PulseNews
அரசியல்

ஃபைல்ஸ்களை திறந்து பார்க்க எதற்கு பயம்? ஏன் காலம் தாழ்த்துகிறீர்கள்? - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஓபன் சேலஞ்ச்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், பேரவை நடவடிக்கைகள் மற்றும் முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டிருந்த கோப்புகள் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இதற்கு ஆளுங்கட்சி தரப்பில் அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் பதிலளித்ததால் பேரவையில் விவாதம் சூடுபிடித்தது. சபாநாயகர் பேரவையை முடிந்தவரை சிறப்பாக நடத்தி வருவதாகவும், எதிர்க்கட்சியினருக்கு கேள்வி கேட்க போதிய வாய்ப்பு வழங்கப்படுவதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். அதே நேரத்தில், திமுகவை விட அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கே அதிக வாய்ப்பு வழங்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். இதற்கு விளக்கமளித்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தவெக உறுப்பினர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படுவதாக தெரிவித்தார். ‘ஃபைல்ஸ்களை திறந்து பாருங்கள்’ – எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி முதலமைச்சர் விஜய் தனது மேசையில் 3 கோப்புகள் இருப்பதாக ஏற்கனவே கூறியிருந்ததை சுட்டிக்காட்டிய உதயநிதி, அந்த கோப்புகளை திறந்து பார்த்து உண்மையான குற்றச்சாட்டுகள் மற்றும் ஆதாரங்கள் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். “ஃபைல்ஸ்களை திறந்து பார்க்க எதற்கு பயப்படுகிறீர்கள்? ஏன் காலம் தாழ்த்துகிறீர்கள்? இதையே 3 மாதங்களாக சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். ஜோதிடர் சொன்னால்தான் திறந்து பார்ப்பீர்களா? நல்ல நேரம் ஏதாவது பார்த்துக்கொண்டிருக்கிறீர்களா?” என உதயநிதி கேள்வி எழுப்பினார். ‘திமுகவை வீழ்த்தியவர் முதலமைச்சர் விஜய்’ – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உதயநிதியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுகவினர் “மிசாவையே பார்த்த இயக்கம்” என்று கூறுவதாக தெரிவித்தார். மிசா காலத்தைக் கண்ட திமுகவை தனிப்பெரும் கட்சியாக வீழ்த்தியவர் முதலமைச்சர் விஜய் என்றும் அவர் விமர்சித்தார். முதலமைச்சர் அலுவலகத்தில் கோப்புகள் இருப்பதாகவும், சட்டப்படி ஆதாரங்களுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றுதான் முதலமைச்சர் கூறியதாகவும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். மேலும், சட்டப்பேரவை நடவடிக்கைகளை நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நேரலை செய்ய திமுகவுக்கு தைரியம் இல்லை என்றும், 2021 தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். உருட்டல், மிரட்டல்களுக்கு திமுக அஞ்சாது - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மீண்டும் பேசிய உதயநிதி, திமுக ஆட்சியில் சட்டப்பேரவை நேரலை செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார். தினமும் 10 கேள்விகள் எடுத்துக்கொள்ளப்பட்டு சுமார் ஒன்றரை மணி நேரம் நேரலை செய்யப்பட்டதாக கூறினார். அவைக் குறிப்பில் இருந்து கருத்துகள் நீக்கப்பட்டாலும், அவை சமூக வலைதளங்களில் ரீல்ஸ்களாக தொடர்ந்து பரவி வருவதாகவும் தெரிவித்தார். மேலும், “கோப்புகளை திறந்து பாருங்கள்” என முதலமைச்சருக்கு மீண்டும் ஓபன் சவால் விடுத்த உதயநிதி, உண்மையான குற்றச்சாட்டுகள் மற்றும் ஆதாரங்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும் என்றும் கூறினார். “உருட்டல், மிரட்டல்களுக்கு திமுக அஞ்சாது” என்றும் உதயநிதி தெரிவித்தார். ‘முழுமையான நேரலை முதலமைச்சர் விஜய் ஆட்சியில்தான்’ – அமைச்சர் ராஜ்மோகன் இதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து கமெண்ட் அடிப்பதாகவும், ஒருமையில் பேசுவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், “திமுகவினர் இருக்கும் பக்கம் கேமராவை காட்டுங்கள்” எனக் கூறிய அவர், முழுமையான சட்டப்பேரவை நேரலை என்பது முதலமைச்சர் விஜய் ஆட்சியில்தான் வழங்கப்படுவதாக தெரிவித்தார். ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேசுவதை மட்டுமே அதிகமாக அவைக் குறிப்பில் இருந்து நீக்குவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தக் கூடாது என்றும் அவர் கூறினார்.

Polimer News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஃபைல்ஸ்களை திறந்து பார்க்க எதற்கு பயம்? ஏன் காலம் தாழ்த்துகிறீர்கள்? - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஓபன் சேலஞ்ச்
PulseNews சுருக்கம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டிருந்த கோப்புகள் மற்றும் பேரவை நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். கோப்புகளை திறந்து பார்க்க ஏன் தயக்கம் காட்டுகிறீர்கள் என்றும், எதற்காக காலதாமதம் செய்கிறீர்கள் என்றும் அவர் ஆளுங்கட்சிக்கு சவால் விடுத்தார்.

இந்த விவகாரம் குறித்து ஆளுங்கட்சி அமைச்சர்களும் சபாநாயகரும் பதிலளித்ததால் பேரவையில் விவாதம் தீவிரமடைந்தது. இருப்பினும், சபாநாயகர் பேரவையை சிறப்பாக நடத்துவதாகவும், எதிர்க்கட்சிகளுக்கு போதுமான வாய்ப்புகளை வழங்குவதாகவும் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார்.

மூலம்: Polimer NewsPolimer News-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics