தி.மு.க-வில் நிர்வாக ரீதியாக 110 மாவட்டங்கள்: முழுப் பட்டியல் அறிவித்த ஸ்டாலின்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், கட்சி ரீதியிலான மாவட்டங்களின் எண்ணிக்கை 77-லிருந்து 110-ஆக அதிகரிக்கப்பட்டு அதிகாரப்பூர்வப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து, கழகப் பலவீனங்களை ஆராய்ந்து சீரமைக்க அமைக்கப்பட்ட 'உண்மை கண்டறியும் குழு' அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், கடந்த ஆகஸ்ட் 22 அன்று தலைமைச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் தொடர்ச்சியாக, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது இம்மாற்றங்களை அறிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது; "திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பேரியக்கம்; கொள்கை, அமைப்புமுறை, செயல்பாடுகள், உடன்பிறப்புகள் என்ற நான்கு அடிப்படைகளைக் கொண்டு இயங்கும் இயக்கம். காலத்திற்கு ஏற்ப இதை நாம் புதுப்பித்தும், கூர்தீட்டியும் செழுமைப்படுத்தியும் வந்திருக்கிறோம். கழகம் தொடங்கப்பட்ட நாள் முதல் இதுவரை 15 முறை அமைப்புரீதியான தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. தற்போது 16-ஆவது கழக அமைப்புத் தேர்தலை நடத்துவதற்கும், நிர்வாக சீரமைப்புகளை மேற்கொள்வதற்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தலைமைச் செயற்குழு அளித்த அதிகாரத்தின்படி, கழக மறுசீரமைப்புக் குழுவின் பரிந்துரைகளையும் முன்னணியினரின் ஆலோசனைகளையும் ஏற்று, தமிழ்நாட்டில் உள்ள தொகுதிகள் 110 மாவட்டக் கழகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதிக மக்கள் தொகையைக் கொண்டிருப்பதன் காரணமாக, சோழிங்கநல்லூர் தொகுதி மட்டும் தனியாக ஒரு மாவட்டமாக அறிவிக்கப்படுகிறது. புதிய மாவட்டங்களின் அடிப்படையில், நகர – ஒன்றிய – பகுதி – பேரூர் – வட்ட – கிளை அமைப்புகளைப் பிரிப்பதற்கான பரிந்துரைகளை, தலைமைக் கழகப் பிரதிநிதிகளின் முன்னிலையில் மாவட்டச் செயற்குழுவைக் கூட்டி 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும். தலைநகர் சென்னையில் மக்கள் தொகை மற்றும் வாக்காளர் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, சென்னை மாநகராட்சிப் பகுதிகள் 10 உட்கட்சி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு நிர்வாகப் பணிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன” இவ்வாறு ஸ்டாலின் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். மூத்த நிர்வாகிகளின் ஆலோசனை: முன்னதாக, புதிய மாவட்டங்களுக்கு முதற்கட்டமாகப் பொறுப்பாளர்களை நியமிக்க பட்டியல் தயார் செய்யப்பட்டது. ஆனால், "இப்படியே பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டால், அவர்கள் அடுத்து வரும் உட்கட்சித் தேர்தலில் மீண்டும் வெற்றிபெறுவதற்கான பணிகளைத் தீவிரப்படுத்துவார்கள்; இதனால் உட்கட்சித் தேர்தல் ஜனநாயக ரீதியிலும் நியாயமான முறையிலும் நடப்பதில் சிக்கல் ஏற்படும்" என மூத்த நிர்வாகிகள் கழகத் தலைமைக்கு ஆலோசனை தெரிவித்தனர். இதனையடுத்து, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 110 மாவட்டங்களுக்கும் உட்கட்சித் தேர்தல் வாயிலாகவே ஜனநாயக முறைப்படி புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்

திமுகவின் நிர்வாக கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், கட்சியின் மாவட்டங்களின் எண்ணிக்கையை 77-லிருந்து 110-ஆக உயர்த்தி அதற்கான முழுமையான பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை ஆய்வு செய்த உண்மை கண்டறியும் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஆகஸ்ட் 22-ஆம் தேதி நடைபெற்ற தலைமைச் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி இந்த நிர்வாக மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.