PulseNews
அரசியல்

சாதி வாரி கணக்கெடுப்பு: இந்த முறை எப்படி கணக்கிட திட்டமிடுகிறது இந்தியா; முன்பு என்ன தவறு நடந்தது?

எழுதியவர்: விகாஸ் பாதக் தற்போது நடைபெறவுள்ள சாதி வாரி கணக்கெடுப்பில் இந்திய தலைமைப் பதிவாளர் சாதிக்கான 'டிராப்-டவுன் மெனு' பயன்பாட்டிற்குப் பதிலாக "முன்தீர்மானிக்கப்படாத கேள்வி" (open-ended question) பயன்படுத்த முடிவு செய்துள்ளார். இதனால் ஒரே சாதியைக் குறிக்கும் வெவ்வேறு பெயர்கள் பதிவாகி, 2011 சமூக-பொருளாதார மற்றும் சாதி வாரி கணக்கெடுப்பைப் போலக் குழப்பமான பெரிய பட்டியலாக மாற வாய்ப்புள்ளது. ஆங்கிலத்தில் படிக்க: "நீங்கள் உங்கள் சாதியை உங்களது குடும்பப் பெயரால் அடையாளப்படுத்தினால், கணக்கெடுப்பு அதிகாரி அதையே உங்கள் சாதியாக சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அவர் உங்கள் குடும்பப் பெயரைத் தவறாக எழுதினாலும், அதுவே சாதிப் பத்தியில் ஒரு பதிவாகிவிடும்" என்று பெயர் வெளியிட விரும்பாத மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார். ஒவ்வொரு கணக்கெடுப்பிலும் நடக்கும் பட்டியலின (எஸ்சி) மற்றும் பழங்குடியினர் (எஸ்டி) கணக்கெடுப்பில் தெளிவான பட்டியல் உள்ளதால், அப்போதைய தரவுகள் அதிக மதிப்பைப் பெறுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் இணையதளத்தில் 1,208 பட்டியலினச் சாதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன, வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு சாதிகள் இந்தப் பிரிவில் உள்ளன. 2022 பத்திரிகை தகவல் அலுவலகத்தின் (பி.ஐ.பி) ஆண்டின் இறுதி செய்திக்குறிப்பில் இந்தியாவில் சரியாக 730 பழங்குடியினச் சாதிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இருப்பினும், வரவிருக்கும் சாதி கணக்கெடுப்பில் முன்கூட்டியே வழங்கப்பட்ட பட்டியல் எதுவும் இருக்காது; பதிலளிப்பவர் தனது சாதியைக் குறிப்பிட வேண்டும், அது கணக்கெடுப்பாளரால் குறிக்கப்படும். ஒரே சாதி பல பெயர்களால் அறியப்படுவதால் பிரச்னை அதிகரிக்கிறது. உதாரணத்திற்கு ராஜ்புத், தாக்கூர், சிங் மற்றும் க்ஷத்ரியா ஆகிய பெயர்களை ஒரே நபர் பயன்படுத்தலாம். ஆனால் உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தைப் பிரிக்கும் புந்தேல்கண்ட் பகுதியில் 'ராஜ்புத்' என்பது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பான (ஓ.பி.சி) லோத் சமூகத்தையும் குறிக்கலாம், 'சிங்' என்பது அனைத்துச் சாதிகளிலும் உள்ள ஒரு குடும்பப் பெயர். அதேபோல 'வர்மா' என்பது காயஸ்தர், குர்மி, ஜாட் அல்லது சோனார் சமூகத்தைக் குறிக்கலாம். கடைசியாகச் சாதி விவரங்கள் வெளியிடப்பட்ட 1931-ம் ஆண்டு கணக்கெடுப்பு வரை, பிரிட்டிஷ் அரசும் இதே முறையையே பயன்படுத்தியது. 1931 கணக்கெடுப்பு அறிக்கையைப் பரிசீலித்தால், சாதியை எப்படிக் கணக்கிடுவது என்பதில் பிரிட்டிஷ் இந்திய அரசு சந்தித்த பிரச்னைகள் தெரியவரும். 1931-ம் ஆண்டு கணக்கெடுப்பு 1931 கணக்கெடுப்பு அறிக்கையில், பல சாதி அமைப்புகள் தங்களை ஒரே சாதியாக இணைத்துக் கொண்ட சம்பவங்களும், தங்களை வரையறுக்க ஒரு புதிய பிரிவை உருவாக்கிய சம்பவங்களும் இருந்தன. பஞ்சாபில் உள்ள தலித் சமூகத்தைச் சேர்ந்த தோல் பதனிடும் தொழிலாளர்கள், இந்தியாவின் "அசல்", "ஆரியருக்கு முந்தைய" மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று தங்களை 'ஆத் தர்மிகள்' (Aad Dharmis) என்ற புதிய மத அடையாளமாக அறிவிக்கத் தீர்மானித்தனர். 1921-ல் இல்லாத இந்தப் பிரிவில், அப்போது பஞ்சாபில் இருந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கைக்கு நிகராக 4,18,789 பேர் தங்களை 'ஆத் தர்மிகள்' எனப் பதிவு செய்து கொண்டனர். "ஆத் தர்மிகள் பஞ்சாபின் மக்கள் தொகையில் சுமார் 1.5% ஆகவும், 1931-ல் பஞ்சாபில் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் மக்கள் தொகையில் பத்தில் ஒரு பங்காகவும் இருந்தனர். முக்கியமாக, பிற ஒடுக்கப்பட்ட சமூகங்களை விட ஆத் தர்மிகளிடையே எழுத்தறிவு இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது - இது இந்த மாற்றம் முக்கியமாகப் படித்த தலித்துகளிடையே ஏற்பட்ட ஒன்று என்பதைக் காட்டுகிறது" என்று 1931 அறிக்கை குறிப்பிட்டது. இதே போக்கு பிற பகுதிகளிலும் காணப்பட்டது; ஆதி திராவிடர், ஆதி ஆந்திரர், ஆதி கர்நாடகர் போன்ற பெயர்கள் உருவாகின. பிரதிநிதித்துவச் சிக்கல்கள் தங்கள் எண்ணிக்கையைப் பலப்படுத்த அல்லது புதிய சமூக அந்தஸ்தைக் கோருவதற்காகப் பல சாதிகள் ஒரே சாதியாக ஒன்றிணைந்ததற்கும் 1931 கணக்கெடுப்பு சான்றுகளை வழங்கியது. "அஹிர், கோலா, கோபி, இடையர் மற்றும் பால்காரர்களின் சில சாதிகளை 'யாதவர்' என்ற சொல்லின் கீழ் ஒருங்கிணைக்கும் முயற்சியில் கால்நடை மேய்க்கும் சாதிகளிடம் இதற்கான சிறந்த உதாரணத்தைக் காணலாம்" என்று அந்த அறிக்கை கூறியது. மேலும் "தச்சர்கள், கொல்லர்கள், பொற்கொல்லர்கள் போன்ற தொழில்களைச் செய்பவர்கள் விஸ்வகர்மா அல்லது ஜாங்கிடா போன்ற பொதுவான பெயரில் தங்களைப் பதிவு செய்ய விரும்பினர், மேலும் தங்களை இந்து மதத்தின் உயர் வர்ணங்களான பிராமணர் அல்லது ராஜ்புத் எனக் குறிப்பிட விரும்பினர்" என்றும் குறிப்பிடப்பட்டது. 1941, 1951-ம் ஆண்டு கணக்கெடுப்புகள் 1941 கணக்கெடுப்பில் சாதி விவரங்கள் சேகரிக்கப்பட்ட போதிலும், இறுதிப் பட்டியலிலிருந்து சாதி நீக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் கட்டுப்பாடுகளுக்கு இடையே கணக்கெடுப்பு ஆணையராக இருந்த எம்.டபிள்யூ.எம். யேட்ஸ், நிதி நெருக்கடி காரணமாக இந்த விவரங்களுக்கு லட்சக்கணக்கில் செலவழிப்பதில் நியாயமில்லை என்று எழுதினார். சமத்துவம் மற்றும் மதச்சார்பின்மை கொள்கைகளால் வடிவமைக்கப்பட்ட சுதந்திர இந்தியாவில், ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசு, 1951 கணக்கெடுப்பில் சாதி வாரி கணக்கெடுப்பு இருக்காது என முடிவெடுத்தது. 2011 சமூக-பொருளாதார மற்றும் சாதி வாரி கணக்கெடுப்பு யு.பி.ஏ அரசின் 2011 கணக்கெடுப்பு முயற்சியில் முன்தீர்மானிக்கப்படாத கேள்விகளால் பயன்படுத்தக்கூடிய சாதி தரவுகளை உருவாக்க முடியாமல் போனது. 1931-ல் 4,147 சாதிகள் மட்டுமே பதிவாகியிருந்த நிலையில், 2011 முடிவில் 46.7 லட்சம் வெவ்வேறான சாதிப் பெயர்கள் வந்தன. இதனால் மத்திய அரசு அந்தத் தரவை வெளியிடாமல் நிறுத்தி வைத்தது. 2023 பீகார் சாதி ஆய்வு பீகாரில் அப்போதைய முதலமைச்சர் நிதிஷ் குமார் உத்தரவிட்ட சாதி ஆய்வு குறித்து அறிந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர், இதற்காக மாநில அதிகாரிகள் ஒரு பட்டியலைத் தயார் செய்ததாகத் தெரிவித்தார். பட்டியல் இல்லையென்றால் அது நிர்வாகக் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று அவர் விளக்கினார். பீகார் சாதி ஆய்வுத் தரவுகள் வெளியான பிறகும் கூட, பட்டியல் தயாரிக்கப்பட்ட விதம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. பா.ஜ.க தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான சுஷீல் மோடி கூறுகையில், "அரசியல் கட்சிகளுடன் எந்த முறையும் விவாதிக்கப்படவில்லை; யாதவர்கள் விஷயத்தில் டஜன் கணக்கான உள்சாதிகள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன, அதே சமயம் குஷ்வாஹாகளின் உள்சாதியான டாங்கி தனியாகக் கணக்கிடப்பட்டுள்ளது" என்றார். தீர்வு என்ன? தெலங்கானாவில் சாதி தரவுகள் குறித்த அறிக்கையை எழுத நிபுணர் குழுவில் உறுப்பினராக இருந்த, இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் தலைவர் எஸ்.கே. தோரட், முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட பட்டியல் அவசியம் என்றார். "அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட எஸ்சி, எஸ்டி மற்றும் ஓ.பி.சி பட்டியல்கள் ஏற்கனவே உள்ளன. பொதுப் பிரிவில் உள்ள சாதிகளின் பட்டியல் மட்டுமே தேவை, அப்போதுதான் முழுமையான பட்டியல் கிடைக்கும்" என்று அவர் கூறினார். சாதி மற்றும் மத அடையாளங்களை விரும்பாத மக்களுக்கு "சாதி இல்லை" மற்றும் "மதம் இல்லை" என்ற பத்திகளும் இருக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். மேலும், எஸ்.சி (தீண்டாமை) மற்றும் எஸ்.டி (புவியியல் தனிமை) சந்திக்கும் வெவ்வேறு விலக்குகள் குறித்து துல்லியமான தரவுகளைப் பெற தனித்தனி வினாத்தாள்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் தோரட் பரிந்துரைத்தார். ஓ.பி.சி வகுப்பினருக்கு இத்தகைய தனி வினாத்தாள் தேவையில்லை என்றும், ஏனெனில் அவர்களின் சமூக மற்றும் கல்வி ரீதியான பின்தங்கிய நிலை கணக்கெடுப்பின் போதே பதிவாகிவிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். "எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவுகளுக்குள்ளேயே சில சாதிகள் மற்றவர்களை விட அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பதாலும், மிகவும் தேவையான குழுக்களுக்குப் பலன்களைக் கொண்டு சேர்க்க எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு இல்லாததாலும், அவர்களுக்குள் இருக்கும் படிநிலைகள் மற்றும் விலக்கல்கள் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட வேண்டும்" என்று எஸ்சி உள்ஒதுக்கீட்டிற்காகக் குரல் கொடுத்து வரும் வால்மீகி அமைப்பைச் சேர்ந்த செயல்பாட்டாளர் ஓ.பி.சுக்லா தெரிவித்தார்.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சாதி வாரி கணக்கெடுப்பு: இந்த முறை எப்படி கணக்கிட திட்டமிடுகிறது இந்தியா; முன்பு என்ன தவறு நடந்தது?
PulseNews சுருக்கம்

வரவிருக்கும் சாதி வாரி கணக்கெடுப்பில், சாதியைத் தேர்வு செய்ய 'டிராப்-டவுன் மெனு' முறையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, "முன்தீர்மானிக்கப்படாத கேள்வி" (open-ended question) என்ற முறையைப் பின்பற்ற இந்திய தலைமைப் பதிவாளர் திட்டமிட்டுள்ளார்.

இந்த அணுகுமுறை, 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சமூக-பொருளாதார மற்றும் சாதி வாரி கணக்கெடுப்பைப் போலவே, ஒரே சாதியைக் குறிக்கும் வெவ்வேறு பெயர்கள் பதிவாகி குழப்பமான ஒரு நீண்ட பட்டியலை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics