'சட்டமன்றமா? இல்லை ஹிட்லரின் காட்டாட்சியா?'-கடுமையாக விமர்சித்த வல்லம் பஷீர்
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் மற்றும் சக உறுப்பினர்களின் ஜனநாயக உரிமைகள் ஆளும் தரப்பால் பறிக்கப்படுவதாகவும், தனக்கு சாதகமாக அதிகாரத்தை இந்த அரசு தவறாகப் பயன்படுத்துவதாகவும் வல்லம் பஷீர் ஆதங்கப்பட்டுள்ளார். நக்கீரன் டிவிக்கு அளித்த பேட்டியில் அரசியல் விமர்சகர் வல்லம் பஷீர் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அதில் "முதலமைச்சரின் செயல்பாடுகளை விமர்சித்துப் பேசியதற்காக, விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் மீது காவல்துறை மூலம் வழக்குத் தொடரப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு சிறையடைக்கப்பட்டார். தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள அவர், சட்டமன்ற இறுதி நிகழ்வில் பங்கேற்றுப் பேசினார். அவர் பேசும்போது, 'நான் கரிசல் காட்டு மண்ணைச் சேர்ந்தவன், என் மண்ணுக்கே உரித்தான உணர்ச்சி வேக மொழிநடையில் பேசிவிட்டேனே தவிர, முதலமைச்சரைக் காயப்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை, அதை மறந்துவிடுங்கள்' என்று அவையிலேயே விளக்கம் அளித்தார். அவரது பேச்சுக்கு நீதிமன்றத்தில் ஏற்கனவே ஒரு குற்றவியல் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, மீண்டும் அதே விவகாரத்தைச் சட்டமன்ற உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் அறிவிப்பது எந்த விதத்தில் நியாயமான சட்ட விதி? நீதிமன்ற விசாரணையைத் தாண்டி, சட்டமன்றப் பேரவைத் தலைவர் தனியாக ஒரு பாரலல் ஜுடிஷியரி விசாரணையை நடத்த முடியுமா? முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு கூட, 'ஒரே குற்றத்திற்கு இரண்டு இடங்களில் தண்டனை பெற முடியுமா, நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதை அவர் கேட்கப் போகிறார், அதனால் சட்டமன்றத்தில் இதை விவாதிக்கக் கூடாது' என்று நியாயமாகப் பேசினார். இதே சட்டமன்ற அவையில், 'எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ய முடியாதபடி அவையின் கதவுகளைப் பூட்டி இழுத்துத் தான் சட்டமன்றத்தை நடத்துவோம்' என்று முதலமைச்சர் பேசினாரே, அது ஜனநாயக மரபாகுமா? எதிர்க்கட்சிகள் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்ய வெளிநடப்பு செய்வது என்பது இந்த நாட்டின் ஜனநாயக மரபு. மக்களின் பிரதிநிதிகளாக இருக்கும் எதிர்க்கட்சிகளின் குரலையே நசுக்குவேன் என்று ஹிட்லர் போலப் பேசும் முதலமைச்சர் மீது இந்த உரிமை மீறல் குழு ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? சபாநாயகர் அவரை அழைத்து ஏன் என்று கேள்வி கேட்பாரா? அதிகாரம் கையில் இருக்கும் ஆளுங்கட்சியினர் என்ன பேசினாலும் விசாரணை கிடையாது, அவர்களுக்கு முழுப் பாதுகாப்பு. ஆனால், அதற்கு எதிர்வினை ஆற்றுபவர்கள் மீது மட்டும் விசாரணை மற்றும் கைது நடவடிக்கை என்பது என்ன மாதிரியான நியாயம்? சபாநாயகர் ஒட்டுமொத்த அவைக்குப் பொதுவானவராக இல்லாமல், ஆளுங்கட்சிக்காக மட்டுமே இயங்குவது தவறான முன்னுதாரணம். இனி அடுத்து என்ன நடக்கிறது என்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்" என்றார்.

சட்டமன்றத்தில் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுவதாகவும், ஆளுங்கட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் அரசியல் விமர்சகர் வல்லம் பஷீர் நக்கீரன் டிவியிடம் குற்றம் சாட்டியுள்ளார். விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் மீது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அதே விவகாரத்திற்காக அவரை உரிமை மீறல் குழு விசாரணைக்கு உட்படுத்தியது முறையற்றது என அவர் விமர்சித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் வெளிநடப்பு உரிமையை விமர்சித்த முதலமைச்சரின் செயல்பாடு ஹிட்லரின் ஆட்சியைப் போல் உள்ளதாக அவர் சாடியுள்ளார். சபாநாயகர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுவது தவறான முன்னுதாரணம் என்றும், எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மட்டும் கைது நடவடிக்கைகளை எடுப்பது நீதியற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.