PulseNews
அரசியல்

கோயில் திருவிழாவில் ஆபாச உடை அணிந்து கரகாட்டம் ஆடினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐகோர்ட் எச்சரிக்கை

கோயில் திருவிழாக்களில் ஆபாசமாக உடை அணிந்து கரகாட்டம் ஆடினால் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கோயில் திருவிழாவில் நிபந்தனைகளுடன் கரகாட்டம் நடத்த அனுமதி அளித்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன், ஆபாச நடனம் ஆடினால் காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுத்து நீதிமன்றத்தில் ஆதாரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அரியலூர் மாவட்டம். உடையார்பாளையம், பாப்பாத்தம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி விழாக் குழுவினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “தற்போதெல்லாம் கரகாட்டம் ஆடும் பெண்களின் உடைகள் மிகவும் ஆபாசமாக உள்ளது. தமிழ்நாட்டை விட ஆந்திராவில் இன்னும் மோசமாக உள்ளது. அப்படியிருக்க கரகாட்டத்தை எப்படி அனுமதிப்பது” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு காவல்துறை தரப்பில், “கோவில் திருவிழாக்களில் ஆபாச நடனம் ஆடுவது மட்டுமல்லாமல், அரசியல் ரீதியான கோஷங்களையும் எழுப்ப வாய்ப்பு உள்ளதால் கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கவில்லை” என்று தெரிவிக்கப்பட்டது. காவல்துறை தரப்பில் முன் வைக்கப்பட்ட இந்த வாதத்துக்கு, “அரசியல் பேச உடையார்பாளையம் உள்பட நாடு முழுவதும் உரிமை உள்ளது. ஆனால், ஆபாச நடனத்துக்குத்தான் அனுமதி வழங்க முடியாது” என்று நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து, மனுதாரர் தரப்பில், தமிழ்நாட்டில் கிராமங்களில் கோவில் திருவிழாக்களில் கரகாட்டம் என்பது காலம் காலமாக கிராமங்களில் நடந்து வரும் கலை நிகழ்ச்சி. அதற்கு அனுமதி வழங்க வேண்டும். பக்கத்து கிராமத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு நிபந்தனைகளுடன் உயர் நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் அனுமதி வழங்கியுள்ளதாக சுட்டிக்காட்டி, அந்த உத்தரவு நகலும் தாக்கல் செய்யப்பட்டது. உடையார்பாளையம் விழாக்குவினரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இன்று தொடங்கவுள்ள உடையார்பாளையம் கோயில் திருவிழாவிலும் நிபந்தனையுடன் கரகாட்டத்துக்கு அனுமதி வழங்குவதாக உத்தரவிட்டார். மேலும், கரகாட்டம் ஆடும் கலைஞர்கள் ஆபாசமாக உடை அணிந்து நடனம் ஆடினால் உடையார்பாளையம் காவல் நிலையத்தினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆபாசமாக நடனம் ஆடியதற்கான ஆதாரங்கள் இருந்தால் காவல்துறை அவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில், தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து நீதிபதி உத்தரவிட்டார்.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
கோயில் திருவிழாவில் ஆபாச உடை அணிந்து கரகாட்டம் ஆடினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐகோர்ட் எச்சரிக்கை
PulseNews சுருக்கம்

கோயில் திருவிழாக்களில் ஆபாசமான உடைகளை அணிந்து கரகாட்டம் நடத்தினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பாப்பாத்தம்மன் கோயில் திருவிழாவில் கரகாட்டம் நடத்த நிபந்தனைகளுடன் நீதிபதி வி.லட்சுமிநாராயணன் அனுமதி அளித்துள்ளார்.

இந்தத் திருவிழாவில் ஆபாசமான முறையில் நடனம் ஆடினால், காவல்துறையினர் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics