“இலக்கு நிர்ணயம் செய்து பல்வேறு திட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன” - முதல்வர் விஜய் பேச்சு!
சட்டப்பேரவையில் விதி எண் 110இன் கீழ் பல்வேறு அறிவிப்புகளைத் தமிழக முதல்வர் விஜய் இன்று (24.08.2026) வெளியிட்டார். அதில், “அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குக் கீழ் உள்ள குடும்பங்கள் இந்த திட்டத்திற்குத் தகுதியானவர்கள் ஆவார்கள். வரும் 2027ஆம் ஆண்டு பொங்கல் திருநாள் அன்று இந்த திட்டம் தொடங்கப்பட்டு செயல்பாட்டிற்கு வரும். அதற்கான தொகை நேரடியாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இதன் மூலம் 1 கோடியே 30 லட்சத்து 14 ஆயிரத்து 104 குடும்பங்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள். இந்த திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ. 4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும் விவசாயிகளைக் காக்கும் வகையில் பரந்தூர் விமான நிலைய அமைக்கும் பணிகள் கைவிடப்படுகிறது. இதற்கான மாற்று இடம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் தற்போது உள்ள மீனம்பாக்கம் விமான நிலையம் விரிவாக்கப்படும். மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதன்படி வரும் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி முதல் வெற்றி பயணம் திட்டம் தொடங்கப்படும். இதன் மூலம் மாநகரங்களில் இயக்கப்படும் டிலக்ஸ், எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து பேருந்துகளிலும், புறநகரில் இயக்கப்படும், சாதாரண புறநகர் பேருந்து, எல்.எஸ்.எஸ் உள்ளிட்ட நகரப் பேருந்துகளில் பெண்களில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம்” எனத் தெரிவித்தார். முன்னதாக முதல்வர் விஜய் பேசுகையில், “த.வெ.க. அரசால் பெண்கள் பயன்பெறும் வகையிலும், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு, இதுவரை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம், தாய்மாமன் தங்கமோதிர திட்டம், வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டம், அண்ணனின் சீர் திட்டம் போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டு, நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், நமது அரசு மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்தை முதன்மை நோக்கமாகக் கொண்டு ‘வெற்றி தொலைநோக்கு திட்ட ஆவணம்’ (வெற்றி விஷன் டாக்குமெண்ட்) வெளியிட்டுள்ளது. அந்தத் திட்ட ஆவணத்தின் அடிப்படையில் இலக்கு நிர்ணயம் செய்து, பல்வேறு திட்டங்கள் அடுத்துவரும் முதலாம், மூன்றாம் மற்றும் ஐந்தாம் ஆண்டிற்குள் நிறைவேற்றத்தக்க திட்டங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, பெண்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுத்து இவ்வரசு நிறைவேற்றி வருகிறது” எனத் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் முதல்வர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை இன்று (24.08.2026) வெளியிட்டார். இதில், இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு பல்வேறு திட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தின் கீழ், ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் வழங்கப்படும். 2027-ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் தொடங்கப்படவுள்ள இந்தத் திட்டத்தின் நிதியுதவி, பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படும்.