PulseNews
அரசியல்

ஜல்லிக்கட்டு சீரழிக்கும் விளையாட்டா? த.வெ.க எம்.எல்.ஏ கருப்பையா பேச்சுக்கு அ.தி.மு.க, சீமான் கடும் கண்டனம்

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு அ.தி.மு.க, நாம் தமிழர் கட்சி ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. அதிமுக கண்டனம் & முதல்வருக்குக் கேள்வி: சமூக வலைதளப் பக்கத்தில் அ.தி.மு.க வெளியிட்டுள்ள பதிவில், உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூரைத் தனது தொகுதிக்குள் வைத்துள்ள சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, சங்க காலம் தொட்டே தமிழர்களுக்கும் மாடுகளுக்குமான உறவைப் பறைசாற்றும் ஏறுதழுவுதல் விளையாட்டைச் சட்டப்பேரவையில் இழிவாகப் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மாணவர்கள், இளைஞர்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு நடத்திய வரலாற்றுப் புரட்சியின் மூலமாகவும், அன்றைய அ.தி.மு.க அரசு மத்திய அரசிடம் போராடிப் பெற்ற உரிமையையும் கீழ்த்தரமாகப் பேசிய எம்.எல்.ஏவின் கருத்துக்கள் ஏன் இன்னும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படவில்லை? தமிழரின் பாரம்பரியமான #ஜல்லிக்கட்டு விளையாட்டைப் பற்றி இழிவாக சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஜல்லிக்கட்டிற்கு உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூரை தனது தொகுதியில் வைத்துள்ள ஒரு சட்டமன்ற உறுப்பினர் இப்படி... — AIADMK (@AIADMKOfficial) August 29, 2026 ஜல்லிக்கட்டுக்குத் தடை கொண்டுவர அரசு நினைத்து, அதற்கான முன்னோட்டமாகத் தனது எம்.எல்.ஏவை முதல்வர் பேச வைத்துள்ளாரா என்ற வலுவான சந்தேகம் மக்களுக்கு எழுகிறது. எனவே, எம்.எல்.ஏவின் பேச்சுக்கு முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், ஜல்லிக்கட்டு குறித்த அரசின் நிலைப்பாட்டைச் சட்டமன்றத்தில் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அ.தி.மு.க வலியுறுத்தியுள்ளது. சீமான் கடும் தாக்குதல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க நிதி ஒதுக்கக் கோருவது நியாயமானதுதான். அதற்காக, தமிழர்களின் பல்லாயிரம் ஆண்டுகாலப் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டை 'இளைஞர்களைச் சீரழிக்கும் விளையாட்டு' என்று இழிவுபடுத்திப் பேசுவது அறியாமையின் உச்சம். தெருவுக்குத் தெரு உள்ள மதுக்கடைகளில் குடித்து உடலையும் குடும்பத்தையும் இழக்கும் இளைஞர்கள் சீரழியவில்லையா? வாடிவாசலில் காளையைத் தழுவும் வீர இளைஞர்கள்தான் சீரழிகிறார்களா? மதுப்புட்டியைத் தூக்கும் கை நல்ல கை; காளையின் திமிலைத் தழுவும் கை கெட்ட கையா? சாராயக்கடைக்கு இடம் கொடுத்தால் வருவாய், ஜல்லிக்கட்டுக்கு இடம் கொடுத்தால் வீண் செலவா? கலித்தொகை பாடல் வரிகளை மேற்கோள்காட்டிய சீமான், ஜல்லிக்கட்டு என்பது வெறும் விளையாட்டல்ல; அது வேளாண்மை, நாட்டு மாடுகள் பாதுகாப்பு மற்றும் கிராமியப் பொருளாதாரத்துடன் இணைந்த பண்பாடு என்று விளக்கினார். மெரினாவில் லட்சக்கணக்கான இளைஞர்கள் திரண்ட வரலாற்று எழுச்சியையும் சீரழிவு என்பீர்களா எனக் கேள்வி எழுப்பினார். ஒரு திட்டத்திற்கான நிதியை மற்றொரு திட்டத்திற்கு எதிராக நிறுத்துவது சரியான அரசியல் அல்ல. தமிழர்களின் அடையாளத்தை அழித்துவிட்டு நல்லாட்சி தர முடியாது என்று குறிப்பிட்ட அவர், சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா தனது பேச்சை உடனடியாகத் திரும்பப் பெற்று, தமிழ்நாட்டு மக்களிடம் பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஜல்லிக்கட்டு சீரழிக்கும் விளையாட்டா? த.வெ.க எம்.எல்.ஏ கருப்பையா பேச்சுக்கு அ.தி.மு.க, சீமான் கடும் கண்டனம்
PulseNews சுருக்கம்

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு குறித்து, சட்டப்பேரவையில் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. ஜல்லிக்கட்டு ஒரு சீரழிக்கும் விளையாட்டு என்று அவர் பேசியதாகக் கூறப்படும் கருத்துக்கு, அ.தி.மு.க மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

அலங்காநல்லூர் அமைந்துள்ள சோழவந்தான் தொகுதியின் உறுப்பினராக இருந்தும், இத்தகைய கருத்தைச் சொன்னது குறித்து அ.தி.மு.க தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. சங்க காலம் தொட்டே தமிழர்களின் அடையாளமாகத் திகழும் ஜல்லிக்கட்டு குறித்து அவையில் அவர் பேசிய விதம் அரசியல் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics