PulseNews
அரசியல்

“அமித் ஷாவை விட செல்வாக்குள்ள பவர் ஸ்டார் விஜய்” – நாஞ்சில் சம்பத் பரபரப்பு பேச்சு

இந்தியாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விட அதிக செல்வாக்கு கொண்ட ‘பவர் ஸ்டார்’ தமிழக முதல்வர் விஜய்தான் என்று தமிழக வெற்றிக் கழக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். மேலும், பாஜகவுடன் திமுக நெருக்கமாகி வருவதாக விமர்சித்த அவர், தமிழகத்தை பாஜக காவிமயமாக்க முயன்றதைப் போல திமுக கருணாநிதி மயமாக்க முயன்றதாகவும் குற்றம்சாட்டினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி மைதானத்தில் தமிழக வெற்றிக் கழக அரசின் 100-வது நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகம் மூன்று ஆண்டுகளுக்குள் ஆட்சியைப் பிடித்திருப்பது இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய சாதனை எனக் குறிப்பிட்டார். “அண்ணா ஆட்சியைப் பிடிக்க 18 ஆண்டுகள் ஆனது. எம்ஜிஆர் ஆட்சியைப் பிடிக்க 5 ஆண்டுகள் ஆனது. ஆனால் மூன்று ஆண்டுகளுக்குள்ளாகவே விஜய் ஆட்சியைப் பிடித்துள்ளார். இந்தியத் துணைக்கண்டத்தில் எந்த தலைவரும் நிகழ்த்தாத வரலாற்றை விஜய் படைத்துள்ளார். ஆந்திராவில் என்டிஆர் நிகழ்த்திய அரசியல் அதிசயத்தை இன்று தமிழகத்தில் விஜய் நிகழ்த்தியுள்ளார்” என்றார். விஜய்யின் பெயரை கூறுவதற்கே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் தயக்கம் காட்டிய காலம் மாறிவிட்டதாகவும், தற்போது விஜய்யின் பெயரை குறிப்பிடாமல் அரசியல் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார். கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்ததையும், 2026 தேர்தலில் பல அமைச்சர்கள் தோல்வியடைந்ததையும் சுட்டிக்காட்டிய அவர், திமுக தொண்டர்கள் மத்தியில் கட்சியை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை குறைந்துவிட்டதாக விமர்சித்தார். தவெக ஆட்சி அமைந்த பிறகு பெண்களின் பாதுகாப்புக்காக ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக நாஞ்சில் சம்பத் கூறினார். முந்தைய ஆட்சியில் போக்சோ வழக்குகள் தொடர்பாக தொடர்ந்து செய்திகள் வெளியாகியதாக விமர்சித்த அவர், விஜய் ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பான நிர்வாகத்தின் கீழ் இருப்பதாக மகிழ்ச்சியுடன் இருப்பதாக தெரிவித்தார். காவிரி மற்றும் மேகதாது விவகாரங்களில் தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானங்களையும் அவர் குறிப்பிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த திருத்தங்களை எந்தவித காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல் முதல்வர் விஜய் ஏற்றுக்கொண்டதாகவும், அவரது பெருந்தன்மை மலையை விட பெரியது என்றும் நாஞ்சில் சம்பத் புகழாரம் சூட்டினார்.திமுக மற்றும் பாஜக இடையேயான அரசியல் நெருக்கத்தையும் நாஞ்சில் சம்பத் கடுமையாக விமர்சித்தார். “பாஜகவின் காலில் விழுவதற்கு திமுக நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறது. திமுகவுக்கு பாஜகவுடன் கள்ளக்காதல் இருக்கிறது என்பதை முதலில் அறிவித்தவர் எங்கள் தலைவர் விஜய். தொகுதி மறுவரையறையை எதிர்த்து தவெக போராடுகிறது. சட்டமன்றத்திலும் அதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுகிறது. திமுக என்ன செய்யப் போகிறது?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், “இந்தியாவில் அமித் ஷாவை விட அதிக செல்வாக்குள்ள பவர் ஸ்டார் எங்கள் தலைவர் முதல்வர் விஜய்தான்” என்றும் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார். தமிழகத்தை பாஜக காவிமயமாக்க முயன்றதாக விமர்சித்த அவர், அதேபோல் திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்டதாகவும், அதன் மூலம் தமிழகத்தை கருணாநிதி மயமாக்க முயன்றதாகவும் குற்றம்சாட்டினார். தவெக ஆட்சியில் திட்டங்களுக்கு தலைவர்களின் பெயர்களை வைப்பதற்குப் பதிலாக பொதுவான பெயர்கள் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார். இறுதியாக, சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதில் பிரதமர் நரேந்திர மோடியின் குஜராத்தை விட தமிழகம் தற்போது முன்னேறி வருவதாகவும் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார். அவரது பேச்சு தவெக மற்றும் திமுக இடையேயான அரசியல் மோதலை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

Seithipunal13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
“அமித் ஷாவை விட செல்வாக்குள்ள பவர் ஸ்டார் விஜய்” – நாஞ்சில் சம்பத் பரபரப்பு பேச்சு
PulseNews சுருக்கம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விட அதிக செல்வாக்கு மிக்கவராக தமிழக முதல்வர் விஜய் திகழ்கிறார் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி மைதானத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 100-வது நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசினார்.

இந்த நிகழ்வில் பேசிய நாஞ்சில் சம்பத், திமுக மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். பாஜகவுடன் திமுக நெருக்கமாகி வருவதாகவும், பாஜக தமிழகத்தைக் காவிமயமாக்க முயன்றது போல திமுக தமிழகத்தைக் கருணாநிதி மயமாக்க முயல்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மூலம்: SeithipunalSeithipunal-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics