆனால், அவர் பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து தோல்விகளைத்தான் சந்தித்து வருகிறோம். நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு எடப்பாடி பழனிசாமியின் சொந்த செல்வாக்குதான் காரணம் என்று அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறுகிறார். அப்படியே வைத்துக்கொள்வோம். அப்படியானால், மீதமுள்ள 181 தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி செல்லாக் காசாகி விட்டாரா? அவர் சேலம் மாவட்டச் செயலாளரைப் போலத்தான் செயல்பட்டார். 2024 தேர்தலில் அவரது சொந்த பூத்திலேயே அதிமுகவுக்கு குறைவான வாக்குகள்தான் கிடைத்தன. அப்படியானால், சொந்த மாவட்டத்திலேயே அவர் செல்வாக்கை இழந்துவிட்டார் என்று சொல்ல முடியுமா? நாங்கள் அவர்களைப் போல கீழ்த்தரமாக பேச மாட்டோம். அப்போதைய அரசியல் சூழலும் கூட்டணியும்தான் தேர்தல் தோல்விக்கு காரணம். வெற்றி பெற்றால் அந்த வெற்றிக்கு காரணம் எடப்பாடி பழனிசாமி. தோல்வி என்றால் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள்தான் காரணம். இது என்ன நியாயம்? சென்னை, டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் அதிமுக துடைத்தெறியப்பட்டதற்கு யார் காரணம்?. வட மாவட்டங்களில் பாமக நம்முடன் இருந்ததால்தான் 34 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். தேர்தல் தோல்விக்கான பழியை கட்சி நிர்வாகிகள் மீது சுமத்தும் தலைவரை எங்காவது பார்த்திருக்கிறீர்களா? ராகுல் காந்திகூட தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகினார். நாங்கள் எடப்பாடி பழனிசாமியை பதவி விலகச் சொல்லவில்லை. அவர்தான் பொதுச்செயலாளர். ஆனால், தோல்விக்கான காரணங்களை ஆராய வேண்டாமா?” என்று சி.வி.சண்முகம் கூறினார். தி.மு.க. கூட்டணிக்கு நாங்கள் ஐடியா கொடுக்கவில்லை திமுகவுடன் கூட்டணி வைக்க தாங்கள்தான் ஆலோசனை வழங்கியதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு கூறுவது “வடிகட்டிய பொய்” என்றும் சி.வி.சண்முகம் விமர்சித்தார். “அந்த ஐடியா யாருடையது என்பதை கம்யூனிஸ்ட் கட்சியினரிடமும், வி.சி.க.விடமும் கேளுங்கள். உண்மை தெரியும். திமுகவுடன் கூட்டணி குறித்து பேசப்பட்டபோது, திருமாவளவனை முதலமைச்சராக்க வேண்டும் என்ற யோசனை முன்வந்தது. அதை நான் முன்மொழிந்தேன். ஆனால், எடப்பாடி பழனிசாமி அதை ஏற்கவில்லை. மேலும், திமுகவை எதிர்க்கும் தவெகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்று நான் கூறினேன். அதையும் எடப்பாடி ஏற்கவில்லை” என்றும் தெரிவித்தார். தேர்தல் பணியில் ஈடுபடாதவர்களை அழைத்து தோல்விக்கான காரணம் குறித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவதாகவும் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டினார். “கூட்டத்துக்கு எங்களை அழையுங்கள். தோல்விக்கான உண்மையான காரணத்தை நாங்கள் சொல்கிறோம். எடப்பாடி பழனிசாமி பொறுப்புக்கு வந்த பிறகு சந்தித்த எந்தத் தேர்தலிலும் விழுப்புரம் மாவட்டத்துக்காக ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. பின்னர் எப்படி எங்களை குறை சொல்ல முடியும். தோல்விக்கு அனைவருமே பொறுப்பு. அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசுவோம். கடந்த தேர்தல்களில் டிடிவி தினகரனையும், தேமுதிகவையும் திட்டமிட்டு கூட்டணியில் இருந்து வெளியேற்றினார்” என்றும் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டினார். சட்டப்பேரவைக்கு வெளியே சி.வி.சண்முகம் அளித்த இந்தப் பேட்டி, அதிமுகவுக்குள் தேர்தல் தோல்விக்கான காரணம் தொடர்பாக நிலவும் கருத்து வேறுபாடுகளை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் போது வெளியே வந்த அதிமுக எம்.எல்.ஏ சி.வி.சண்முகம், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அக்ரி கிருஷ்ணமூர்த்தி பொய்களைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டிய அவர், கடந்த கால தேர்தல் தோல்விகளுக்கு எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளே காரணம் என்று சாடினார். தோல்விக்குக் கட்சி நிர்வாகிகளை மட்டும் பொறுப்பாக்கும் தலைமை, தனது சொந்த மாவட்டத்திலேயே செல்வாக்கை இழந்தது குறித்துப் பேசாமல் இருப்பது நியாயமற்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
திமுக கூட்டணியில் திருமாவளவனை முதலமைச்சராக்கலாம் என்று தாம் முன்மொழிந்த யோசனையை எடப்பாடி பழனிசாமி நிராகரித்ததாக சி.வி.சண்முகம் தெரிவித்தார். மேலும், தவெகவுடன் கூட்டணி வைக்கலாம் என்ற தனது ஆலோசனையையும் அவர் ஏற்கவில்லை என்று கூறினார். டிடிவி தினகரன் மற்றும் தேமுதிகவைச் கூட்டணியில் இருந்து திட்டமிட்டு வெளியேற்றியதாகக் குற்றம் சாட்டிய அவர், அதிமுகவுக்குள் தேர்தல் தோல்வி குறித்த உண்மை நிலையை ஆராய அனைவரும் இணைந்து பேச வேண்டும் என்று வலியுறுத்தினார்.