PulseNews
அரசியல்

“ராஜாவாக இருந்தவர்கள் தவெகவில் கூஜாக்களாக மாறிவிட்டனர்” - ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, அ.தி.மு.க.வில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் என அடுத்தடுத்து ராஜினாமா செய்து, ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். அந்த வகையில், மதுராந்தகம் எம்.எல்.ஏ மரகதம் குமாரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ., எஸ். ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் எம்.எல்.ஏ., பி. சத்தியபாமா ஆகிய 3 பேரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். அதனை தொடர்ந்து அம்பாசமுத்திரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தார். அதன் தொடர்ச்சியாக கரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் விராலிமலை எம்.எல்.ஏவும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான சி. விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். தவெகவில் இணைந்து 1 மாதத்திற்கு மேலாகியும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்களுக்கு அக்கட்சியில் பொறுப்பு வழங்கப்படாமல் இருந்தது. குறிப்பாக அதிமுக மூத்த தலைவர்களாக இருந்த எம்.ஆர். விஜய பாஸ்கர், சி.விஜய பாஸ்கர் ஆகியோருக்கு பதவி வழங்கப்படாமல் இருந்ததால் அவர்கள் இருவரும் தவெக மீது அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவர்களுக்கு முதல்வரும், தவெக தலைவருமான விஜய் நேற்று பொறுப்பு வழங்கினார். அதன்படி, புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளர்களாக சி.விஜய பாஸ்கர், கரூர் மாவட்ட அமைப்புச் செயலாளராக எம்.ஆர். விஜய பாஸ்கர், தென்காசி மாவட்ட அமைப்புச் செயலாளராக இசக்கி சுப்பையா மற்றும் துணைப் பொதுச் செயலாளர்களாக எம்.ஆர்.விஜய பாஸ்கர், மரகதம் குமரவேல் ஆகியோர்களை முதல்வர் விஜய் அறிவித்து உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், அதிமுகவில் ராஜா போல் இருந்தவர்கள் தவெகவில் கூஜாக்களாக உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து வீடியோ வெளியிட்ட ஆர்.பி.உதயகுமார், “அதிமுகவில் ராஜாவாக வலம் வந்த விராலிமலை விஜய பாஸ்கர், கரூர் விஜய பாஸ்கர், தூத்துக்குடி கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.எம் ஆனந்தன் போன்றவர்கள் இன்றைக்கு தவெகவில் கூஜாக்களாக அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள். வெகுமானத்தை எதிர்பார்த்து போனவர்களுக்கு இப்போது தன்மானத்தை இழந்து நிற்கிறார்களோ என்கிற ஒரு மன கஷ்டம் இயற்கையாகவே ஏற்பட்டிருக்கிறது. ராஜாக்கள் கூஜாக்களாக மாறிவிட்டார்களே என்று கவலைப்படுகிற நேரத்தில் ஆளுமைமிக்க பதவியை எதிர்பார்த்து காத்திருந்து கடவுள் விஜயின் கருணை பார்வை ஒருமுறை நம் மீது பட்டுவிடாதா என்று அதன் மூலமாக நமக்கு சாப விமோசனம் கிடைத்துவிடாதா என்ற தவமாய் தவமிருந்த அதிமுக முன்னாள் போர்ப்படை தளபதிகளுக்கு இப்போது தவெகவில் என்ன பதவியை வழங்கி இருக்கிறார்கள் தெரியுமா? அந்த போர்ப்படை தளபதிகள் இனிமேல் போருக்குச் செல்லத் தேவையில்லை. போர் கருவிகளை துடைத்து சுத்தப்படுத்தி வைக்கின்ற அலங்கார பதவிகளை தாய் உள்ளத்தோடு வாரி வழங்கி இருக்கிறார் முதல்வர் விஜய்” என்று கூறினார்.

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
“ராஜாவாக இருந்தவர்கள் தவெகவில் கூஜாக்களாக மாறிவிட்டனர்” - ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!
PulseNews சுருக்கம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுகவைச் சேர்ந்த மரகதம் குமாரவேல், எஸ். ஜெயக்குமார், பி. சத்தியபாமா, இசக்கி சுப்பையா, எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் சி. விஜயபாஸ்கர் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இவர்களில் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்குக் கட்சிப் பொறுப்புகள் வழங்கப்படாததால் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தவெக தலைவர் விஜய் அவர்களுக்கு மாவட்ட அமைப்புச் செயலாளர் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை அண்மையில் வழங்கினார்.

இந்தச் சூழலில், அதிமுகவில் முக்கிய தலைவர்களாக இருந்தவர்கள் தற்போது தவெகவில் பொறுப்புக்காகக் காத்திருந்து, அலங்காரப் பதவிகளைப் பெற்று கூஜா தூக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார். அதிமுகவில் ராஜாக்களாக வலம் வந்தவர்கள், தற்போது தவெகவில் தன்மானத்தை இழந்து போர்க்கருவிகளைத் துடைத்து வைக்கும் வேலையைச் செய்யும் பொறுப்புகளையே பெற்றுள்ளனர் என்று அவர் தனது வீடியோவில் கடுமையாகச் சாடியுள்ளார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics